வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (ஏப்ரல் 7, 1770 - ஏப்ரல் 23, 1850) ஆங்கிலக் கவிஞர். ஆங்கிலத்தில் கற்பனாவாதம் (Romanticism), இயற்கைவாதம் (Naturalism) என்னும் இரண்டு இயக்கங்களைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். இங்கிலாந்தின் மதிப்புமிக்க அறிவுஜீவி. எளிய மொழியை கவிதையில் பயன்படுத்தினார். ஆன்மிகம், அறிவாய்வு மீது ஆர்வம் கொண்டவர். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவைப் பற்றிய அக்கறை கொண்டவர். இயற்கை வழியாக உன்னதத்தை கவிதையில் கையாண்டார். இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இறக்கும்வரை இருந்தார்.
பார்க்க: உன்னதம்
வாழ்க்கைக் குறிப்பு
பிறப்பு
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஐக்கிய ராஜ்ஜியத்தின்(British Kingdom) வடமேற்கு இங்கிலாந்துப் பகுதியில் உள்ள கம்பிரியா (Cumbria) நாட்டின் காக்கர்மெளத் (Cockermouth) என்ற இடத்தில் ஜான் வேர்ட்ஸ்வொர்த் (John Wordsworth), ஆன்குக்சன் (Ann Cookson) இணையருக்கு ஏப்ரல் 7, 1770-ல் இரண்டாவது மகவாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நான்குபேர். இவர் பிறந்த இடம் தற்போது வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸ் (Wordsworth House) என்று அழைக்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் வில்லியம் வோர்ட்ஸ்வோர்த்துடன் மிகவும் நெருக்கமான உறவில் இருந்த தங்கை டோரத்தி வோர்ட்ஸ்வோர்த் ஓர் கவிஞர். மூத்த சகோதோரர் ரிச்சர்ட். ஜான் வேர்ட்ஸ்வொர்த், கிரிஸ்டோபர் ஆகியோர் தம்பிகள். தந்தை ஜேம்ஸ் லோத்தர் என்ற நிலவுடைமையாளருக்கு சட்ட ஆலோசகராக இருந்தார். பெரும்பாலும் குடும்பத்தை விட்டு தூரத்தில் விலகி இருந்தார். ஆனாலும் வேர்ட்ஸ்வொர்த்துக்கு மில்டன், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர் ஆகிய கவிஞர்களை அறிமுகப்படுத்தினார். 1778-ல் தாய் காலமானார். 1783-ல் தந்தை இறந்தார்.
கல்வி
வேர்ட்ஸ்வொர்த் ஆரம்பத்தில் காக்கர்மெளத்தில் உள்ள சிறிய பள்ளியில் பயின்றார். பின்னர் பென்ரித் பகுதியிலுள்ள உயர்குடிப் பிள்ளைகள் பயிலும் பள்ளியில் படித்தார். அங்கு ஆன் பிர்க்கெட் (Ann Birkett) அவரின் ஆசிரியராக இருந்தார். தன் பின்னாள் மனைவியான மேரி ஹட்சின்சன்னை (Mary Hutchinson) இங்கு தான் சந்தித்தார். 1778-ல் லான்கஷேரில் (Lancashire) உள்ள ஹாக்ஷெட் கிராமர் பள்ளியில் (Hawkshead Grammar School) சேர்ந்தார். இக்காலகட்டத்தில் தங்கை டோரத்தி யோர்க்ஷேரில் இருந்தார். ஒன்பது வருடங்கள் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தங்கையை சந்திக்கவில்லை.
1787-ல் கேம்பிரிட்ஜில் உள்ள செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியில் பயின்றார். 1791-ல் இளங்கலைப்பட்டம் பெற்றார்.
தனிவாழ்க்கை
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 1791-ல் பிரான்ஸ் சுற்றுப்பயணத்தின் போது ஆன்னிட் வேலன் (Annette Vallon) என்பவருடன் காதலில் விழுந்தார். 1792-ல் கரோலின் என்ற மகள் பிறந்தார். பொருளாதார சூழ்நிலை காரணமாக தனியாக இங்கிலாந்து வந்தார். சில காலம் பிரஞ்சு புரட்சியினால் ஏற்பட்ட அசாதரண சூழ்நிலை காரணமாக மகளையும் ஆன்னிட்டையும் சந்திக்க முடியாமல் இருந்தார். மீண்டும் 1802-ல் ஆன்னிட்டையும் ஒன்பது வயது மகளான கரோலினையும் சந்தித்தார். அவருடன் தான் திருமணம் செய்து கொள்ளப்போகும் மேரி ஹட்சின்சன்னைப் பற்றி தெரிவித்தார். வேர்ட்ஸ்வொர்த் ஆன்னிட்டை திருமணம் செய்து கொள்ளவில்லை எனினும் இறுதி வரை அவருக்கும் கரோலின்னுக்கும் பொருளாதார ரீதியில் உதவினார்.
