being created

சுவாமிநாதம்

From Tamil Wiki
Revision as of 07:03, 5 January 2023 by Jayashree (talk | contribs)

சுவாமிநாதம்(சாமிநாதம்) (பொ.யு. 19-ஆம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல். ஐந்திலக்கணங்களையும் விளக்கும் நூல். நன்னூலை முதல்நூலாகக் கொண்டது. சுவாமிக் கவிராயரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

சுவாமிநாதத்தை இயற்றிய சுவாமிக் கவிராயர் திருநெல்வேலிக்கு அருகிலுள்ள கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்.

பதிப்பு

1924-ஆம் ஆண்டு திரு. இ. கோவிந்தசாமி பிள்ளை சுவாமிநாதத்தின் சில பகுதிகளை (பாயிரம் 14 எழுத்தாக்க மரபு 14 பதமரபு 6) கரந்தைத் தமிழ்ச் சங்க வெளியீடான தமிழ்ப்பொழிலில் வெளியிட்டார். நூலின் முன்னுரையின்படி ஏட்டுப்பிரதி திருநெல்வேலி நீலமேகம்பிள்ளை என்பவரிடமிருந்து கிடைத்ததாகவும் சில இடங்களில் பூச்சிகளால் அரிக்கப்பட்டதால் எழுத்துகளும் காணப்படவில்லை. கேரளப் பல்கலைக்கழக கீழைக்கலை ஏட்டுப்பிரதி நூல் நிலையத்தில் (oriental manuscript library) எழுத்தாக்க மரபிற்கான விருத்தி உரை ஓர் பிரதி இருந்தது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் உயராய்வுத் துறையைச் சேர்ந்த செ.வை. சண்முகம் 1972-ல் கல்வியியல் உயராய்வுக்காக லண்டனில் உள்ள ரெட்டிங் பல்கலைக்கழகத்திற்குச் சென்றபோது லண்டனில் உள்ள பிரிட்டிஷ் பொருட்காட்சி சாலைக் கீழைக் கலைத்துறை நூல் நிலையத்தில் சுவாமிநாதம் முழுமையும் கையெழுத்துப் பிரதியாக இருப்பதைக் கண்டு அதன் புகைப்படப் பிரதி ஒன்றுடன் நாடு திரும்பி, அப்பிரதியுடன் மற்ற இரு பிரதிகளையும் ஒப்பிட்டுஉரையெழுதிப் பதிப்பித்தார். அண்ணமலைப் பல்கலைக்கழக மொழியியல் உயராய்வுத் துறை இந்நூலை வெளியிட்டது.

நூல் அமைப்பு

சுவாமிநாதம் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம், யாப்பதிகாரம், அணியதிகாரம் என்னும் ஐந்து பெரும் பிரிவுகளாக (அதிகாரங்கள்) அமைந்துள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் மூன்று மரபுகள் என்னும் உட்பிரிவுகளைக் கொண்டது

  • எழுத்ததிகாரம்
    • எழுத்தாக்க மரபு
    • பத மரபு
    • புணர்ச்சி மரபு
  • சொல்லதிகாரம்
    • பெயர் மரபு
    • வினை மரபு
    • எச்ச மரபு
  • பொருளதிகாரம்
    • அகத்திணை மரபு
    • கைக்கோண் மரபு
    • புறத்திணை மரபு
  • யாப்பதிகாரம்
    • உறுப்பு மரபு
    • பாவின மரபு
    • பிரபந்த மரபு
  • அணியதிகாரம்
    • பொருளணி மரபு
    • சொல்லணி மரபு
    • அமைதி மரபு

சுவாமிநாதத்தில் ஒரு விநாயகர் வணக்க வெண்பா, எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரியப்பாவால் ஆன பொதுப் பாயிரமும் சிறப்புப் பாயிரமுமாகப் 11 பாயிரங்கள் உள்ளன. ஐந்து அதிகாரங்களிலுமாக மொத்தம் 201 பாடல்கள் உள்ளன.

காப்பு (விநாயகர் துதி)

பூமகளும் பாமகளும் போற்றுமே நாமகளுங்

கோமகளுங் கொண்டார்கைக் குஞ்சரமே - மாமகிமைத்

தொன்னூற்குள் உண்டாய்த் தொகுத்த இலக்கணமாம்

இந்நூற்குக் காப்பாகு மே.

