கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கண்ணம்பாளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல்கள் மூன்று. நற்றிணையில் ஒரு பாடலும் அகநானூறில் இருபாடல்களும் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
கருவூர் கண்ணம்பாளனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கருவூரை சார்ந்தவர். கண்ணம்பாளனார் என்னும் இயற்பெயர் கொண்டவர்.
இலக்கிய வாழ்க்கை
கருவூர் கண்ணம்பாளனார் பாடிய பாடல்கள் நற்றிணையில் 148-வது பாடலாகவும், அகநானூறில் 180 மற்றும் 263-ம் பாடல்களாகவும் இடம்பெற்றுள்ளன. நற்றிணை 148-ம் பாடல் தலைவனை பிரிந்து வாடும் தலைவிக்கு, தலைவர் செல்லும் வழியின் கடுமையை தோழி எடுத்துரைப்பதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 180-ம் பாடல் தலைவனுடன் தலைவியைச் சேர்த்து பேசப்படும் ஊராரின் அலர் பேச்சுக்கு தோழி தலைவியை குற்றம் கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்துள்ளது. அகநானூறு 263-ம் பாடல் தலைவனுடன் சென்று விட்ட மகளை எண்ணி, அவளது தாய் வருந்தி கூறுவதாக பாலைத் திணையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
நற்றிணை - 148
- ஆடவர் பொருளீட்டச் செல்லும் வழியில் இருக்கும் குளத்தில் நீர் இருக்காது. சிவந்த அடிமரம் கொண்ட மரா மரத்துக்குப் பின்னால் ஒளிந்துகொண்டிருக்கும் மறவர் அம்பு எய்து தாக்குவர். அதனைக் கண்டு அஞ்சாமல் செல்லவேண்டும்.
- அக்காட்டு பாதையில் காணப்படும் கல் குகையில் பெண்புலி குட்டிப் போட்டிருக்கும். அதன் பசியைப் போக்க ஆண்புலி பெரும் மத்தகமும் தந்தமும் கொண்ட யானையைத் தாக்கும்.
- ஆடவர் தாம் செல்லும் வழியின் கடுமையை எண்ணி, இல்லாளின் அழகும் உடல் நலமும் அதனை தாங்காது என்று முடிவெடுத்து மனைவியை வீட்டில் விட்டு தாம் மட்டும் பொருளீட்ட செல்வர்.
அகநானூறு - 180
- புலால் நாற்றம் அடிக்கும் உப்பங்கழியில் இரை தேடி உண்ட பறவை ஒன்று முள் இருக்கும் தாழை மடலிலும், ஞாழல் மரத்திலும், அடியில் முட்புதர் கொண்டு நம் தோட்டத்தில் இருந்த புன்னை மரத்திலும் மாறி மாறி அமர்ந்தது. அந்தப் பறவையின் உடலில் பூந்தாதுகள் உதிர்ந்து கிடந்தன.
- நெய்தல் நிலத்து இளம்பெண்கள் கடற்கரை சோலை மணல் மேட்டில் ஏறி பூப்பறித்து விளையாடுவர். அப்பெண்களில் தான் மணங்கொள்ள விரும்பும் பெண்ணின் கூந்தலில் குவளை மலர் அரும்புகளால் தொடுக்கப்பட்ட மாலையை அவள் விரும்பாத போதும் கூந்தலிலே சூட்டுவர். அப்பெண்ணின் இளமுலையை கூர்ந்து நோக்கிவிட்டு தமது குதிரை தேரில் ஏறி விரைந்து அகல்வர். இதை ஊரார் அலர் பேச துவங்குவர். இவற்றை நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது என்று தலைவியிடம் தோழி சொல்கிறாள்.
அகநானூறு - 263
- உலகம் தொழ கடல் அலைகள் மோதி ஆர்ப்பரிக்க ஒவ்வொரு நாளும் சூரியன் தோன்றுகிறது. சூரிய வெப்பத்தால் குளம் வற்றிப்போய் பசுமை இல்லாமல் நிலம் வளம் குன்றும்.
- தலைவனுடன் மகள் உடன்போகிய வழி பல பாதைகளாக பிரிந்து செல்வோரை வழி தவற செய்வது. அப்பாதைகளில் எப்போதும் வழிப்போக்கர்கள் வருவார்கள் என்று ஆள் மாற்றி ஆள் காவல் காப்பார்கள் கொள்ளைக்கார கள்வர்கள். அவர்கள் யா மரத்தின் மீது ஏறி வழிப்போக்கர்கள் வருவார்களா என்று வேவு பார்ப்பர்.
- என் மகள் கல்நெஞ்சக்காரனான தலைவனுடன் செல்வது தெரிந்திருந்தால் கோதை அரசனின் வஞ்சி நகர் போல வழங்கும் என் வீடு பொலிவு பெறும்படி நானே மணம் செய்து வைத்திருப்பேன் என்று தாய் வருந்துகிறாள்.
பாடல் நடை
நற்றிணை - 148
- திணை: பாலை
- கூற்று:பிரிவுணர்ந்து வேறுபட்ட தலைவியைத் தோழி வற்புறீஇயது.
வண்ணம் நோக்கியும், மென் மொழி கூறியும்,
'நீ அவண் வருதல் ஆற்றாய்' எனத் தாம்
தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர், இன்றே,
நெடுங் கயம் புரிந்த நீர் இல் நீள் இடை,
செங் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி,
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது,
கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின்
இன் புனிற்று இடும்பை தீர, சினம் சிறந்து,
செங் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும்
அருஞ் சுரம் இறப்ப என்ப;
வருந்தேன்-தோழி!-வாய்க்க, அவர் செலவே!
அகநானூறு - 263
- திணை: பாலை
- கூற்று: மகட் போக்கிய தாய் சொல்லியது.
தயங்கு திரைப் பெருங் கடல், உலகு தொழத் தோன்றி,
வயங்கு கதிர் விரிந்த, உரு கெழு மண்டிலம்
கயம் கண் வறப்பப் பாஅய், நல் நிலம்
பயம் கெடத் திருகிய பைது அறு காலை,
வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு,
ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார்,
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி,
நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அருஞ் சுரம்
கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு,
அவள் துணிவு அறிந்தனென்ஆயின், அன்னோ!
ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும்
வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க,
இனிதினின் புணர்க்குவென் மன்னோ துனி இன்று
திரு நுதல் பொலிந்த என் பேதை
வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே!
உசாத்துணை
- சங்க இலக்கிய பொருட்களஞ்சியம் - 2:தமிழ் பல்கலைகழகம்
- நற்றிணை - 148:Tamilvu
- அகநானூறு - 180:Tamilvu
- அகநானூறு - 263:Tamilvu
✅Finalised Page