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் 1802-ல் மேரி ஹட்சின்சன்னை(Mary Hutchinson) மணந்தார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். ஜான் வேர்ட்ஸ்வொர்த், டோரா வேர்ட்ஸ்வொர்த், தாமஸ் வேர்ட்ஸ்வொர்த், கேத்தரீன் வேர்ட்ஸ்வொர்த், வில்லியம் "வில்லி" வேர்ட்ஸ்வொர்த். 1812-ல் அடுத்தடுத்து ஆறு வயதான தாமஸும், மூன்று வயதான கேத்தரீனும் இறந்தனர்.
பயணி
வேர்ட்ஸ்வொர்த் மலையேற்றத்தில் ஈடுபாடு கொண்டவர். 'walking tours' என்ற நடைப்பயணங்கள் ஐரோப்பாவில் பிரபலமாக இருந்த காலகட்டம் அது. 1790-ல் தன் கல்லூரி நாட்களில் ஆல்ப்ஸ் மலையில் ஏறினார். பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, இத்தாலி ஆகிய இடங்களில் விரிவான பயணம் செய்தார். பயணக்கட்டுரைகள் எழுதினார்.
இலக்கிய வாழ்க்கை
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்-ன் முதல் சொனெட்(sonnet) The European Magazine பத்திரிக்கையில் 1787-ல் வெளியானது. "An Evening Walk and Descriptive Sketches" என்ற முதல் கவிதைத்தொகுப்பு 1793-ல் வெளியானது. 1795-ல் ரெய்ஸ்லி கல்வெர்ட் என்ற புரவலரின் உதவியால் கவிஞராக மட்டுமே அவரால் தொடர்ந்து செயல்பட முடிந்தது.
1795 சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் (Samuel Taylor Coleridge) என்ற கவிஞரை சந்தித்தார். அவருடன் இணைந்து எழுதிய 'Lyrical Ballads, with a Few Other Poems' என்ற கவிதைத் தொகுதி 1798-ல் வெளியானது. இந்தத் தொகுதியில் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இது ஆங்கில ரொமாண்டிக் காலகட்டத்தின் தொடக்கமாகக் கருதப்பட்டது. இதன் இரண்டாம் பதிப்பு 1800-ல் வெளியானது. இந்தத் தொகுதியில் வேர்ட்ஸ்வொர்த்-ன் பெயர் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. 1798-99 காலகட்டத்தில் "The Prelude" என்ற தன்வரலாற்றுத்தன்மை கொண்ட நீள் கவிதையை எழுதினார். இதில் குழந்தைப் பருவம் முதல் முதிர்ச்சியடையும் காலகட்டம் வரை மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பு பற்றி எழுதினார். 1807-ல் "Ode: Intimations of Immortality from Recollections of Early Childhood" என்ற கவிதைத் தொகுப்பை இரு தொகுதிகளாக வெளியிட்டார். இத்தொகுதி வெளிவருவதற்கு முன்பு வரை தன் 'Lyrical Ballads" என்ற தொகுதிக்காக மட்டுமே அறியப்பட்டிருந்தார்.
வேர்ட்ஸ்வொர்த் கடிதங்கள், பயணக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள் எழுதினார். அரசியல் உரைநடை நூல் "Two Addresses to the Freeholders of Westmoreland" 1818-ல் எழுதப்பட்டது. எட்மண்ட் புர்கே(Edmund Burke)வின் அரசியல் தத்துவத்தை ஏற்றுக் கொண்டார். தன் இறுதிக் காலத்தில் மக்களாட்சி மீது நம்பிக்கை கொண்டிருந்தார். அவரது இறப்பிற்குப் பின் மனைவி மேரி ஹட்சின்சன் 'The Prelude'-ஐப் பதிப்பித்து வெளியிட்டார். பதிப்பிக்கப்பட்ட காலத்தில் கவனத்தை ஈர்க்கவில்லை எனினும் அது பின்னாளில் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்-ன் தலைசிறந்த படைப்பாகக் கருதப்பட்டது.
சிறப்பு
- 1843 முதல் இறக்கும்(1850) வரை இங்கிலாந்தின் கவிஞராக (poet laureate of England) அடையாளப்படுத்தப்பட்டார்.
- 1923-ல் மார்கிரெட் லூசியா வுட் தான் எழுதிய A Poet's Youth' என்ற நாவலில் இளம் வேர்ட்ஸ்வொர்த் பற்றிய சித்திரத்தை அளித்தார்.
- இவரின் பெரும்பாலான கவிதைகள் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களால் இசைக்கோர்வைக்கு பயன்படுத்தப்பட்டன.
- வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்-ன் 250-வது நூற்றாண்டு நினைவாக பிரிடிஷ் ராயல் மெயில் அஞ்சல்தலை வெளியிட்டது.
திரைப்படம்
- கென் ரஸல் இயற்றிய 'William and Dorothy' என்ற படம் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் டோரத்தியின் உறவு பற்றியது.
