கந்தசாமி சுவாமிகள்
கந்தசாமி சுவாமிகள் (சிரவை ஆதினம் கந்தசாமி சுவாமிகள்) (ஏப்ரல் 18, 1892 - டிசம்பர் 09, 1948) ஆன்மிகவாதி. சிரவை ஆதினத்தின் மடாதிபதிகளில் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்ட ஆன்மிக, இலக்கிய நூல்களை எழுதினார்.
வாழ்க்கைக் குறிப்பு
கந்தசாமி, ஏப்ரல் 18, 1892-ல், கோவையில், வெங்கடசாமிக் கவுண்டர் – குட்டியம்மை இணையருக்குப் பிறந்தார். தொட்டையக் கவுண்டர் என்பவர் நடத்தி வந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக் கல்வி பயின்றார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். சகோதரியால் ஆதரிக்கப்பட்டார்.
வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புகளாலும் வைராக்கிய சிந்தனைகளாலும் ஆன்மிகத்தின்பால் ஆர்வமுற்றார். தனது 12-வது வயதில், தனது தந்தையின் மூத்த சகோதரரான இராமானந்தரின் பொறுப்பில் இருந்த சரவணம்பட்டி கௌமார மடாலயத்திற்குச் சென்றார். குருவாக இராமானந்தரை ஏற்றுச் செயல்பட்டார்.
ஆன்மிக வாழ்க்கை
கந்தசாமி, கௌமார மடாலயத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பூசகராகப் பணியாற்றினார். மடாலயத்தில் உள்ள நந்தவனத்தைச் செப்பனிட்டு அதனை வளப்படுத்தினார். தனக்குப் பரம்பரைச் சொத்தாக வந்த அனைத்து நிலபுலன்களையும் முறையாகப் பத்திரம் எழுதி திருமடத்திற்கு ஒப்படைத்தார். பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று இறை வழிபாடு செய்தார்.
குரு தீட்சை
இராமானந்த அடிகளார், பழனி திருத்தலத்தில், ஜனவரி 29, 1923-ல், தனது சீடரான கந்தசாமிக்கு துறவு தீட்சை அளித்தார். சிரவை ஆதீனத்தின் ஆதினகர்த்தராக நியமித்தார். அதுமுதல் ’கந்தசாமி’, ’கந்தசாமி சுவாமிகள்’ என்று அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
தொடக்கம்
கந்தசாமி தனது குருநாதர் இராமானந்தரிடம் இருந்து இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். மடத்திற்கு அடிக்கடி வந்து செல்லும் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் மகனும், தமிழ்ப்புலவருமான செந்திநாயகத்திடம் யாப்பிலக்கணம், சிற்றிலக்கிய வகைகளைக் கற்றறிந்தார். தமிழ், சம்ஸ்கிருதம், மலையாள மொழிகளில் புலமை பெற்றார். தமிழில் செய்யுள் இயற்றும் புலமை பெற்றார்.
நூல்கள் இயற்றுதல்
கந்தசாமி, தனது குருநாதரின் வேண்டுகோளுக்கிணங்க சற்குரு சரித வண்ணக்கோவை, சூரிய மூர்த்தி சந்தப்பதிகம், சத்திமத் திருப்புகழ், வைணவச் சந்தப் பதிகம், கணேசர் யமகவந்தாதி, கணேசர் சந்தம், சிரவை யமகவந்தாதி போன்ற நூல்களை இயற்றினார்.
இராமானந்தர், கந்தசாமி சுவாமிகளிடம் கௌமார மடத்தின் சிறப்புக்களை இனிய, எளிய நடையில். தாள, லய, இசை நயங்களுடன், பக்தர்கள் பாடும் வகையில் நூல் ஒன்றை இயற்றுமாறு ஆணையிட்டார். அதற்கிணங்கி கந்தசாமி சுவாமிகள் எழுதிய நூல், ‘சிந்துத் திரட்டு’. இந்நூல் ஏப்ரல் 1926-ல் பதிப்பிக்கப்பட்டு வெளியானது. இந்நூலில் 24 சிந்துப் பாடல்கள் அமைந்திருந்தன. தொடர்ந்து வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் மீது நூல் இயற்றுமாறு குருநாதர் ஆணையிடவே கந்தசாமி சுவாமிகள் வண்ணச்சரப தண்டபாணி சுவாமிகள் பற்றி, ‘வண்ணச்சரபர் சரித்திர சார வண்ணம்’, ‘பூர்வ அவதாரக் குறிப்பு வண்ணம்’, நற்றாய் இரங்கல் துறை வண்ணம்’ என மூன்று வண்ணப் பாக்களைப் பாடினார்.
