குடபுலவியனார்
குடபுலவியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.
வாழ்க்கை குறிப்பு
குடபுலவியனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். புலவியனார் என்னும் இயற்பெயரை கொண்டவர். புலவியனார் என்ற சொல்லுக்கு விரிந்த அறிவுடையவன் என்று பொருள். சேரர்கள் ஆட்சி செய்த குடநாட்டில் பிறந்தவர்.
இலக்கிய வாழ்க்கை
குடபுலவியனார் பாடிய பாடல்கள் புறநானூற்றில் 18 மற்றும் 19 வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்து போரில் வென்ற செய்தியை புறநானூறு 19 வது பாடலில் வாகை திணையில் அரசவாகை துறையில் அமையும் பாடலில் கூறியுள்ளார். தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நல்லாட்சியை நடத்துவதற்கான அறிவுரையாக புறநானூறு 18 வது பாடல் பொதுவியல் திணையில் முதுமொழிக்காஞ்சி துறையில் அமைந்துள்ளது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
புறநானூறு - 18
- கடல் சூழ்ந்து பரந்து விரிந்த உலகத்தை தன் முயற்சியால் வென்று புகழ் பெற்றவன் பாண்டியன் நெடுஞ்செழியன்.
- நெடுஞ்செழியனின் ஆட்சிக்கு உட்பட்ட மதுரை நகரின் அகழியில் நீர் நோக்கி தாழ்ந்திருக்கும் காஞ்சி பூவை வாளை மீன்களும் துள்ளி கவ்வும், பருத்த ஆரல், வரால், கெடிற்று மீன்கள் உலவும்.
- அரசனானவன் இவ்வுலகத்தும் இறந்த பின் செல்லும் மறுமை உலகத்தும் பெருமையடைய வேண்டுமெனில் நீர் வளத்தை பெருக்குதல் வேண்டும்.
- நீரும் நிலமும் சேர்ந்து உருவாதலே உணவாகும். அவ்வுணவே மக்களை வளமுற செய்து அரசனை சிறப்புற செய்யும். எனவே நிலத்தில் பயிர் விளைந்து செழிப்பதற்கு எற்றாவாறு நீர் நிலைகளை அமைத்தல் வேண்டும்.
புறநானூறு - 19
- தலையாலங்கானத்து போரில் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், ஒரு சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவெண்மான், பொருநன் ஆகியோர் இணைந்த கூட்டுப்படையை நெடுஞ்செழியன் வென்றார். அப்போர்க்களத்தின் காட்சி சொல்லப்படுகிறது.
- எமன் அனைத்து உயிர்களையும் கொல்வது போல நெடுஞ்செழியனின் தனிப்படை பிற அரசர்களின் கூட்டுப்படையை வென்றது.
- வேட்டுவன் புலி வரும் பாதையில் பெரிய கல்லை கட்டி பொறிவைத்து வேட்டையாடுவது போல, தகுந்த இடத்தில் சூழ்கை அமைத்து பகையரசர்களை வென்றான்.
- கணவனையும் புதல்வரையும் இழந்த மகளிரின் ஒப்பாரி எமனுக்கு அஞ்சும்படி கொடுமையாக இருந்தது.
- குருவி கூட்டம் போல பாய்ந்து சென்ற அம்புகள் எதிரிப்படையின் யானைகளை புண்படுத்தி, அவற்றின் தும்பிக்கைகளை அறுத்து முனை ஒடிந்த உழவு கலப்பை போல யானைகளை கொன்றன.
பாடல் நடை
புறநானூறு - 18
- திணை: பொதுவியல்
- துறை: முதுமொழிக்காஞ்சி
.............................………………………………………...
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம்
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே
நீரு நிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும்
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - குட்டுவன் கண்ணனார் முதலிய 80 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- புறநானூ று - 18:Tamilvu
- புறநானூ று - 19:Tamilvu
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.