கடலுக்கு அப்பால்
கடலுக்கு அப்பால் (1959) ப.சிங்காரம் எழுதிய நாவல். ப.சிங்காரம் எழுதிய இரு நாவல்களில் முதலில் வெளிவந்தது. தமிழில் உணர்வுநிலைகளை வலுவாகச் சொன்ன நாவலாக இது கருதப்படுகிறது
எழுத்து, வெளியீடு
ப.சிங்காரம் 1950-ல் இந்நாவலை எழுதினார். விடுமுறை எடுத்துக்கொண்டு சென்னை சென்று பதிப்பாளர்களை தேடியதாகவும், பல ஆண்டுகளாகியும் நூல் வெளியாகவில்லை என்றும் விமர்சகர் சி.மோகன் குறிப்பிடுகிறார். இந்நாவலை அவர் கலைமகள் நாவல்போட்டிக்கு அனுப்பினார். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. 1959-ல் கலைமகள் காரியாலய வெளியீடாக இந்நாவல் பிரசுரிக்கப்பட்டது.
கலைமகளின் இந்நாவல் வெளியானபோதிலும் இலக்கியக் கவனம் பெறவில்லை. 1959ல் கலைமகள் குடும்பப்பத்திரிகையாக மாறி இலக்கியவாதிகளின் கவனத்தில் இருந்து விலகிவிட்டிருந்தது. இந்நாவல் கலைமகளில் விருது பெறுவதற்குக் காரணம் இதில் கதாநாயகி தன் தந்தையின் ஆணையை காதலின்பொருட்டு மீறாமல் இருந்ததுதான். விருது பெற்ற ஊக்கத்தில் ப.சிங்காரம் இந்நாவலின் முன்நிகழ்வாக அமைந்த புயலிலே ஒரு தோணி நாவலை 1962-ல் எழுதி முடித்தார். ஆனால் அந்நாவல் பத்தாண்டுகள் கழித்து 1972-ல் கலைஞன் பிரசுரநிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அந்நாவலும் இலக்கியவிமர்சகர்களால் ஏற்கப்படவில்லை.
மறுவரவு
ப.சிங்காரத்தின் மீது மறுகவனம் விழுந்தது 1987-ல் சி. மோகன் புதுயுகம் பிறக்கிறது என்னும் இதழில் எழுதிய கட்டுரை வழியாகத்தான். 1998-ல் ப.சிங்காரம் மறைந்தபின் தமிழினி வெளியீடாக இந்நாவலும் புயலுக்கு அப்பால் நாவலும் ஒரே நூலாக வெளிவந்தன. அந்நூலில் ப.சிங்காரம் பற்றி ஜெயமோகன் வரலாற்று அபத்தத்தின் தரிசனம் என்னும் தலைப்பில் விரிவான ஆய்வுக்கட்டுரை ஒன்றை எழுதினார். புயலிலே ஒரு தோணி பின்னர் ஒரு முதன்மையான ஆக்கமாக கவனிக்கப்பட்டது. கடலுக்கு அப்பால் குறிப்பிடத்தக்க நாவலாக மதிப்பிடப்பட்டது.
கதைச்சுருக்கம்
இந்தோனேசியாவில் மைடான் நகரில் தன் உறவு முறையான செட்டியாரிடம் அடுத்தாள் வேலை பார்க்கும் செல்லையா இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து போராளியாகி, போர் முடிந்தபின் திரும்பவும் செட்டியாரிடம் வருகிறான். ஏற்கனவே தன் மகள் மரகதத்தை அவனுக்கு மணம்புரிந்துகொடுக்கும் எண்ணம் கொண்டிருந்த செட்டியார் போருக்குச் சென்றவன் தொழிலுக்கு சரிவரமாட்டான் என்று சொல்லி மணம்புரிந்து கொடுக்க மறுத்துவிடுகிறார். அவனை விரும்பும் மரகதம் தந்தையின் சொல்லை தட்டமுடியாதவள். செல்லையாவும் செட்டியார் முன் எதிர்த்துப் பேசமுடியாதவன். போர், இந்தியதேசிய ராணுவப்பணி போன்ற பெரிய வரலாற்று நிகழ்வுகள் நடுவே நடந்து முடிந்தாலும் சமூக உறவுகளும் மானுட உணர்வுகளும் முன்புபோலவே நீடிக்கின்றன. தங்கள் எல்லைகளை எவரும் மீறமுடிவதில்லை.
இலக்கிய இடம்
புயலிலே ஒரு தோணி நாவலின் சிறப்பான தாவிச்செல்லும் நடை, அங்கதம், கவித்துவத் தருணங்கள் இந்நாவலில் இல்லை. உணர்வுச்செறிவு மிகுந்த நாடகத்தருணங்கள் உள்ளன. ஆனால் அவை நம்பகமான முறையில் கூறப்பட்டுள்ளன. உலகப்போர் போன்ற பெரிய நிகழ்வுகளுக்கு பின் அன்றாட வாழ்க்கை திரும்புவதிலுள்ள சலிப்பும் வெறுமையும் சித்தரிக்கப்பட்டுள்ளது. போரில் பெருவீரனாக அறியப்பட்ட செல்லையா உலகியலில் அர்த்தமற்றவனாக ஆகிறான். எவரும் தங்கள் எல்லைகளை கடக்கமுடியாமல் சிக்கியிருக்கும் சித்திரத்தை இந்நாவல் அளிக்கிறது. ‘மனிதனால் தாங்கமுடியாத துயரம் என்று ஏதுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ என்ற புகழ்பெற்ற வரி இந்நாவலில் உள்ளது.
உசாத்துணை
✅Finalised Page