La. Sa. Ramamirtham

லா.ச.ராமாமிர்தம் (லா.ச.ரா) லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்) (அக்டோபர் 30, 1916 - அக்டோபர் 30, 2007) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிய எழுத்தாளர். நனவோடை முறையில் சொல்விளையாட்டுக்களுடனும் நுண்ணிய பண்பாட்டுக் குறிப்புகளுடனும் எழுதப்பட்ட இவருடைய நடை புகழ்பெற்றது. உணர்ச்சிக்கொந்தளிப்பும் நுண்ணிய விவரணைகளும் இந்து மதமரபின் படிமங்களும் கலந்த கதைகள் இவருடையவை. இசையனுபவமும் மறைஞான அனுபவமும் அவற்றில் வெளிப்படுகின்றன.
Birth, Youth
லா. ச. ராமாமிர்தம், அக்டோபர் 30, 1916-ல் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சப்தரிஷி - ஸ்ரீமதி இணையருக்குப் பிறந்தவர். காஞ்சிபுரம் அருகே அய்யம்பேட்டை என்னும் கிராமத்தில் வளர்ந்தார். லா.ச.ராவின் தந்தை சப்தரிஷி மூலம் தமிழ் மற்றும் ஆங்கில இலக்கியங்கள் கற்று 12 வயதுக்குள் மொழி ஆர்வமும், புலமையும் ஏற்பட்டது. பள்ளியிறுதி (எஸ்.எஸ்.எல்.சி) வரைக்கும் படித்திருக்கிறார்.
Personal Life
லா.ச.ரா சென்னையில் வாஹினி பிக்சர்ஸில் தட்டச்சுப் பணியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். திரைப்பட இயக்குனரான கே. ராம்நாத்தின் அறிவுத்தலின் பெயரில் தனது எழுத்து பணியை தொடரும்பொருட்டு வங்கியாளராகச் சென்றார். பஞ்சாப் நேஷனல் பேங்க்கில் 30 ஆண்டுகள் லா.ச.ரா பணியாற்றினார். இறுதியாக தென்காசி கிளைமேலாளராக பணியாற்றி 1976ல் ஓய்வுக்குப் பிறகு சென்னையில் குடியேறினார்.
லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமாவதி. இவருக்கு ஜெயராமன், சப்தரிஷி, சந்திரசேகரன், ஸ்ரீகாந்த் என்னும் மகன்களும் காயத்ரி என்னும் மகளும் உள்ளனர். லா.ச.ராமாமிர்தத்தின் மகன் லா.ரா. சப்தரிஷி தமிழில் கதைகளும் கட்டுரைகளும் எழுதுபவர்.
Literary Life
Beginning
லா.ச.ரா வின் தாத்தா தமிழ்ப் பண்டிதர், நோட்டுப் புத்தகங்களில் பாடல்களாக எழுதிக் குவித்து வைத்திருந்தார். அவை ’பெருந்திரு’ (திருமகள்) மீது புனையப் பட்டவை. அதை ஒரு இடையறாத தியானமாக, அன்றாட வழிபாடாக அவர் செய்து வந்தார். லா.ச.ராமாமிர்தம் தன் முன்னுதாரணமாக கொண்டது அந்த முறையைத்தான் என குறிப்பிடுகிறார்.
லா.ச.ராமாமிர்தம் தன் பதினாறு வயதிலேயே எழுத ஆரம்பித்து விட்டதாக குமுதம் ஜங்ஷன் இதழில் வெளியான நேர்காணலில் நினைவு கூர்ந்திருக்கிறார். லா.ரா.சப்தரிஷி அவர் எழுதிய லா.ச.ரா பற்றிய நூலில் லா.ச.ரா எழுதிய முதல் படைப்பு 18 வயதில் ஆங்கிலத்தில் எழுதிய Babuji என்னும் கதை என்று குறிப்பிடுகிறார். மதம்பிடித்த யானை பற்றிய கதை அது. இறுதிப்படைப்பு Boyfriend.
தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ரா), லா.சா.ராவின் இலக்கிய வழிகாட்டியாக மணிக்கொடி தமிழ் இலக்கிய ஆளுமைகளின் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் ஒவ்வொரு நாள் மாலையும் மெரினா கடற்கரையில் கூடி நடத்தும் இலக்கிய விவாதங்களில் ஆர்வமாக பங்கேற்ற லா.ச.ரா, இந்த விவாதங்கள் ஒரு இலக்கியப் பயிலரங்கம் போல இருந்ததாகவும், அது உலக இலக்கியத்தை தனக்கு அறிமுகம் செய்ததாகவும் கூறுகிறார்.
Novels
லா.ச.ரா தொடக்கத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிவந்தார். 1966-ல் தனது 50-வது வயதில் ‘புத்ர’ என்னும் தனது முதல் நாவலை எழுதினார். வாசகர் வட்ட வெளியீடாக அந்நாவல் பிரசுரிக்கப்பட்டது . 1970ல் அபிதா என்னும் நாவலை லா.ச.ரா எழுதினார்.
Biographies
லா.ச.ரா பாற்கடல், சிந்தா நதி என்னும் இரண்டு தன் வரலாற்றுக் குறிப்புகளை நினைவோட்ட முறையில் எழுதினார். இவை தினமணிக் கதிர் இதழில் வெளிவந்தன. லா.ச.ராவுக்கு 1989-ல் சாகித்திய அகாதமி விருது பெற்றுத் தந்த சுயசரிதை சிந்தாநதி தினமணி கதிரில் தொடராக வந்தது.
Style
தொடக்க காலக் கதைகளில் இருந்தே லா.ச.ராமாமிர்தம் தனக்கென ஒரு நடையை உருவாக்கி கொண்டார். உச்சாடனத்தன்மை கொண்டதும், இசையோட்டம் ஊடாடுவதும், சொல்விளையாட்டுக்களும் படிமங்களும் பயின்றுவருவதுமான நடை அது. லா.ச.ரா கதைகள், நாவல்கள், கட்டுரைகள் அனைத்திலும் அந்த நடையே உள்ளது மாயத்தன்மையும் உளமயக்கும் கொண்ட கூறுமுறை அவருடையது. ‘கண்ணாடியில் பிம்பம் விழும் சத்தம் எனக்கு கேட்கிறதே, உனக்கு கேட்கிறதோடி?” என்னும் அவருடைய வரி லா.ச.ரா நடைக்கான உதாரணம்.
Translations
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட பெருந்தொகை, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" ஆகியவற்றில் லா.ச.ரா இடம்பெற்றுள்ளார்.. செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கூறுகிறார்
எழுத்துமுறை
லா.ச.ரா தன் எழுத்துமுறை பற்றி இவ்வாறு சொல்கிறார் “ எத்தனை விதங்களில் எழுதினாலும், நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான்;உலகில் – அது உள் உலகமோ வெளியுலகமோ, அதில் நடக்கும் அத்தனையிலும், அத்தனையாவும் எனக்குக்கிட்டுவது என் நோக்குத்தான். ஆகையால் நான் எனக்காக வாழ்ந்தாலும் சரி, யாருக்காக அழுதாலும் சரி, அப்படி என் நோக்கில் நான்தான் இயங்குகிறேன், என் நோக்கில் நான் காண்பவர் காணாதவர் எல்லோரும் என் கதையுடன் பிணைக்கப்பட்டவரே. என் கதையின் பாத்திரங்களால், அவர்கள் ப்ரவேசங்களில் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் வேளைகளில் தான், நெடுநாளைய பிரிவின் பின் சந்திக்கும் பரபரப்பு, பரிமளம், ஜபமாலையின் நெருடலின் ஒவ்வொரு மணியும் தன் முறை வந்ததும்,தான் தனி மணி என அதன்மேல் உருவேறிய நாமத்தின் தன் பிரக்ஞையை அடையும் புது விழிப்பு.”(கங்கா -முன்னுரை )
