வாழ்க்கை வரலாறு (பயோகிராஃபி)

From Tamil Wiki
புதுமைப்பித்தன் வாழ்க்கை வரலாறு - தொ.மு.சி. ரகுநாதன்

வாழ்க்கை வரலாறு (biography) என்பது ஒரு குறிப்பிடத்தக்க மனிதரின்/ஆளுமையின் வாழ்க்கையை பற்றி எழுதும் நூல். இதனை அந்த ஆளுமையின் சமகாலத்தில் வாழ்ந்தவரோ அல்லது அவருக்கு பிற்காலத்தையவரோ எழுதுவர். அந்த ஆளுமையே தன்னைப் பற்றி எழுதும் வாழ்க்கை குறிப்பு நூல் சுய வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதை என்றழைக்கப்படுகிறது (எ.கா - சத்திய சோதனை மகாத்மா காந்தி).

இவ்வகை வாழ்க்கை வரலாற்று எழுத்துக்கள் வாழ்க்கை குறிப்பு போல் அல்லாமல் வெவ்வேறு வாழ்க்கை தருணங்களும், அனுபவங்களும் வழியாக ஒரு மனிதரின் ஆளுமையை அறியும் படி அமையும்.

வாழ்க்கை வரலாறு

ஆங்கிலத்தில் வாழ்க்கை வரலாறை எழுதுவது பதினாறாம் நூற்றாண்டில் அறிமுகமானது. ஆனால் அவ்வகை எழுத்து பதினெட்டாம் நூற்றாண்டு வரை இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. டாக்டர் சாமுவேல் ஜான்சான் எழுதிய ”கவிஞர்களின் வரலாறு” தான் முதன்முதலில் இலக்கிய வடிவமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின் போஸ்வெல் எழுதிய ”சாமுவேல் ஜான்சனின் வாழ்க்கை” இவ்வகை வரலாற்று எழுத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

எழுதும் முறை

ஒரு வாழ்க்கை வரலாறு நூல் என்பது ஒரு தனி மனிதனின் ஆளுமையை வெளிப்படுத்த அந்த மனிதரின் வெவ்வேறு வாழ்க்கை தருணங்கள் வழியாக அமைபவை. அவர் எழுதியவை, நாட்குறிப்புகள், கடிதங்கள், நினைவுப் பொருட்கள் என ஒரு ஆளுமையை நினைவுபடுத்த தொடர்புடைய எதுவும் வாழ்க்கை வரலாற்றின் ஆதாரமாக அமையும்.

அந்த ஆளுமையின் உறவினர்கள், நண்பர்கள் அவருடன் தொடர்புடைய யாரேனும் ஒருவரின் நினைவுகளும் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்த ஆளுமையின் குனநலன்கள், பண்புகள், அவர் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகள், அதனை ஒட்டி அவரின் எதிர்வினைகள் என எல்லாம் அந்த ஆளுமையை நன்கு அறிய உதவும். தற்காலத்தில் ஒரு ஆளுமையைப் புறவயமாக எதிர்கொள்வது வற்புறுத்தப்படுகிறது என தன் இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியத்தில் வாழ்க்கை வரலாறு பற்றிக் குறிப்பிடும் போது எம். வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.

தமிழில் வாழ்க்கை வரலாறு

மகாகவி பாரதியார் - வ. ராமசாமி ஐயங்கார்

தமிழகத்தில் 20 ஆம் நூற்றாண்டில் இருந்து தான் வாழ்க்கை வரலாறு இலக்கிய வடிவமாக அறிமுகமானது. ஆனால் ஆங்கிலத்தைப் போல தமிழிலும் பதினாறாம் நூற்றாண்டில் வெளிவந்த இரண்டாவது அச்சு நூல் துறவிகளின் வாழ்க்கை வரலாறாக அமைந்தது. இந்நூல் போர்த்துக்கீஸிய மொழியில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு.

தமிழில் உ.வே. சாமிநாதர் எழுதிய “மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம்” தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க வாழ்க்கை வரலாற்று நூல். சாமிநாதையர் காலச் சூழலின் சித்தரிப்பிற்கு முக்கியத்துவம் தருபவர். வரலாற்றின் நம்பகத் தன்மை மீது கவனம் செலுத்தக்கூடியவர் என எம். வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.

