வள்ளிக்கண்ணு நாகராஜன்
வள்ளிக்கண்ணு நாகராஜன் (ரோஜா வள்ளிக்கண்ணு நாகராஜன்; வள்ளிக்கண்ணு நாகராசன்) (பிப்ரவரி 03, 1969) எழுத்தாளர், இதழாளர். 'நகரத்தார் திருமகள்' இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
வாழ்க்கைக் குறிப்பு
வள்ளிக்கண்ணு நாகராஜன், பிப்ரவரி 03, 1969 அன்று, தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில், ரோஜா முத்தையா செட்டியார் - சிவகாமி ஆச்சி இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்விக்குப் பின் ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். நூலக அறிவியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றார். கணவர். நாகராஜன்.
இதழியல்
வள்ளிக்கண்ணு நாகராஜன், தனது கணவர் நாகராஜனின் உறுதுணையுடன், 2014-ல், 'நகரத்தார் திருமகள்' எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார். அவ்விதழ் நகரத்தார் சமூகத்தின் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் மற்றும் இலக்கிய நிகழ்வுகளை வெளியிட்டது. நகரத்தார் சமூக மக்களின் திறன்களைக் கண்டறிந்து ஊக்குவித்தது.
இலக்கிய வாழ்க்கை
வள்ளிக்கண்ணு நாகராஜன், 'நகரத்தார் திருமகள்' இதழில் தலையங்கங்களையும், கட்டுரைகளையும் எழுதினார். 'நமது செட்டிநாடு' இதழிலும் சில கட்டுரைகளை எழுதினார்.
மேடையுரை
வள்ளிக்கண்ணு நாகராஜன், காரைக்குடி, சிவகங்கை, கோட்டையூர் போன்ற செட்டிநாட்டுப் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு ஆன்மீக, இலக்கிய, சமூக நிகழ்வுகளில் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்
அமைப்புச் செயல்பாடுகள்
வள்ளிக்கண்ணு நாகராஜன், 2007-ல் நிகழ்ந்த, சூரக்குடிக் கோவில் குடமுழுக்கு விழாவின் போது விழாக் குழுவின் மகளிர் செயலராகப் பணியாற்றினார். சூரக்குடிக் கோவிலில் 63 நாயன்மார்களின் சிலைநிறுவும் பணியில் பங்காற்றினார். ரோஜா முத்தையா நூலகம் அமைப்பாளரான தந்தை ரோஜா முத்தையாச் செட்டியார் மறைவுக்குப் பின் அந்நூலகத்தைப் பாதுகாத்தார். அதனைச் சிகாகோ பல்கலைக் கழகக்திடம் விற்பனை செய்யும் பணிகளை ஒருங்கிணைத்தார். காரைக்குடி நகரத்தார் மகளிர் சங்கத் தலைவியாகச் செயலாற்றினார். ஆர்வமுள்ள மகளிரைப் பல துறைகளில் ஊக்குவித்தார். பல சமூக, இலக்கிய நிகழ்வுகளை முன்னெடுத்தார். மகளிரைக் கொண்டு பல கலை, சமூக, இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்து நடத்தினார்.
மதிப்பீடு
வள்ளிக்கண்ணு நாகராஜன் நகரத்தார் இனம் சார்ந்த பெண் இதழாளர்களான மணிமேகலை தமிழ்வாணன், எம்.எஸ்.ஸ்ரீலக்ஷ்மி வரிசையில் ஒருவராக அறியப்படுகிறார். நகரத்தார் சமூகம் சார்பான பல்வேறு கலை, இலக்கிய, சமூக நிகழ்வுகளை முன்னெடுத்தார். எழுத்தாளர், இதழாளர், இலக்கியச் சொற்பொழிவாளர் ஆகிய நிலைகளில் மதிப்பிடப்படுகிறார்.
உசாத்துணை
- நகரத்தார் கலைக் களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணையாசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், மறுபதிப்பு: 2002.
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.