under review

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

From Tamil Wiki
Revision as of 03:44, 14 October 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் (பதிப்பு: 2016) திருப்போரூரில் உறையும் முருகப் பெருமான் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல். இதன் ஆசிரியர்: ஸ்ரீ சிதம்பர சுவாமிகள்.

வெளியீடு

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலை, திருப்போருர் ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் விசாக வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை 2016-ல் வெளியிட்டது. இதன் ஆசிரியர்: சிதம்பர சுவாமிகள். உரையாசிரியர்: புலவர் மாசிலாமணி. திருப்போரூர் முருகன் சந்நிதி முறை தொகுப்பில் இந்நூல் இடம்பெற்றது.

ஆசிரியர்

சிதம்பர சுவாமிகள் (சிதம்பர அடிகள்) வீரசைவ மரபைச் சேர்ந்த பக்திக் கவிஞர். வீரசைவ மரபைச் சேர்ந்த துறையூர் சாந்தலிங்க அடிகளின் மாணவர். திருப்போரூரில் கோயில் கொண்ட முருகன் மேல் பல துதி நூல்களை இயற்றியவர்.

நூல் அமைப்பு

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூல் ஆண் பாற் பிள்ளைத்தமிழ் நூல். இந்நூலில் காப்புப் பருவம் தொடங்கி ஆண்பால் பிள்ளைத்தமிழுக்குரிய பத்துப் பருவங்கள் இடம்பெற்றன. காப்புப் பருவத்தில் விநாயகர் மீதான காப்புச் செய்யுள் இடம் பெற்றது. குழந்தையாகிய முருகனைக் காக்க வேண்டி திருமால், சதாசிவம், பராசக்தி, விநாயகர், சரசுவதி, பலதேவர் ஆகியோர்களிடமும், திருநீறு, உருத்திராக்கம், பஞ்சாக்கரம் ஆகிய பொருள்களிடமும் காக்க வேண்டுவதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.

உள்ளடக்கம்

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் முருகனின் பெருமை, சிறப்பு, புகழ், கருணை உள்ளம், அடியார்க்கு அருள் புரியும் விதம் ஆகியன இடம்பெற்றன. திருப்போரூர்த் தலம் நெய்தலஞ் சமரபுரி, போரூர் என்னும் பெயர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருகனின் பெருமை, 'கண்ணகல் நிழலரசு நிழலரசு சசிகணவ சசிகணவ னுக்குதவு னுக்குதவு கந்தவேள்’ என்றும்,’நொடியிலே வியகுகனை நெடியமால் மருகனை’ என்றும், ‘சமரபுரி வாழ்வை வானோர் சிகாமணியை’ என்றும், ‘சமரபுரி தனில் நிலவு கந்தனைக் காக்கவே’ என்றும், ‘கைம்மலர் குவிக்க இரு கால்மலர் படைத்தவொரு கந்தனை யளிக்க வென்றே’ என்றும் இன்னும் பலவாறாகவும் கூறப்பட்டுள்து.

பாடல்

காப்புப் பருவம் - திருமால்

பூமேவு பொய்கைப் பொறிச்சிறகர் வண்டினம்
பொங்கரின் விருந்தயர்தரும்
போரூரின் முருகனைச் சீர்மேவு குமரனைப்
புனி தஞா னக்குரவனைக்

காமேவு கடவுட் பசுந்துணர் விரிந்துநறை
கடிமணத் தொடுபிலிற்றுங்
கண்ணகல் நிழலரசு சசிகணவ னுக்குதவு
கந்தவே ளைப்புரக்க

தூமேவு ஞானசத் திக்கடலின் மொண்டுசிற்
சொலிதசத் துவப்பொருப்பில்
தோமற இவர்ந்துலக மெங்கும் பரந்துயிர்த்
தொகைவகைப் பயிர்கள் தழையத்

தேமேவு மதுரம் பழுத்தொழுகு மென்மொழித்
திருமின் கலந்துமிளிரச்
செய்யபே ரருள்மாரி பொய்யாது பொழிகின்ற
செங்கட் கருங்கொண்டலே

சப்பாணிப் பருவம்

மரகதப் பந்திநிறை பைங்கிரண மண்டலம்
வழங்குகுழை முகமதிகளும்
மாணிக்க மணிராசி யிளவெயிற் றிசைவீச
மகுடநீ டியமுடிகளுங்

கரகதிர்ப் பகலெனச் சுடர்விரித் தொளிர்வயிர
கடகநிரை செறிதோள்களுங்
கறையகலு மதிமண் டலங்களென நித்திலங்
கதிர்விடு மதாணிமார்புந்

திரகதச் செக்கரின் நிறத்துகில் மருங்குலுந்
திப்பியத் தலநவமணித்
திரண்டுமண்டு தண்டையங் கமலமுந் திகழவிச்
சித்திரப் பைஞ்சிறைமயிற்

குரகதத் தினைநடவி யடியவர்க் கருள்முருக
கொட்டியருள் சப்பாணியே
கூரூ ரயிற்கிறைவ போரூர் நகர்க்கதிப
கொட்டியருள் சப்பாணியே

வருகைப் பருவம்

விரைநறுங் குழலினார் கொங்கைப் பெருங்குவடு
மிகுதடக் கடலுழக்க
வெள்ளைவா ளைக்களிறு கொள்ளுசூல் முகில்பிளிறி
விள்ளக் கிழித்தஃதுறு

நிரைதருங் கந்திக் குடக்கழுத் தறமோதி
நெட்டிலைக் கதலி சாடி
நீடுகன் னற்கா டொடித்துப் பொறிச்சிறைய
நீலவண் டூது கஞ்சத்

திரளொடும் பணைமண்டு நெற்றா ளுடைத்திடச்
செறிதரள முகிலாதியிற்
சிந்தப் பெருஞ்சோதி யுடுமண் டலத்தினில்
திகழ்கின்ற மருதவேலி

மருவியம் புகழ்கொண்ட சமரபுரி தனில்நிலவு
மஞ்ஞைவா கனன்வருகவே
மலிபுவன முழுவதுங் கிடுகிடென நொடியில்வலம்
வருகந்த வேள்வருகவே.

மதிப்பீடு

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் நூல், சொற்சுவையும், இலக்கியச் சுவையும் கொண்ட நூல். முருகன் மீதான பக்தி இலக்கியங்களில் ஒன்றாகவும், 17-ம் நூற்றாண்டில் தோன்றிய சிற்றிலக்கிய நூல்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ், உரையாசிரியர்: பா. மாசிலாமணி, ஸ்ரீமத் சிதம்பர சுவாமிகள் விசாக வழிபாட்டுச் சங்க அறக்கட்டளை, திருப்போரூர், முதல் பதிப்பு: 2016.


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Oct-2025, 00:40:37 IST