Literary Significance
லா.ச.ரா.வின் படைப்புகள் பல இந்திய, அயல்நாட்டு மொழிகள் பலவற்றில் மொழியாக்கம் செய்யப்பட்டுப் பல இலக்கியத் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. சிகாகோ பல்கலைக்கழகம் வெளியிட்ட பெருந்தொகை, பெங்குவின் நிறுவனத்தார் வெளியிட்ட "நியூ ரைட்டிங் இன் இந்தியா" ஆகியவற்றில் லா.ச.ரா இடம்பெற்றுள்ளார்.. செக் மொழியில் இவரை மொழியாக்கம் செய்த கமீல் ஸ்வலபில் என்ற தமிழ் ஆய்வாளர் சுதந்திர இந்தியாவின் முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவராக லா.ச.ரா.வைக் கூறுகிறார்
தமிழில் நவீன இலக்கியம் யதார்த்தவாதம் வழியாகவே அறிமுகமாகியது. சமூகச்சூழலையும் உறவுகளையும் யதார்த்தமாக முன்வைப்பவை நவீனத்தமிழிலக்கியப் படைப்புகள். அச்சூழலில் முன்பில்லாத ஒன்றாக லா.ச.ராவின் படைப்புகள் வெளியாயின. அவை உணர்ச்சிமிக்க மொழிநடையும் மிகையதார்த்தச் சித்தரிப்பும் கொண்டவை. தொன்மங்கள், மாயநிகழ்வுகள், கனவுகள் ஊடாடிக்கலந்த புனைவுலகு லா.ச.ராவுடையது. அவர் அதற்காக உருவாக்கிக்கொண்ட நடை மிகையுணர்ச்சியும் அரற்றல் தன்மையும் கலந்த அகவயத்தன்மை கொண்டது. ஆகவே தமிழிலக்கியத்தில் மிகத்தனித்துவம் கொண்ட படைப்பாளியாக லா.ச.ராமாமிர்தம் நிலைகொள்கிறார்.
படிமங்களை வாரியிறைத்துச் செல்லும் எழுத்து லா.ச.ராவுடையது. பெண்மையின் ஒளியை, அழகை, வர்ண ஜாலங்களைத் தேடுவது தான் லா.ச.ரா எழுத்து கொள்ளும் ஆன்மீகமான தேடலாக இருக்கிறது. பெண்ணை காதலுடனும் மறைஞானத் தன்மையுடனும் அணுகுகிறார். அவருடைய கதைகளில் அவருடைய குடும்ப மரபாக வந்த ஸ்ரீவித்யா உபாசனை (தேவி உபாசனை) ஓர் உளநிலையாக வெளிப்பட்டபடியே இருக்கிறது. லா.ச.ரா வின் படைப்புகள் வீட்டையும், குடும்பத்தையும், பெண்களின் ஆளுமைகளையும் சித்தரிப்பவை. உறவுகளை விட்டு வெளியே செல்லாத உலகம் அவருடையது.
’லா.ச. ராமாமிருதம் வாசனைத் திரவியங்களின் நறுமணங்களைத் தமிழாக மாற்றிக்கொண்டு வந்தவர். இவருடைய கதைகளில் மரபு, விடுதலை பெற்று மனிதத் தன்மையின் சாராம்சத்தை எட்டாமல், வைதிக வாழ்வின் சாயல்களில் அழுந்திக் கிடக்கிறது. நெருக்கடிகளை உருவாக்கித் தீவிர அனுபவங்களைத் தரவல்லவர் என்றாலும் இவ்வனுபவங்களின் அர்த்தம் நமக்குப் புரிவதில்லை. பதற்றங்கள் கொண்ட உணர்ச்சிப் பிழம்பான இவரது கதாபாத்திரங்கள் கூடக் குடும்பத்துக்குள் முட்டி மோதிக்கொண்டு கிடக்கிறார்களே தவிர, எந்தத் தளைகளையும் அறுப்பதில்லை. உணர்ச்சிகரமான சம்பவங்களை உச்சஸ்தாயியில் வெளிப்படுத்தும் திறனிலும் மொழியின் புதிய பரிமாணங்களிலும் பிணைந்து கிடக்கிறது இவரது உயிர்’ என்று சுந்தர ராமசாமி லா.ச.ராமாமிர்தத்தை தன் கட்டுரையொன்றில் மதிப்பிடுகிறார்[1].
