under review

கவைமகனார்

From Tamil Wiki
Revision as of 11:48, 1 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)

கவைமகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

வாழ்க்கை குறிப்பு

கவைமகனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'கவைமக நஞ்சு’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.

இலக்கிய வாழ்க்கை

கவைமகனார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 324-வது பாடலாக அமைந்துள்ளது. காதலுக்குரிய தலைவனை சந்திக்க விடாது வீட்டினரால் இல்லக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவியின் துன்பத்தையும் அவளைப் பார்ப்பதற்காக துன்பம் மிகுந்த பாதையைக் கடந்து வரும் தலைவனின் நிலையையும் ஒருங்கே கண்டு வருத்தமுறும் தோழியின் கூற்றாக வரும் பாடல்.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

தலைவன், தலைவியின் இருவரின் பிரிவு துயரை ஒருங்கே கண்டு ஆற்றாது தவிக்கும் தோழியின் நிலையை உணர்த்தும் பாடல்.

  • வளைந்த கால்களை உடைய கொலைத் தொழில் புரியும் ஆண் முதலைகள் கடற்கரைச் சோலைகளில் உள்ள ஆழமான நீர் வழிகளில் தங்கி இருக்கும்.
  • உவமை: நஞ்சினை உண்ட இரட்டை குழந்தைகளின் தாயின் மனம் தவிப்பது போல இருவரது துன்பத்தையும் கண்டு தவிக்கிறேன்.

பாடல் நடை

குறுந்தொகை - 324

நெய்தல் திணை

  • துறை: செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இரா வாரா வரைவல்" என்றாற்குத் தோழி அது மறுத்து வரைவு கடாயது.

கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இளமீ னிருங்கழி நீந்தி நீரின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையி னுயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்ஞத் தானே

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Nov-2024, 12:58:35 IST