குட்டி ரேவதி
குட்டி ரேவதி (பிறப்பு: 1974) கவிஞர், எழுத்தாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர், சித்த மருத்துவர்.
வாழ்க்கைக் குறிப்பு
குட்டி ரேவதி திருநெல்வேலியில் சுயம்புலிங்கத்திற்கு 1974-இல் பிறந்தார். பள்ளிப்படிப்பிற்குப் பிறகு சித்த மருத்துவத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள மெட்ராஸ் வளர்ச்சிசார் கல்வி நிறுவனத்தில் மருத்துவம் சார்ந்த மானிடவியலில் தனது முனைவர் பட்டத்திற்கான ஆய்வுப் பட்டம் பெற்றார். சித்த மருத்துவர்.
கணவர் ஆவணப்பட இயக்குனர் ஆர். ஆர். சீனிவாசன் ('காஞ்சனை' சீனிவாசன்) .
இலக்கிய வாழ்க்கை
குட்டி ரேவதி 12 கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். குட்டி ரேவதியின் ஒட்டுமொத்தக் கவிதைகளின் தொகுதி 'எழுத்து பிரசுரம்’ வெளியீடாக வந்திருக்கிறது. கவிதைகளைத் தொடர்ந்து 'நிறைய அறைகள் உள்ள வீடு’, 'விரல்கள்’, 'மீமொழி’, 'இயக்கம்’ ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். 'அழியாச் சொல்’ என்ற நாவலும் வெளியாகியுள்ளது. ஆதர்ச கவிஞர்களாக பிரமிள், தேவதேவனைக் குறிப்பிடுகிறார். 'பனிக்குடம்’ என்ற சிற்றிதழைச் சிலகாலம் நடத்தினார். இந்த காலாண்டு இலக்கிய பத்திரிக்கையின் தொகுப்பாசிரியர் ஆவார். பனிக்குடம் என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இதில் பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளே வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
இலக்கிய இடம்
'நிறைய அறைகள் உள்ள வீடு' கவிதைத் தொனியிலேயே எழுதப்பட்ட சிறுகதைத் தொகுதி எனலாம். உருவகமாகவும் நேரிடையாகவும் உறவுகளைப் பற்றிப் பேசும் சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுதி உறவுகளின் கட்டிப்போடும் தன்மையையும் அதை மீற எப்போதும் பெண்களும் ஆண்களும் முயல்வதையும் காடும் கடலும் சூழ்ந்த கதை உலகில் இருந்து சொல்கிறது’ என குட்டி ரேவதியின் ’நிறைய அறைகள் உள்ள வீடு’ சிறுகதைத் தொகுப்பை அம்பை மதிப்பிடுகிறார்.
"பெண்களின் புறக்கணிக்கப்பட்ட வெளியை உள்முகமாகப் பேசுபவை குட்டிரேவதியின் தொடக்ககாலச் சிறுகதைகள். பெண்ணுடலும் ஆணுடலும் இணையும்போது குறுக்கிடும் தொன்ம நெருக்கடிகள் இவர் கதைகளில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. தொடக்கத்தில் குட்டிரேவதி எழுதிய ஒவ்வொரு கதையையும் வெவ்வேறு உருவத்தில் காமம்தான் இயக்கியிருக்கின்றது. பிற்காலத்தில் புறப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறுகதைகளை எழுதியிருக்கிறார்." என பேராசிரியர் சுப்பிரமணி இரமேஷ் மதிப்பிடுகிறார்.
திரைப்படம், ஆவணப்படம்
’சிறகு’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இருளர்களின் வாழ்வியல், கமலாதாஸ், ஆகிய ஆவணப்படங்களை இயக்கினார். ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' நூல் ஏ.ஆர்.ரஹ்மான் ஃபவுண்டேஷன் மூலம் தயாரிக்கப்பட்டு வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் நியூயார்க் தமிழ் விழாவில் வெளியிடப்பட்டு, திரையிடப்பட்டது.
விருதுகள்
- இந்தியா டுடே என்ற பத்திரிக்கையால் வழங்கப்பட்ட எதிர்கால இலக்கியத்தின் முகங்கள் (சிகரம் 15) என்ற விருதினைப் பெற்றார்.
- சாகித்ய அகாதெமி அமைப்பினரால் 2005-ல் இந்தியாவில் உள்ள இலக்கியவாதிகளை சந்திப்பதற்கான உதவித்தொகையைப் பெற்றார்.
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000)
- முலைகள் (2002)
- தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003)
- உடலின் கதவு (2006)
- யானுமிட்ட தீ (2010)
- மாமத யானை (2011)
- இடிந்த கரை (2012)
- அகவன் மகள் (2013)
- காலவேக மதயானை (2016)
- அகமுகம் (2018)
சிறுகதை
- நிறைய அறைகள் உள்ள வீடு (2013)
- விரல்கள்
- மீமொழி
- இயக்கம்
கட்டுரை
- காலத்தைச் செரிக்கும் வித்தை (2009)
- நிழல் வலைக்கண்ணிகள் (2011)
- ஆண்களும் மையப்புனைவைச் சிதைத்தபிரதிகள் (2011)
ஆவணப்படம்
இணைப்புகள்
- குட்டி ரேவதி படைப்புகள்
- குட்டி ரேவதி கவிதைகள்: ஆதிக்கத்தின் வேரறுக்கும் எழுத்து: பிருந்தா சீனிவாசன்: hindutamil
- கவிஞர் குட்டி ரேவதி: நேர்காணல்: சக்தி தமிழ்ச்செல்வன்
- குட்டி ரேவதி: நேர்காணல்: ஆசை
உசாத்துணை
- குட்டி ரேவதி:biography: tamil.filmibeat
- இந்திய இசைகள் தமிழிசையில் இருந்து பிறந்தவை: கருணாமிர்த சாகரம் குறித்த குட்டி ரேவதியின் ஆவணப்படம்: vikatan
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.