under review

கோட்டியூர் நல்லந்தையார்

From Tamil Wiki
Revision as of 01:04, 26 March 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

கோட்டியூர் நல்லந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று நற்றிணையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கோட்டியூர் நல்லந்தையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். பாண்டிய நாட்டில் உள்ள திருக்கோட்டியூரில் வாழ்ந்தவர். நல்லந்தையார் என்ற பெயரின் வழியாக நல்லன் என்பவரின் தந்தை இவர் என அறிய முடிகிறது.

இலக்கிய வாழ்க்கை

கோட்டியூர் நல்லந்தையார் பாடிய பாடல் நற்றிணையில் 211-ம் பாடலாக இடம்பெற்றுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வரும் தலைவன், தலைவியை வரும் பொழுது அவனது காதில் படும்படி தலைவிக்கு ஏற்பட்ட துன்பத்தை தோழி கூறுவதாக நெய்தல் திணையில் அமைந்த பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • கடற்கரையில் அலையடித்து உருவான உப்புநீர் சேறு அமைந்த கழிமுகத்தில் இறா மீன்கள் வாழும். இறா மீன்களை குருகு பறவைகள் பிடித்துண்ணும்.
  • அலையடித்து சேர்ந்திருக்கும் மணல்மேட்டில் தாழை புதர்கள் செழித்து வளர்ந்து, தாழை மலர்கள் நீரினை தொடும்படி வளைந்து மலர்ந்திருக்கும்.
  • குருகு பறவைகளின் வேட்டைக்கு தப்பிய இறா மீன்கள் நீரை தொட்டு கொண்டிருக்கும் தாழை மடலைக்கு கண்டு இன்னொரு பறவையென அஞ்சும்.

பாடல் நடை

நற்றிணை - 211

  • திணை: நெய்தல்
  • கூற்று:வரைவுநீட ஒருதலை ஆற்றளா மென்ற தோழி சிறைப்புறமாகத் தன்னுள்ளே சொல்லியது.

யார்க்கு நொந்து உரைக்கோ யானே-ஊர் கடல்
ஓதம் சென்ற உப்புடைச் செறுவில்,
கொடுங் கழி மருங்கின், இரை வேட்டு எழுந்த
கருங் கால் குருகின் கோள் உய்ந்து போகிய
முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை,
எறி திரை தொகுத்த எக்கர் நெடுங் கோட்டுத்
துறு கடற் தலைய தோடு பொதி தாழை
வண்டு படு வான் போது வெரூஉம்
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே?

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 25-Mar-2025, 19:07:44 IST