under review

கமலா விருத்தாசலம்

From Tamil Wiki
Revision as of 15:45, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
கமலா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கமலா (பெயர் பட்டியல்)

To read the article in English: Kamala Virudhachalam. ‎

கமலா விருத்தாச்சலம்
கமலா விருத்தாசலம் (நன்றி: ராணி திலக்)

கமலா விருத்தாச்சலம் (எஸ். கமலாம்பாள்) (1917- 1995) தமிழில் கதைகள் எழுதிய எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் புதுமைப்பித்தனின் மனைவி.

பிறப்பு, கல்வி

கமலா விருத்தாச்சலம் 1917-ல் திருவனந்தபுரத்தில், பொதுப் பணித்துறையில் புகழ்பெற்ற ஒப்பந்ததாரராகத் திகழ்ந்த பி.டி.சுப்ரமணிய பிள்ளை, பிரமு அம்மாள் இணையருக்குப் பிறந்தார். திருவனந்தபுரத்தில் பள்ளியிறுதி வரை பயின்றார்.

தனி வாழ்க்கை

புதுமைப்பித்தன் - கமலா (நன்றி: ஆ.இரா. வேங்கடாசலபதி)

கமலா விருத்தாச்சலம் தன் பதினைந்தாம் வயதில் ஜுலை 1, 1932-ல் சொ.விருத்தாச்சலம் (புதுமைப்பித்தன்)-த்தை மணந்தார். மகள் தினகரி. புதுமைப்பித்தன் 1948-ல் மறைந்தார்.

புதுமைப்பித்தன் - கமலா அம்மாள்

இலக்கிய வாழ்க்கை

1935-க்குப் பின் எழுதத் தொடங்கிய கமலா விருத்தாச்சலம் தினமணி, கிராம ஊழியன் இதழ்களில் கதைகளை வெளியிட்டார். 'வாழ்வில் தனக்கு ஒரு நியதி, மனைவிக்கு ஒரு நியதி என்பதே அவரிடம் கிடையாது. அவர் உயிரோடு இருந்த காலங்களில் அனுபவித்த துன்பங்களுக்கு அளவே கிடையாது. பேச்சென்றால் அவருக்கு ரொம்பவும் பிடிக்கும். சில நாள்கள் இரவு 2 மணி வரையிலும் பேசிக்கொண்டிருப்போம். புத்தகங்கள், எழுத்தாளர்கள், இலக்கியம், கவிதை, கதை, குடும்ப விஷயம் எனப் பல விவரங்கள் பேச்சில் வந்து போகும். எதைப் பற்றிப் பேசினாலும் சுவைபடப் பேசுவார். என்னையும் ஏதாவது கதை எழுது என்று சொல்லிக்கொண்டே இருப்பார். நல்ல நிஜமான, சாகாத கதைகளை உன்னால் எழுத முடியும். நீயும் எழுத்தில் என் கூட தொடர்ந்து வர வேண்டும் என்பதே எனது ஆசை என்பார்' என்று தன் கணவர் புதுமைப்பித்தனைப் பற்றிய தன் நினைவுகளை கமலா விருத்தாசலம் எழுதியுள்ளார் (புதுமைப்பித்தனின் 'சம்சார பந்தம்' என்னும் நூல்)

கமலாவின் அச்சேறிய முதல் சிறுகதை ‘வீடும் வெளியும்' 'தினமணி' பாரதி மலரில் 1935-ல் வெளியானது. 'முதலைச் சட்டை' 1936-ல் மணிக்கொடியில் வெளியானது. மணிக்கொடியில் காசுமாலை, குழந்தை மீனாள், காதல் பூர்த்தி உள்ளிட்ட வேறு சிறுகதைகளையும் எழுதினார். எஸ். கமலாம்பாள் என்ற பெயரில் அவருடைய கதைகள் பிரசுரமாயின. இவர் எழுதிய சிறுகதைகள் "காசுமாலை" என்னும் பெயரில் நூலாக 1971-ம் ஆண்டில் வந்துள்ளது. கிராம ஊழியன், தினமணி, கலைமகள் போன்ற இதழ்களில் எழுதினார். புதுமைப்பித்தன் இவருக்கு எழுதிய 'கண்மணி கமலாவுக்கு' என்ற நூல் புகழ்பெற்றது.

சம்சாரபந்தம்

மறைவு

1995-ம் ஆண்டில் உடல் நலிவுற்று காலமானார்.

இலக்கிய இடம்

கமலா விருத்தாசலம் புதுமைப்பித்தனின் மனைவி என்னும் வகையில் நினைவுகூரப்படுகிறார். பெண்கள் எழுதத் தொடங்கிய காலகட்டத்தில் முன்னோடியான இலக்கியச் சிறுகதைகளை படைத்தவர். தொடர்ந்து எழுதாமலானாலும் அவருடைய பங்களிப்பு முன்னோடி முயற்சியாக நினைவுகூரப்படுகிறது.

நூல்கள்

சிறுகதைகள்
  • வீடும் வெளியும் (தினமணி, பாரதிமலர், 1935)
  • இரத்த சாந்தி (தினமணி வருஷமலர், 1936)
  • முதலைச்சட்டை (மணிக்கொடி, தொகுதி 4, இதழ் 3, 1936)
  • ஆசை (மணிக்கொடி, தொகுதி 4, இதழ் 5, 15-10-1936)
  • காசுமாலை (மணிக்கொடி, தொகுதி 4, இதழ் 10, 31-1-1937)
  • குழந்தை மீனாள் (மணிக்கொடி, தொகுதி 5, இதழ் 3, 1-9-1937)
  • காதல் பூர்த்தி (மணிக்கொடி, தொகுதி 5, இதழ் 11, 15-1-1938)
  • ஊமைச்சியின் கல்யாணம் (கதைக்கோவை, 3-ம் தொகுதி, அல்லயன்ஸ், 1943)
  • புறை ஓடிய ஆசை (தந்தி, சித்திரை மலர், 1944)
  • நினைப்பும் நடப்பும் (கிராம ஊழியன், ஆண்டு மலர் 1944)
  • வேறுபாடு உண்டா (கலைமகள், தொகுதி 28, பகுதி 164, ஆகஸ்ட் 1945)
  • அவள் விரும்பியது (தினமணி கதிர், மே 21, 1950)
  • சந்தேகம் (காதல், ஆண்டுமலர், 1951)
  • வெள்ளைத்தாடி தாத்தா (பாலபாரதி, ஆண்டு மலர், ஜனவரி 1954)
  • பாசக்கயிறு (வாழ்க்கை)
  • காற்றினிலே வந்த கீதம் (உதயம்)
  • வார்த்தை விஷம்
  • திறந்த ஜன்னல்
  • அடைத்த கதவு
  • அவனும் அவளும்
  • வாய்த்துடுக்கு
  • நினைவுத் தீ
  • அவள் விரும்பியது
  • சந்தேகம்
சிறுகதைத்தொகுப்பு
  • காசுமாலை (1971) (ஸ்டார் பிரசுரம், சென்னை)
  • நினைவுத் தீ (தொகுப்பாசிரியர்: ஆ.இரா. வேங்கடாசலபதி) (2025,காலச்சுவடு)
பிற
  • புதுமைப்பித்தனின் சம்சாரபந்தம்
  • கண்மணி கமலாவுக்கு (புதுமைப்பித்தன் எழுதிய கடிதங்கள்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:31:27 IST