first review completed

பஞ்சாமிர்தம் (இதழ்)

From Tamil Wiki
பஞ்சாமிர்தம் இதழ் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

பஞ்சாமிர்தம் (இதழ்) (1924) தமிழில் வெளிவந்த மாத இதழ். தமிழர்களின் அறவுணர்ச்சியை மேம்படுத்த அ. மாதவையா கொணர்ந்த இதழ்.

எழுத்து, வெளியீடு

1924-ல் சித்திரையில் அ. மாதவையா அவர்களால் தொடங்கப்பட்டது. மாதவையா பஞ்சாமிர்தம் இதழின் ஆசிரியராக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதன் அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று நடத்தினார். படைப்புகளைத் தேர்ந்தெடுத்தல், அச்சுக்கு அனுப்புதல், பிழை திருத்துதல், இதழ் கட்டமைப்பு, சந்தா உட்பட அனைத்தையும் மாதவையா பார்த்துக் கொண்டார். பெ.நா. அப்புசாமியும் இவருக்கு உதவியாக இருந்தார். மொத்தம் 25 இதழ்கள் வெளிவந்தன.

நோக்கம்

இதழின் தலையங்கத்தில் நோக்கம் பற்றி மாதவையா குறிப்பிடும்போது, “தமிழிலே மாதப் பத்திரிக்கைகள் பல வெளிவருகின்றன; எனினும், இவை பெரும்பாலும் ஒரு சில விஷயங்களையே கையாளுகின்றன. நமது நாகரிக வாழ்க்கைக்குரிய பல துறைகளையும் கருதி நடைபெறும் மாதப்பத்திரிக்கை நான் அறிந்தவரை தமிழில் ஒன்றேனும் இல்லை. இங்கிலீஷில் பலவும் , வங்காளி , குஜராத்தி , மராத்தி , தெலுங்கு முதலிய மொழிகளில் சிலவும் இத்தகைய பத்திரிகைகள் உள. மற்ற எவ்விதத்தினும் இந்தப் பாஷைகளுக்குத் தாழாததும் , யாவற்றினும் மேலான பழம்புகழ் இவை படைத்ததுமான நமது அருமைத் தாய் மொழிக்குள்ள இக்குறையை நிரப்புவது , என்னினும் மிக்க அறிவும் படிப்பும் முன் வராமையினால் , உள்ளவர் பணியாயினும் வேறு எவரும் நாட்டுப் பற்றும் பாஷாபிமானமும் உள்ள தமிழ் மக்களின் உதவியைக் கொண்டு உழைத்துப் பார்க்கத் துணிந்து, நான் முன் வரலானேன்" என்கிறார்.

பஞ்சாமிர்தம் இதழ் (நன்றி: அரவிந்த் சுவாமிநாதன்)

தனது நோக்கமாக மாதவையா, "ஆங்கு ஆங்கு முளைத்தெழும் தேசிய உணர்ச்சிப் பயிருக்கு இப்பத்திரிகை மூலமாய் ஊக்க உரம் இட்டு, அறிவு நீர் பாய்ச்சி , அவ்வுணர்ச்சியைத் தழைத்தோங்கச் செய்ய முயலுவது என் முக்கிய நோக்கம்.” என்றார்.

முகப்பு வாசகம்

"நான் ஒரு மானுடன்; நான் மதியாதன மானுடவாழ்வில் இலை"

பங்களிப்பாளர்கள்

உள்ளடக்கம்

அக்காலகட்டத்தைச் சார்ந்த பலரும் இவ்விதழில் கதைகள், கட்டுரைகள் எழுதினர். அ. மாதவையா பல கட்டுரைகள் இதழில் எழுதினார். கண்ணன் பெருந்தூது உட்பட நான்கு சிறுகதைகளையும் எழுதினார். பத்மாவதி சரித்திரத்தின் மூன்றாம் பகுதியினை அவ்விதழில் எழுதத் தொடங்கி, முழுமையடையாத தருணத்தில் மரணமடைந்தார். வி. விசாலட்சுமி அம்மாளின் "மூன்றில் எது?" சிறுகதை இவ்விதழில் வெளிவந்தது. தன் கற்றறிந்த நண்பர்கள், ஆர்வமுள்ள தனது மகன், மகள்களை எழுத ஊக்குவித்தார். மீனாம்பாள், அனந்த நாராயணன், லஷ்மி, விசாலாட்சி என அவரின் வாரிசுகள் இவ்விதழுக்கு பங்களித்தனர். லஷ்மி அம்மாள் வெளிநாட்டுக்கு படிக்கச் சென்றாலும் அங்கிருந்து கட்டுரைகள் அனுப்பினார். மா. அனந்த நாராயணனின் கதைகள் வெளியாயின. மாதவையாவின் குடும்பத்தினர் சேர்ந்து எழுதிய கதைகளை, பி.ஸ்ரீ.யைப் பதிப்பாசிரியராகக் கொண்டிருந்த தினமணி பிரசுராலயம் ‘முன்னிலா’ என்ற தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கிறது.

இலக்கிய இடம்

இவ்விதழ் இலக்கியத்துக்காக மட்டுமே நடத்தப்பட்டது.

உசாத்துணை

  • “விடுதலைக்கு முந்தைய தமிழ்ச் சிறுகதைகள் (1892-1947)”: தேர்வும் தொகுப்பும்: அரவிந்த சுவாமிநாதன்; 2021; யாவரும் பப்ளிஷர்ஸ்.


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.