under review

சொரூபானந்தர்

From Tamil Wiki
Revision as of 01:04, 24 February 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

சொரூபானந்தர் (சொரூபானந்த தேசிகர்) (Svarupananda Desikar) (பொ.யு. 16-ம் நூற்றாண்டு) தமிழறிஞர், ஆன்மிக யோகி. இவரின் குரு திருவாரூர் சிவப்பிரகாச சுவாமிகள். தத்துவராயரின் குரு. தத்துவராயர் நூல்கள் எழுதக் காரணமாக இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சொரூபானந்தர் சேந்தமங்கலத்தில் பிறந்தார். இவர் தத்துவராயரின் தாய் மாமன். இருவரும் வடமொழி தென்மொழி இரண்டிலும் வல்லவர்கள். பிரம்மச்சாரிகளாக இருந்து வேதாந்த சாஸ்திரம் யாவையும் படித்து அவற்றின் பொருளை ஆராய்ந்து தத்துவ பரிசீலனை செய்துவந்தனர்.

ஆன்மிக வாழ்க்கை

தத்துவராயரும் சொரூபானந்தரும் ஞான குருவுக்கான தேடலில் இருந்தனர். வடக்கும் தெற்குமாகப் பிரிந்து குருவைத் தேடுவது எனவும் முதலில் குருவைக் காண்பவர் அக்குருவினிடத்தில் கற்ற வித்தையை மற்றவருக்குக் கற்றுக் கொடுக்கலாம் எனவும் தீர்மானித்தனர். சொரூபானந்தர் தென் திசையை நோக்கிச் சென்றார். காவேரி நதியின் கரை வழியாக திருச்சி சமயபுரம் தாண்டி மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் திருப்பைஞ்ஞீலி அருகே கோவர்த்தனம் என்ற ஊரில் தன் குரு இருப்பதை உணர்ந்து கண்ணீர் மல்கினார். மக்களின் உதவியால் அங்கு ஒரு புதரில் இருந்த சிவப்பிரகாசரை சந்தித்தார். சிவப்பிரகாசர் தானும் அவருக்காகவே இவ்வளவு நாள் காத்திருந்ததாகச் சொல்லி சொரூபானந்தரைத் தன் சீடனாக ஏற்று ஞான உபதேசம் அளித்தார்.

வடக்கு நோக்கிச் சென்ற தத்துவராயர் குரு கிடைக்காததால் தென் திசை திரும்பி தன் மாமன் சொரூபானந்தரை குருவாக ஏற்றுக் கொண்டார். தத்துவராயர் தனக்கு ஞான உபதேசம் வேண்டியபோது சொரூபானந்தர் அவர் மேலும் பக்குவமடைந்து காலம் கனிவதற்காக வேண்டி தத்துவராயரிடம் கோபம் கொண்டு விலகியிருந்தார். தனது குருவின் அருளைப் பெற வேண்டி சொரூபானந்தர் மீதும், அவரது குரு சிவப்பிரகாசர் மீதும் துதிப்பாடல்களாக சிவப்பிரகாச வெண்பா, திருத்தாலாட்டு, பிள்ளை திருநாமம், மும்மணிக்கோவை, நான்மணிமாலை, கலிப்பா, சிலேடையுலா, கலிமடல், அஞ்ஞவதைப்பரணி, மோகவதைப்பரணி போன்ற 18 சிற்றிலக்கியங்களைப் பாடினார். இவை 'அடங்கன்முறை' என அறியப்படுகின்றன. சொரூபானந்தர் இத்துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண மக்களுக்கு உதவாது எனப் பொருள்பட 'கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்று கூறியதாகக் கூறப்படுகிறது. உலகுக்கு உதவும் வகையில் எளிய நடையில் பாடு என்ற குருவின் உத்தரவுக்கேற்ப மோகவதைப் பரணியில் ஒரு படலமாக சசிவன்ன போதம் பாடினார் தத்துவராயர். சசிவண்ண போத பாகத்தை எண்ணி சொரூபானந்தர் மகிழ்ந்தார்.

மாணவர்
  • தத்துவராயர்

எழுத்து

சொரூபானந்தர் சொரூபசாரம் என்ற நூலை எழுதியதாகக் கருதப்படுகிறது.

விவாதம்

"சொரூபானந்தர் எந்த நூலும் செய்யவில்லை. தம் மாணாக்கர் தத்துவராயரைக் கொண்டே பல நூல்களை உருவாக்கினார். எனவே இந்த நூல் சொருபானந்தரால் செய்யப்படவில்லை" என தமிழறிஞர் மு. அருணாசலம் கருதினார்.

சமாதி

சொரூபானந்தரின் ஜீவசமாதி சேந்த மங்கலத்தில் உள்ளது. எந்த சேந்தமங்கலம் என்ற தகவல் இல்லை.

நூல் பட்டியல்

  • சொரூபசாரம்

உசாத்துணை

இணைப்புகள்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Feb-2025, 09:09:39 IST