கல்பொரு சிறுநுரையார்
கல்பொரு சிறுநுரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடிய பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.
வாழ்க்கை குறிப்பு
கல்பொரு சிறுநுரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவரது பாடலில் இடம்பெற்றுள்ள 'கல்பொரு சிறுநுரை’ என்ற உவமையின் சிறப்பை முன்னிட்டு, அதையே புலவரின் பெயராக கொண்டனர்.
இலக்கிய வாழ்க்கை
கல்பொரு சிறுநுரையார் பாடிய ஒரு பாடல் குறுந்தொகையில் 290-வது பாடலாக அமைந்துள்ளது. பொருள் தேட பிரிந்து சென்ற தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரை பொறுத்துக் கொள்ளும்படி சொல்லும் தோழியிடம், தன் பிரிவு துயரின் வலியை தலைவி வெளிப்படுத்துவதாக அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
தலைவனின் பிரிவினால் ஏற்பட்ட துயரை பொறுத்துக் கொள்ளும்படி சொன்ன தோழியிடம் தலைவி கூறுவதாக அமைந்துள்ள பாடல்.
- அன்புக்குரியவரின் பிரிவினால் ஏற்படும் துன்பத்தை தாங்கி கொள்ளும்படி சொல்பவர்கள் அத்தகு பிரிவு துன்பத்தை அறிந்திராதவர்களாக இருப்பர். அல்லது அத்துன்பத்தை தாங்கும் மனவலிமையை பெற்றிருப்பர்.
- உவமை: பெருவெள்ளத்தால் ஏற்பட்ட நுரைக்குமிழிகள், கற்பாறை மேல் மோதி மோதி அழிந்து காணாமலாவது போல் நானும் பிரிவு துயரால் வருந்துகிறேன்.
பாடல் நடை
குறுந்தொகை - 290
- துறை: வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் அழிவுற்றுச் சொல்லியது.
காமந் தாங்குமதி யென்போர் தாமஃ
தறியலர் கொல்லோ அனைமது கையர்கொல்
யாமெங் காதலர்க் காணே மாயிற்
செறிதுனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க்
கல்பொரு சிறுநுரை போல
மெல்ல மெல்ல இல்லா குதுமே
உசாத்துணை
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.