கந்தசாமி சுவாமிகள், குருவின் ஆணைப்படி ’பக்த மாலா’ என்னும் மலையாள உரைநடை நூலை ’பக்த மான்மியம்’ என்ற தலைப்பில் காப்பியமாக்கி அரங்கேற்றினார். அரங்கேற்றச் சிறப்பை ஆதினப் புலவர் தி.செ. முருகதாசர், ‘பக்த மான்மிய அரங்கேற்றல் வைபவம்’ என்ற தலைப்பில், 153 செய்யுள்களைக் கொண்ட ஒரு குறுங்காப்பியமாக இயற்றினார். யமகம், திரிபு போன்ற மிறைக்கவிகளையும் வண்ணப்பாக்களையும் விரைவில் இயற்றும் ஆற்றல் கொண்டிருந்தார். ’கொங்கு நாட்டுக் கச்சியப்பர்’ என்று போற்றப்பட்டார். உலகியல் நிகழ்வுகள் எதிலும் நாட்டமில்லாது வாழ்ந்தார்.
”மக்கள் அனைவரும் புலால் உண்பதையும், அதன் பொருட்டு உயிர்களைக் கொல்வதையும் நீக்க வேண்டும்; வழிபாடு, மருத்துவம், உணவு என எக்காரணம் கொண்டும் கொலை செய்யக்கூடாது” என்பதை தம்மை நாடி வந்த அடியவர்களிடம் வலியுறுத்தினார்.
சொற்பொழிவு
கந்தசாமி சுவாமிகள் சிறந்த சமயச் சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். நூல் அரங்கேற்ற உரைகள், வெள்ளிக்கிழமைச் சொற்பொழிவுகள், பல கோவில் விழாக்களில் பேருரைகள் என ஏராளமான சமயம் சார்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சிரவையாதீனம் மூன்றாம் பட்டம் கஜபூசைச் சுந்தர சுவாமிகள், பேரூராதீனம் தவத்திரு சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தம்பி சுவாமிகள் என வழங்கப்பட்ட சிரவை மருதாசல சுவாமிகள், கவியரசு கு. நடேச கவுண்டர் ஆகியோர் கந்தசாமி சுவாமிகளின் மாணவர்கள். அவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியம் பயின்றவர்கள்.
மறைவு
கந்தசாமி சுவாமிகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். டிசம்பர் 09, 1948 அன்று அறுவை சிகிச்சை செய்து வலது கால் எடுக்கப்பட்டது. மறுநாள் டிசம்பர் 10, 1948 அன்று சுவாமிகள் காலமானார்.
சமாதி
கௌமார சபைக் கட்டடத்தில் முன்பே அமைக்கப் பெற்றிருந்த குகையின் ஒருபக்கத்தில் கந்தசாமி சுவாமிகளின் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.
குருபூஜை
சிரவையாதீனம் கௌமார மடாலயத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாதப் பூராடத்தன்று கந்தசாமி சுவாமிகளின் அவதார விழாவும், கார்த்திகை ரேவதியன்று குருபூஜையும் பக்தர்களால் கொண்டாடப்படுகின்றன.
வாழ்க்கை வரலாறு
- கந்தசாமி சுவாமிகளைப் போற்றி சிரவையாதீனம் சுந்தரசுவாமிகள், ’கந்தசாமி சுவாமிகள் வரலாற்று வண்ணம்’ என்ற நூலை இயற்றினார்.
- திருவாமாத்தூர் தி.செ. முருகதாசர், ’கந்தசாமி சுவாமிகள் தோத்திரப் பதிகம்’, ’கந்தசாமி சுவாமிகள் திருப்புகழ்’ ஆகிய நூல்களை இயற்றினார்.
