under review

மாதர் நீதிக் கலிவெண்பா

From Tamil Wiki
Revision as of 21:01, 18 August 2025 by ASN (talk | contribs) (Page Created: Para Added and Edited: Link Created: Proof Checked)
கலிவெண்பா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கலிவெண்பா (பெயர் பட்டியல்)

மாதர் நீதிக் கலிவெண்பா (பதிப்பு: 1933), ஒரு நீதி நூல். கி. வேங்கடசாமி ரெட்டியாரால் இயற்றப்பட்டது. பெண்களுக்கான நீதிகளை கலிவெண்பா வடிவில் கூறுகிறது.

வெளியீடு

மாதர் நீதிக் கலிவெண்பா நூல், விழுப்புரம் ஹநுமான் அச்சியந்திர சாலையில், 1933-ல் பதிப்பிக்கப்பட்டது. இதன் விலை ஒன்றரை அணா. இதன் ஆசிரியர் கி. வேங்கடசாமி ரெட்டியார்.

நூல் அமைப்பு

மாதர் நீதிக் கலிவெண்பா நூலின் தொடக்கத்தில் தி.மு. செந்திநாயகம் பிள்ளை, வே. வேங்கடராஜுலு ரெட்டியார், டி.ஆர். பெரிய நம்பியா பிள்ளை, தேசிக சடகோப பிள்ளை, சா.நா. வீரப்ப முதலியார், மு. நடேசப் பிள்ளை, மா. வேங்கடகிருஷ்ணப் பிள்ளை ஆகியோர் இயற்றிய சிறப்புப் பாயிரங்கள் இடம்பெற்றன. நூலின் தொடக்கத்தில் நம்மாழ்வார் மீதான துதியும், நூலின் வரலாறும், அவையடக்கமும் இடம்பெற்றன. தொடர்ந்து நூல் இடம்பெற்றது. நூலில் 162 கண்ணிகள் இடம்பெற்றன.

உள்ளடக்கம்

மாதர் நீதிக் கலிவெண்பா, தாய், மகளுக்குக் கூறும் அறிவுரைகளாக இயற்றப்பட்டுள்ளது. முன்னோர் கூறிய நீதிகளும் இந்நூலில் இடம்பெற்றன. நூல் குறித்து கி. வேங்கடசாமி ரெட்டியார், முன்னுரையில், “இந்நூலைத் தாய் மகளுக்குணர்த்தும் முறையாகப் பல நூல்களினின்றும் திரட்டிய நீதிகளைச் சேர்த்துக் கூறியிருக்கிறேன். திருவருள் தூண்ட, இது இக்காலத்துக்குப் பெரிதும் பயன்படுமெனக் கருதி வெளியிடத் துணிந்தேன். இது ஆண் பெண் இருபாலரும் கற்றுணரத் தகுந்தது. சிறுவரும் எளிதில் உணரலாகும். எல்லோரும் நன்கறிந்து அதன்படி நடப்பதே இம்முயற்சிக்குப் பெருங்கைம்மாறாகும்” என்று குறிப்பிட்டார்.

பாடல் நடை

அத்தையார் கோபித்தா லாங்கணெதிர்க் காதவர்தாம்

வைத்ததொரு வேலை மகிழ்ந்தேசெய் - நித்தமுமே


கொண்டான் பாத்தையரைக் கூடிமகிழ்ந் தின்புற்றுத்

தண்டா துறையினுனைத் தான்மறக்கின் - ஒண்டொடியே


என்பாக் கியமிதுவென் றெண்ணிக் கணவனுக்குன்

அன்பாக் கியசொல்லா லார்வமுற்று நின்பால்


இருக்கச்செய் அல்லா விழிசொல்லால் நெஞ்சம்

வெருக்கொளுமா றொன்றும் விளம்பேல் - மருக்கமழுங்


கூந்தலாய் கேள்வன் குறித்ததுதீ தாயிருப்பின்

ஏந்தலே தீயதிதென் றெண்ணிச்சொல்

*

விடியாத முன்னே விரைந்துசெயல் வேண்டும்

திடமாயெக் காலும்வெளிச் செல்லேல் - கடிகமழும்


நாண்மலர்மென் கூந்தல் நடந்துலர்த்த லாகாது

பேணிமறைச் சொல்லைப் பிறர்க்குறையேல் - நாணுடையாய்


புத்திரரை நோயின்றிப் போற்றற் கியைந்ததொரு

நத்தும் சுகவழியை நாடுவாய் - எத்துணையும்


நெஞ்சில் விதனமுறின் நீங்காத நோயுண்டாம்

அஞ்ச விலாநின் அருஞ்சிறுவர்க் - கெஞ்சாத

வீரமே யூட்டாது வீண்பயத்தைக் காட்டாதே

*

பெண்டிரொடு நட்புசெயப் பேணேல் கிழத்தனத்தர்

மீண்டுமங்க வீனரொடு வெந்நோயர்க் - கண்டு


நகைத்திடேல் ஒன்றுதந்து நான்கைந்து வாங்கிப்

பகைத்திடேல் யாரிடத்தும் பாவாய் - வகுத்ததொரு


மேலோர்முன் பொய்க்கோள் விளைத்திடேல் பந்தியிலே

ஏலாத வஞ்ச மிழைத்திடேல் - மேலான


செல்வர் வறியரெனச் சிந்தையினி லெண்ணாதே

இல்லழுக்குத் தூசழுக்கோ டேர்குழல்மா - செல்லவர்க்கும்


நெஞ்சருவ ருக்கும் நெடிய தரித்திரமாம்

அஞ்சாந் தரைத்திடுநல் லம்மியினில் - விஞ்சியே


செப்புமுரல் திண்குழவி தேசா நியந்திரத்தில்

தப்பில் உலக்கைவா சற்படியில் - எப்போதும்


மன்னி இருப்பினுங்கால் வைத்தே யிருந்தாலும்

அன்னையாம் செந்திருவு மாங்கிராள் - தன்னறியா


தோர்கால் பதம்பட்டா லொற்றிக்கொள் வாய் விழியில்

சீரார் விளக்கேற்றிற் செங்கரத்தில் - வாருமெண்ணெய்


தாக்காதோர் குச்சியினாற் றார்குழலே தூண்டிடுவாய்

தேக்குமெண்ணெய் கைப்படிலோ தீதாகும்

மதிப்பீடு

மாதர் நீதிக் கலிவெண்பா, பெண்கள் வீட்டிற்கு அடங்கி, ஆணுக்கு அடங்கி நடத்தல் வேண்டும் என்ற கொள்கைகள் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்த பல நீதி நூல்களுள் ஒன்று. அக்காலத்துப் பெண்களுக்கான நீதிகளைக் கூறும் நீதி நூல்களுள் ஒன்றாக அறியப்படுகிறது.

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.