சிறப்புப் பாயிரம்
எழுத்ததிகாரம்

எழுத்ததிகாரம் எழுத்தாக்கமரபு, பதமரபு, புணர்ச்சி மரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. பெயர், எண், முறை, பிறப்பு, வடிவம், அளவு, முதனிலை, இறுதி நிலை, இடைநிலை, (மெய்ம்மயக்கம்), போலி, பதம், புணர்ச்சி என்று பன்னிரண்டாக வகைப்படுத்தி அவற்றில் முதல் பத்து வகையையும் எழுத்தாக்க மரபு பேசுகின்றது. பதவியல் என்பது பகுபதம், பகாப்பதம் என்பவற்றை விளக்கி வினைப்பகுதி, விகுதிகள், இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் ஆகியவற்றைப் பேசுகிறது. புணர்ச்சியின் பொது இலக்கணத்தைக் கூறி முப்பத்தொரு புணர்ச்சி விதிகளையும் தொகுத்து விளக்கிவிட்டு இறுதியில் வடமொழி - தமிழ் ஆகிய இரு மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை விளக்கி தமிழாக்க விதிகளையும் புணர்ச்சி மரபு பேசுகிறது.

சொல்லதிகாரம்

சொல்லதிகாரம் பெயர்மரபு, வினை மரபு, எச்சமரபு என்ற மூன்று பிரிவுகளை உடையது. சொல்லின் பொதுஇலக்கணமும் சொற்களின் பல்வேறு வகைப் பாகுபாடும், வேற்றுமையின் வகையும் விரியும் பெயர் மரபு உணர்த்துகிறது. வினையின் பொது விளக்கமும், வினைப்பாகுபாடும் கூறி வினைமுற்று விகுதிகளையும், எச்சங்களையும் வினை மரபு விளக்குகின்றது. இடைச்சொல்லின் இலக்கணம், சில இடைச்சொற்களின் பொருள்கள், உரிச்சொல்லின் இலக்கணம், வழு வழு அமைதி, பொருள்கோள்கள் ஆகியவற்றை எச்சமரபு உணர்த்துகிறது.

பொருளதிகாரம்

அகத்திணைமரபு, கைக்கோண்மரபு, புறத்திணைமரபு என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது பொருள் அதிகாரம்.

அகத்திணை வகைகள், அவற்றிற்குரிய முதல், கரு, உரிப் பொருள்கள், ஐந்திணையின் வகை, அவற்றின் விளக்கம் ஆகியவற்றை அகத்திணை மரபு பேசுகின்றது. களவியல், வரைவியல், கற்பியல் என்று மூன்றிற்குரிய கிளவிகளையும், அகப்பாட்டு உறுப்புக்களின் தொகை வகைகளையும் உணர்த்துகிறது கைக்கோண் மரபு. புறத்திணை ஏழையும், பொதுவியலையும் புறத்திணை மரபு பேசுகிறது.

யாப்பதிகாரம்

யாப்பதிகாரம் உறுப்புமரபு, பாவினமரபு, பிரபந்தமரபு என்று மூன்று வகையாக உள்ளது. யாப்பு உறுப்புகளின் வகையும் அவற்றின் விரியும் உறுப்புமரபு உணர்த்துகின்றது. நான்கு வகைப் பாக்கள், அவற்றின் இனம் ஆகிய இரண்டையும் பாவினமரபு பேசுகிறது. செய்யுளின் வகையும் பிரபந்தங்களின் இலக்கணமும் பொருத்தத்தின் வகையும் அவற்றின் இலக்கணமும் பாகமும் உணர்த்துகின்றது பிரபந்த மரபு.

அணியதிகாரம்

அணியதிகாரம் பொருளணிமரபு, சொல்லணிமரபு, அமைதிமரபு என்று மூன்று பிரிவுகளை உடையது. பொருளணி மரபு முப்பத்தொரு பொருளணிகளின் இலக்கணத்தை விளக்குகின்றது. சொல்லணி மரபு; மடக்கு அணியையும் இருபத்து மூன்று சித்திர கவிகளையும் உணர்த்துகின்றது. அமைதி மரபு வழு அமைதியை விளக்குகின்றது.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.