- கு. நடேச கவுண்டர், கந்தசாமி சுவாமிகளின் பேரில் பிள்ளைத்தமிழ், திருப்பள்ளியெழுச்சி, தாலாட்டு உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார்.
- சிரவையாதீனக் கவிஞர் புலவர் ப. வெ. நாகராஜன், ’சிரவையாதீனம் தவத்திரு. கந்தசாமி சுவாமிகள் வரலாறு’ என்ற நூலை இயற்றினார்.
மதிப்பீடு
கந்தசாமி சுவாமிகளின் பாடல்கள் செறிவானவையாகவும் பொருளாழமும் இலக்கிய நயமும் கொண்டவை. கந்தசாமி சுவாமிகள் தலபுராணங்கள், கோவை, கலம்பகம், மாலை, அந்தாதி என மொத்தம் 14,539 பாடல்களை இயற்றினார். கொங்கு நாட்டுப் புலவர்களிலேயே அதிகமான எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியவராகவும், தமிழுக்கும் சமயத்துக்கும் அருந்தொண்டாற்றிய அறிஞர்களுள் ஒருவராகவும் கந்தசாமி சுவாமிகள் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- பெருங்கருணாம்பிகை மாலை
- பெருங்கருணாம்பிகை யமக அந்தாதி
- பெருங்கருணாம்பிகை பதிகம்
- திருப்புகழ்ப் பஞ்சகம்
- அவிநாசியப்பர் பதிகம்
- விநாயகர்
- முருகர் திருப்புகழ்
- திருநாவுக்கரசர் மடம் விநாயகர் பதிகம்
- அப்பர், சம்பந்தர் திருப்புகழ்
- கருணாம்பிகை திருப்புகழ்
- அன்னியூர்த் தலபுராணம்
- மன்னீசர் பதிகம்
- திருப்புகழ்
- தபோதக சுந்தரி பதிகம்
- வரதராசப் பெருமாள் பதிகம்
- சண்முகக் கடவுள் திருப்புகழ்
- பிரசன்ன விநாயகர் மாலை
- திருப்புகழ்
- அத்தனூரம்மை மாலை
- கணபதி யமக அந்தாதி
- ஆதி விநாயகர் பதிகம்
- வாழி வேணுகோபாலசாமி பதிகம்
- வேணுகோபாலசாமி திருப்புகழ் பதிகம்
- பிரசன்ன விநாயகர் விடசுரத் தடைப்பதிகம்
- காமாட்சியம்மன் பஞ்சகம்
- பிரசன்ன விநாயகர் பஞ்சகம்
- நிருத்த கணபதி துதி
- காட்சி விநாயகர் துதி
- காரைமடைத் தலபுராணம்
- அரங்கநாத மாலை
- ஆண்டாள் பதிகம்
- அரங்கநாதன் திருப்புகழ்
- வாழி அடைக்கலப் பதிகம்
- அகப்பொருட் கோவை
- பச்சைநாயகி பிள்ளைத்தமிழ்
- திருப்பேரூர்க் கலம்பகம்
- பச்சைநாயகி மாலை
- பட்டீசர் யமக அந்தாதி
- பிறவாநெறிச் சிலேடை வெண்பா
- விநாயகர் பதிகம்
- சிவபிரான் பதிகங்கள்
- பக்த மான்மியம்
- குருபர அந்தாதி (திரிபு)
- வேற்கடவுள் மாலை
- அறநெறி வெண்பா
- மழைப் பதிகம்
- மகாலக்குமி பதிகம்
- மகாவித்வான் பிள்ளையவர்கள் பதிகம்
- கலைமகள் துதி
- குருநாதன் வண்ணம்
- வண்ணச்சரபர் அவதாரக் குறிப்பு வண்ணம்
- வண்ணச்சரபர் நற்றாய் இரங்கல்துறை வண்ணம்
மற்றும் பல.
உசாத்துணை
- கந்தசாமி சுவாமிகள் வாழ்க்கை வரலாறு, கௌமாரம் தளம்
- சிரவை ஆதீனம் கந்தசாமி சுவாமிகள் வாழ்க்கைக் குறிப்பு
- கந்தசாமி சுவாமிகளின் நூற்பதிப்புகள், கோவை மணி தளம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.