இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை

இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளை (பிப்ரவரி 9, 1904 - ஜூன் 3, 1975) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.
இளமை, கல்வி
இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை - வேலுக்கண்ணம்மாள் இணையருக்கு பிப்ரவரி 9, 1904 அன்று பிச்சைக்கண்ணுப் பிள்ளை பிறந்தார்.
பிச்சைக்கண்ணுப் பிள்ளை முதலில் தந்தையிடம் இசைப்பயிற்சி பெற்றார். பின்னர் கூறைநாடு நடேச பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார்.
தனிவாழ்க்கை

நாதஸ்வரக் கலைஞர் மணக்கால் ஐயம்பேட்டையைச் சேர்ந்த பக்கிரிஸ்வாமி பிள்ளையின் மகள் கோவிந்தம்மாளை பிச்சைக்கண்ணுப் பிள்ளை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. கோவிந்தம்மாள் மறைந்த பின்னர் திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய பிள்ளையின் மகள் ஆச்சிக்கண்ணம்மாளை மணந்து மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்:
- இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளை(நாதஸ்வரக் கலைஞர்) - (கும்பகோணம் ராமையா பிள்ளை நாதஸ்வரக்காரரின் மகள் காமாக்ஷியை மணந்தார்)
- சாந்தநாயகி (கணவர்: நாதஸ்வரக் கலைஞர் திருப்பாம்புரம் ஷண்முகசுந்தரம் பிள்ளை)
- அபயாம்பாள் (கணவர்: திருப்பாம்புரம் சிவசுப்பிரமணிய நாதஸ்வரக்காரரின் மகன் ஹரிஹரன், பள்ளி ஆசிரியர்)
- லக்ஷ்மணன் (மூத்த சகோதரி சாந்தநாயகியின் மகள் அபயாம்பாளை மணந்தார்)
- இஞ்சிக்குடி கணேசன் (நாதஸ்வரக் கலைஞர்) - சகோதரர் இஞ்சிக்குடி கந்தஸ்வாமியுடன் நாதஸ்வரம் வாசித்தார். (ஹரித்வாரமங்கலம் சுப்பிரமணிய பிள்ளையின் மகள் கலாவதியை மணந்தார்)
இசைப்பணி
பிச்சைக்கண்ணுப் பிள்ளை பதினோறாவது வயதில் தந்தை இஞ்சிக்குடி கந்தஸ்வாமி பிள்ளையுடன் இணைந்து நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்தார்.
முடிகொண்டான் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்வில் சிறுவனாகிய பிச்சைக்கண்ணுப் பிள்ளையின் பூர்விகல்யாணி ராக வாசிப்பை வெகு நேரம் ரசித்த நாதஸ்வர விற்பன்னர் செம்பொன்னார்கோவில் ராமஸ்வாமி பிள்ளை தனக்கு அன்பளிப்பாக அளிக்கப்படவிருந்த தங்கப்பதக்கத்தை சிறுவன் பிச்சைக்கண்ணுப் பிள்ளைக்குக் கொடுத்து ஆசீர்வதித்தார். மதுரகவி பாஸ்கரதாஸ் பிச்சைக்கண்ணுப் பிள்ளையின் பூர்விகல்யாணி நாதஸ்வர வாசிப்பைக் கேட்டது குறித்து குறிப்பு எழுதியிருக்கிறார்[3].
சென்னை வானொலி நிலையம் தொடங்கியபோது அவ்விழாவில் பிச்சைக்கண்ணுப் பிள்ளையின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இலங்கை யாழ்ப்பாணத்துக்கு மும்முறை சென்று கச்சேரிகள் செய்திருக்கிறார். ஈரோடு அருகே உள்ள கள்ளிப்பட்டியில் ‘நாதஸ்வர ஜோதி’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது.
மாணவர்கள்
இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளையின் முக்கியமான மாணவர்கள்:
- மகன்கள் கந்தஸ்வாமி, கணேசன்
- கோவை சுப்பையா முதலியார்
- சிருங்கேரி சங்கரமடத்து வித்வான் திருநெல்வேலி அப்பாஸ்வாமி
- செட்டிப்பாளையம் மந்திரியப்ப முதலியார்
- முத்துப்பாளையம் அய்யாஸ்வாமி
- கேரளநாட்டுத் திருவள்ளா ராகவப் பணிக்கர்
தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்
இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:
- நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
- கூறைநாடு பழனிவேல் பிள்ளை
- தில்லையாடி கிடிகிட்டி ஸ்ரீநிவாஸ பிள்ளை
- கூறைநாடு கோவிந்தராஜ பிள்ளை
- திருநாகேஸ்வரம் ரத்னஸ்வாமி பிள்ளை
- கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
- நாச்சியார்கோவில் ராகவப்பிள்ளை
- திருவழுந்தூர் ராமதாஸப் பிள்ளை
- பெரும்பள்ளம் வெங்கடேசப் பிள்ளை
- காரைக்கால் சோணாசி பிள்ளை
விருதுகள்
- கலைமாமணி விருது, 1950 - தமிழ்நாடு இயலிசை மன்றம்
மறைவு
ஐம்பதாண்டுகள் நாதஸ்வரம் இசைத்த இஞ்சிக்குடி பிச்சைக்கண்ணுப் பிள்ளைக்கு 69-வது வயதில் பக்கவாதம் வந்தது. இரண்டு ஆண்டுகள் படுக்கையில் இருந்து, ஜூன் 3, 1975 அன்று காலமானார்.
உசாத்துணை
- மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013
அடிக்குறிப்புகள்
✅Finalised Page