சசிவன்ன போதம்

சசிவன்ன போதம் (பொ.யு 16-ம் நூற்றாண்டு) தத்துவராயர் எழுதிய நூல். தமிழில் எழுதப்பட்ட வேதாந்த நூல்களில் ஒன்று. இந்நூல் வெவ்வேறு வேதாந்த அறிஞர்களால் உரை எழுதப்பட்டது.
நூல் பற்றி
பொ.யு 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவராயர் எழுதிய நூல். 110 பாடல்களைக் கொண்டது. தாழிசையால் ஆனது. 1923-ல் இந்நூலுக்கு கோ. வடிவேலு செட்டியார் உரை எழுதினார். கோ. வடிவேலு செட்டியார், ம. ஷண்முக முதலியாரால் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள நோபிள் பிரஸ் நிறுவனத்தில் அச்சியற்றப்பட்டது.
தத்துவராயர் தன் குருவான சொரூபானந்தரின் அருளைப் பெற அவர் மேலும், அவரின் குருவான சிவப்பிரகாச சுவாமிகள் மீதும் துதிமாலைகள் பாடியபோது சொரூபானந்தர் இத்துதிமாலைகள் அனைத்தும் சாஸ்திரம் மிகவும் கற்றவர்களுக்கும், உனக்குமே உதவுமேயன்றி சாதாரண மக்களுக்கு உதவாது எனப் பொருள்பட 'கூந்தலை உடையவன் வாரி முடிக்கிறான் (தமிழில் வல்லவன் பாடுகிறான்) என்று கூறியதாகக் கூறப்படுகிறது. உலகுக்கு உதவும் வகையில் எளிய நடையில் பாடு என்ற குருவின் உத்தரவுக்கேற்ப மோகவதைப் பரணியில் ஒரு படலமாக சசிவன்ன போதம் பாடினார் தத்துவராயர். சசிவன்ன போத பாகத்தை எண்ணி குரு மகிழ்ந்தார்.
நூல் சுருக்கம்
சசிவன்னன் (சசிவர்ணன்) தனது தீவினையினால் குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டான். அவனது தந்தை பாகயஞ்ஞன் நந்திபாராயணர் என்னும் ஞானியிடம் அழைத்துச் சென்றான். சசிவன்னன் நந்திபாராயணருக்குப் பணிவிடை செய்து தீரா நோயிலிருந்து பூரண குணமடைந்த வரலாறும், சசிவன்னனுக்குப் பிறவிப் பிணி நீங்குவதற்காக நந்திபாராயணர் அருளிய ஞான உபதேசமும் 110 பாடல்களில் பாடப்பட்டுள்ளன.
மதிப்பீடு
சசிவன்ன போதம் தமிழ்நாட்டில் வேதாந்தம் கற்பவருக்கான அடிப்படை நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. கோவிலூர் வேதாந்த மடத்தில் தமிழில் வேதாந்தம் கற்க விரும்புபவர்கள் அடிப்படையாக 16 நூல்கள் படிக்க வேண்டும். அதில் ஒரு முக்கிய நூல் தத்துவராயர் எழுதிய சசிவன்னபோதம்.
பாடல் நடை
- 76-வது பாடல்: தத்துவமஸி மகாவாக்கியத்தின் உண்மைப்பொருள் விட்டுவிடாத லட்சணையாலன்றி ஏனைய லட்சணைகளால் விளங்காதெனல்
விட்ட லக்கணை தனையும் விட்டு
விடாத லக்கணை தனையுநீ
விட்டு விட்டு விடாத லக்கணை
யால் விளங்கும் விளங்கவே
- 108-வது பாடல்: சசிவன்னன் அடைந்த பிரம்மஞானத்தின் பிரபாவத்தை தேவி கூறல்
வஞ்சவலி யானரகில் வீழ்பிதிர
ரந்நரகு பாழ்பட மிகா
விஞ்சைவலி யாலடைய வேறினர்
சுராதிபர்கண் மேலு லகமே
இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Feb-2025, 09:57:22 IST