Death
லா.ச.ராமாமிர்தம் அக்டோபர் 30, 2007-ல் தனது 92 வயதில், சென்னையில் காலமானார்.
Awards
- 1989 சாகித்ய அக்காதமி
- 1991 அக்னி அக்ஷரா விருது
- 1994 கலைமாமணி
- 1995 இலக்கிய சிந்தனை ஆதிலட்சுமணன் விருது
- 1997 வானவில் பண்பாட்டு மையம் பாரதி விருது
- 2000 பதிப்பாளர் சங்க விருது
Biographies, Memorial Books
- லா.ச.ராமாமிர்தத்தின் மகன் லா.ரா.சப்தரிஷி லா.ச.ராமாமிர்தம் பற்றி வாழ்க்கை வரலாற்றை சாகித்ய அக்காதமிக்காக எழுதியிருக்கிறார்.
- கவிஞர் அபி லா.ச.ராமாமிர்தம் பற்றிய ஆய்வுக்காக முனைவர் பட்டம் பெற்றார்
- லா.ச.ராமாமிர்தத்தின் மனைவி ஹைமவதி அவரைப்பற்றி ஒரு நினைவுக்குறிப்பு எழுதியுள்ளார்
Works
லா.ச.ராவின் நூல்கள் 2007ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்களின் பட்டியல்
திரு.லா.ச.ராமாமிர்தம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
Novels
- புத்ர (1965)
- அபிதா (1970)
- கல்சிரிக்கிறது
- பிராயச்சித்தம்
- கழுகு
- கேரளத்தில் எங்கோ
Short Stories
- இதழ்கள் (1959)
- ஜனனி (1957)
- பச்சைக் கனவு (1961)
- கங்கா (1962)
- அஞ்சலி (1963)
- அலைகள் (1964)
- தயா (1966)
- மீனோட்டம்
- உத்தராயணம்
- நேசம்
- புற்று
- துளசி
- என் பிரியமுள்ள சினேகிதனுக்கு
- அவள்
- த்வனி
- அலைகள்
Memoirs
- சிந்தாநதி (1989-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்ற நூல்)
- பாற்கடல்
- நான்
- உண்மையின் தரிசனம்
- முற்றுப்பெறாத தேடல்
- விளிம்பில்
- சௌந்தர்ய
References
- Ambalin Silamboli, Jatayu on La. Sa. Ra's creative world, Tamil Hindu
- La. Sa. Ra's Speech, Azhiyasudargal
- La. Sa. Ra, Kannan Kumaran
- Appavin Rasigan (Fan of Appa), La. Ra. Saptarishi
- Poo Vanam, An article on La. Sa. Ra, Archives
- La. Ra. Saptarishi's Speech
- La. Ra. Saptarishi's Speech on La. Sa. Ra's wife
- A magician named La. Sa. Ra, Tamil Hindu
- Haimavathi Ramamirtham's memoirs
- La. Sa. Ra's short story Paarkadal, Archives
- La. Sa. Ra. endroru Manaveli Kalaigan, Vannanilavan
- La. Sa. Ra's stories, Azhiyasudargal
- La. Sa. Ra's short story collection, Sirukadhaigal.com
- La. Sa. Ra. nenaivaga oru naarkaali, M. Ramasamy