- ஜூலியன் டெம்பில் இயற்றிய 'Pandaemonium' என்ற திரைப்படத்தில் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் கோல்ரிட்ஜ்-ன் நட்பு பேசுபொருளாக இருந்தது.
மதிப்பீடு
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ் ஆகிய இருவரும் ஆங்கில ரொமாண்டிக் காலகட்டத்தை துவக்கி வைத்தவர்களாக அறியப்படுகின்றனர்.
"இயற்கையை அதற்கப்பாலுள்ள பிறிதொரு மெய்மையின் வெளிப்பாடாகக் கருதும் ஆன்மிகப்பார்வை கொண்டவை வேர்ட்ஸ்வெர்த்தின் கவிதைகள். கற்பனாவாதம் (Romanticism), இயற்கைவாதம் (Naturalism)என்னும் இரண்டு இயக்கங்களின் தோற்றுவாய் அவரும் அவர் நண்பர் கூல்ரிட்ஜும் என்றும் சொல்லப்படுகிறது. ஒன்று அழகியல் இயக்கம். இன்னொன்று அதன் ஆன்மிகசாரமாக அமைந்த தரிசனம்." என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.
பல அறிஞர்கள் வெர்ட்ஸ்வோர்த் முன்வைத்த உன்னதத்தை ரொமாண்டிக் உன்னதத்தின் வரையறையாகக் கொண்டனர். வெர்ட்ஸ்வோர்த் உன்னதத்தைப் பற்றிய அவரது கட்டுரையில் "மனம் தொட நினைக்கும் தூரம் ஆனால் தொட முடியாமல் நிற்கும் ஒன்றே உன்னதம். இந்த உன்னத நிலையைத் தொட நினைக்கும் மனம் தன் போதத்தை இழக்கும். அந்த ஆற்றலால் உன்னதத்தை தொட முடியும். ஆனால் அவை நிரந்தரமானதல்ல." என்றார்.
வெர்ட்ஸ்வோர்த் உன்னத மனநிலை மூலம் உலகியல் துக்கங்களை அகற்ற முடியும் என்றார். அவர் எழுதிய பல கவிதைகளில் இயற்கையில் உன்னதத்தைப் பற்றியும், இயற்கையின் அழகிய வடிவத்தில் உள்ள பிரமிப்பையும், அதே சமயம் அதிலுள்ள பயங்கரத் தன்மையையும் எழுதினார். வேர்ட்ஸ்வொர்த் உன்னதத்தின் இருநிலைகளையும் அறிய முற்பட்டார். அவர் பர்க்(Burke) மற்றும் காண்ட் (Immanuel Kant) கொடுத்த விளக்கங்களைத் தாண்டிச் சென்றார். அவர் உன்னத்ததை மெய்மை நோக்கிச் செல்லும் கருவியாகப் பார்த்தார்.
மறைவு
வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் ஏப்ரல் 23, 1850-ல் நுரையீரல் அழற்சியால் காலமானார். கிராஸ்மேரில் (Grasmere) உள்ள புனித ஆஸ்வால்ட் சர்ச்சில் அடக்கம் செய்யப்பட்டார்.
நூல் பட்டியல்
- An Evening Walk and Descriptive Sketches
- Lyrical Ballads, with a Few Other Poems (Samuel Taylor Coleridge உடன் இணைந்து எழுதியது) (1798)
- French Revolution (1810)
- Guide to the Lakes (1810)
- To the Cuckoo
- The Excursion (1814)
- Two Addresses to the Freeholders of Westmoreland (1818)
- Laodamia (1815, 1845)
- The White Doe of Rylstone (1815)
- Peter Bell (1819)
- Ecclesiastical Sonnets (1822)
- The Prelude (1850)
புகழ்பெற்ற கவிதைகள்
- "Simon Lee"
- "We are Seven"
- "Lines Written in Early Spring"
- "Expostulation and Reply"
- "The Tables Turned"
- "The Thorn"
- "Lines Composed A Few Miles above Tintern Abbey"
- "Strange fits of passion have I known"
- "She Dwelt among the Untrodden Ways"
- "Three years she grew"
- "A Slumber Did my Spirit Seal"
- "I travelled among unknown men"
- "Lucy Gray"
- "The Two April Mornings"
- "Nutting"
- "The Ruined Cottage"
- "Michael"
- "The Kitten at Play"
- "Resolution and Independence"
- "I Wandered Lonely as a Cloud" Also known as "Daffodils"
- "My Heart Leaps Up"
- "Ode: Intimations of Immortality"
- "Ode to Duty"
- "The Solitary Reaper"
- "Elegiac Stanzas"
- "Composed upon Westminster Bridge, September 3, 1802"
- "London, 1802"
- "The World Is Too Much with Us"
இணைப்புகள்
- William Wordsworth - All poetry
- The Love Letters of William and Mary Wordsworth, 1981
- William Wordsworth: The Life and Legacy - classwithmason
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2025, 18:50:21 IST