பாரதி, வ.வே.சு. ஐயர் இருவரின் வாழ்க்கை வரலாறும் இவ்வகை இலக்கியத்திற்கு தமிழில் எடுத்துக்காட்டாய் சொல்லப்படுகின்றன. “மகாகவி பாரதியார்” என்னும் நூலை வ. ரா என்றழைக்கப்படும் வ. ராமசாமி ஐயங்கார் எழுதினார். அவர் பாரதியைப் பற்றி எழுதிய பிற வாழ்க்கைக் குறிப்பைப் பற்றிக் குறிப்பிடும் போது, “பாரதியாரைப் பற்றித் தவறான அபிப்ராயங்கள் நாட்டில் உலவும் காலம் வந்திருக்கிறது. அவரைக் கண்டால் அல்லது காணுவதற்கே பயந்துகொண்டிருந்த பேர்வழிகளில் பலர் பாரதியாரோடு நெருங்கிப் பழகியதாகப் புரளிக் கதைகளை வெளியிடத் தொடங்கியிருக்கிறார்கள் ‘பணக்காரன் வீட்டிலே மாரடித்துக் கொள்ளுகிற’ இந்த நபர்களைப்பற்றி என்ன சொல்வது தெரியவில்லை” என்கிறார். ஆனால் வ. ரா எழுதிய பாரதியின் வாழ்க்கைக் குறிப்பு குறித்தும் ஆய்வாளர்கள் இதே கேள்வியை எழுப்புகின்றனர். வ. ரா பாரதியை ஒப்பற்ற ஆளுமையாக முன்வைக்கிறார். அவரது நூலில் பாரதி என்ற தனியாளுமையின் பலவீனம் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளன. பாரதியை ஆதரித்த ஆச்சாரியார் குடும்பத்தைச் சேர்ந்த யதுகிரி அம்மாவால் “பாரதி நினைவுகள்” எழுதப்பட்டுள்ளது. பாரதியின் மனைவி செல்லம்மாள் அவர் தொடர்பான நினைவுகளைப் பதிவு செய்துள்ளார்.

வ.வே.சு. ஐயரின் நண்பர் தி.செ.சௌ ராஜன் அவரது வாழ்க்கை வரலாற்றினை “வ.வே.ஸூ ஐயர்” என்ற பெயரில் எழுதியுள்ளார். இந்த வாழ்க்கை வரலாறு நம்பத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்படுகிறது. வ.வே.சு. ஐயரின் இறுதி நாட்களில் அவருடன் பணியாற்றிய சுத்தானந்த பாரதியார் “வீரவிளக்கு வ.வே.சு ஐயர்” என அவரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியுள்ளார். பிற்காலத்தில் பெ.சு.மணி, இலந்தை, சு. இராமசாமி ஆகியோர் வ.வே.சு. ஐயரின் வாழ்க்கை வரலாற்றினை எழுதியுள்ளனர்.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு பின்னாளில் அவருடன் பணியாற்றிய தொ.மு.சி. ரகுநாதனால் எழுதப்பட்டது. இந்நூலும் வ. ராவின் மகாகவி பாரதியார் போல் புதுமைப்பித்தனை தன்னிகரில்லாத ஆளுமையாக, வரலாற்று நாயகனாகக் காட்டும் நூல். தமிழில் எழுதப்பட்ட புகழ் பெற்ற வாழ்க்கை வரலாறு அனைத்தும் படைப்பாளிகள் சார்ந்ததே.

விதிவிலக்காக உலகப் போர் சூழலின் போது உலகப்போர் நாயகர்களைக் குறித்து அறிய மக்கள் ஆர்வம் கொண்டனர். இந்தச் சூழலில் ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின் வாழ்க்கை வரலாறுகள் பலராலும் எழுதப்பட்டன. “பாஸிஸ்டு ஜடாமுனி முசோலினி” என்ற நூல் புதுமைப்பித்தனால் எழுதப்பட்டது. சாமிநாத சர்மாவும் முசோலினி வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளனர். ”புதுமைப்பித்தன் எழுதிய வாழ்க்கை வரலாறுகள் வாழ்க்கை வரலாற்றிற்கான நாயகர்களின் வாழ்வை மதிப்பிடுவதாக அமைகின்றன” என எம். வேதசகாயகுமார் குறிப்பிடுகிறார்.

தமிழில் அரசியல் தலைவர்கள் பலரின் வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டுள்ளன. ஆனால் இவை எதுவும் ஆளுமைகளை மதிப்பிடும் நோக்கம் கொண்டவை அல்ல. புனைகதை வடிவில் வாழ்க்கை வரலாறு எழுதும் முயற்சியும் தமிழில் நிகழ்ந்துள்ளது.

உசாத்துணை

  • இலக்கியத் திறனாய்வுக் களஞ்சியம் - எம். வேதசகாயகுமார்