எழுதழல் (வெண்முரசு நாவலின் பகுதி - 15)
எழுதழல்[1] (‘வெண்முரசு’ நாவலின் பகுதி - 15) உப பாண்டவர்கள், உப கௌரவர்கள் ஆகியோரைப் பற்றிச் சித்தரித்துள்ளது. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை மிகவும் முற்றிவிடுகிறது. அந்தப் பகை அவர்களைப் போரை நோக்கி, இழுத்துச் செல்கிறது.
பதிப்பு
இணையப் பதிப்பு
‘வெண்முரசு’ நாவலின் 15-ஆம் பகுதியான ‘எழுதழல்’ எழுத்தாளர் ஜெயமோகனின் இணையதளத்தில் செம்டம்பர் 2017 முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு டிசம்பர் 2017-ல் நிறைவுற்றது. இது அவரது இணைய தளத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது. இணையத்தில் மின் பதிப்பாகவும் இது விலைக்குக் கிடைக்கிறது.
அச்சுப் பதிப்பு
கிழக்கு பதிப்பகம் எழுதழலை அச்சுப் பதிப்பாக வெளியிட்டது.
ஆசிரியர்
‘வெண்முரசு’ நாவலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.
கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்
உப பாண்டவர்கள் ஒன்பதுபேர், உப கௌரவர்கள் ஏறத்தாழ 1000 பேர், உப யாதவர்கள் 80 பேர், கர்ணனின் மகன்கள் 10 பேர் என இளைய தலைமுறையினரின் எழுச்சியை ‘எழுதழல்’ வெளிப்படுத்தியுள்ளது. இதில் இளைய யாதவர் என குறிப்பிடப்படும் கிருஷ்ணன் முன்வைக்கும் புதிய வேதத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் அணிகள் திரள்கின்றன.பாண்டவர்கள் தமக்குரிய நிலத்தைப் பெறுவதற்கும் ‘போர்’ ஒன்றே தீர்வு என்ற நிலை ஏற்படுகிறது. நடக்கப்போகும் பெரும்போரில் யாருடன் யார் எவ்வண்ணம் அமைகிறார்கள் என்ற வினாவே எழுதழலுக்கு அடிப்படையாகிறது. பாண்டவர்களின் 13 ஆண்டுகாலக் கடும்வாழ்வுக்குப் பின்னர் அவர்கள் போர் வேண்டாம் என்று நினைத்தாலும் அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் அவர்களைப் போரை நோக்கியே இழுத்துச் செல்கிறது.
கதை மாந்தர்
இளைய யாதவர், பலராமர், அபிமன்யூ, பாணாசுரன் ஆகியோர் முதன்மைக் கதைமாந்தர்களாகவும் அபிமன்யூ தவிர்த்த உப பாண்டவர்களும் குந்தி, தேவகி, முரளி, மயூரி முதலானோர் துணைமைக் கதைமாந்தர்களாகவும் இடம்பெற்றுள்ளனர்.
உசாத்துணை
- வெண்முரசு - எழுதழல் - 1 - வெண்முரசு
- வெண்முரசு விவாதங்கள்
- ‘எழுதழல்’ வாசிப்பு – முனைவர் ப. சரவணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- முனைவர் ப. சரவணன் | Search Results | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
இணைப்புகள்
- ↑ [வெண்முரசு - எழுதழல் - 1 - வெண்முரசு வெண்முரசு - எழுதழல் - 1 - வெண்முரசு (venmurasu.in)]
✅Finalised Page