under review

பொன் கோகிலம்

From Tamil Wiki
Revision as of 12:09, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
பொன் கோகிலம்

பொன் கோகிலம் (பிறப்பு: ஜூன் 8, 1985) வானொலி அறிவிப்பாளர், ஊடகவியலாளர், இலக்கிய செயல்பாட்டாளர், எழுத்தாளர். மலேசிய இளையோரிடம் எழுத்துத் துறை ஆர்வத்தை வளர்க்கச் செயல்படுபவர்.

பிறப்பு, கல்வி

பொன் கோகிலம், ஜூன் 8, 1985-ல் கோலாலம்பூர், பத்துமலையில் பிறந்தார். இவர் தந்தை கவிஞர் டி.எஸ். பொன்னுசாமி. தாயார் திருமதி ஆனந்தி ஆறுமுகம். உடன் பிறந்த மூவரில் பொன் கோகிலம் கடைசி பிள்ளை. அண்ணன் பொன் கோமகன். அக்காள், பொன் கோமளம்.

பொன் கோகிலம் தொடக்க கல்வியைப் பத்துமலை தமிழ்ப் பள்ளியில் 1997-ம் ஆண்டு முடித்தார். தாமான் செலாயாங் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரை பயின்றார். பிறகு, தனியாரில், ஆறாம் படிவத்தைத் தொடர்ந்தார். பகுதி நேரமாக, 2006-ல் வட மலேசியப் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் இளங்கலைப் படிப்பை முடித்த பின், இந்தியத் தூதரக உபகாரச்சம்பளத்தின் வழியாக, முதுகலைக் கல்வியை சென்னைப் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் 2012-ல் முடித்தார்.

தொழில்

மலேசியத் தகவல் அமைச்சின் கீழ் இயங்கும், மலேசிய வானொலியில் 2005-ல் பணியைத் துவக்கினார். 10 ஆண்டுகளாக மின்னல் பண்பலை அறிவிப்பாளராகவும், நிகழ்ச்சி தயாரிப்பாளராகப் பணியாற்றினார். அதன் பிறகு, (2016) மலாய் செய்திப் பிரிவின் நிருபராகவும், 2017 முதல் 2018 வரை, தாய்மொழி எனும் நாளிதழின் ஞாயிறு பதிப்பு ஆசிரியராக பணியாற்றினார். 2019 முதல் மலேசிய வானொலி பாடல் தரக் கட்டுப்பாடு பகுதியில் அதிகாரியாக பணியாற்றுகிறார்.

தனிவாழ்க்கை

பொன்கோ.jpg

பொன் கோகிலம், மலேசிய திரைத்துறை ஒளிப்பதிவாளர் திரு இராமேஸ்வரன் அண்ணாமலையை மணம் முடித்தார். இந்தத் தம்பதியருக்கு இயலணி, இயலினி என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர்.

இலக்கிய பணிகள்

தொடக்கம்

பொன் கோகிலம் தன் தந்தையை முன்மாதிரியாக கொண்டு தமிழ் உணர்வும் சமூக செயலூக்கமும் பெற்று வளர்ந்தார். தொடர்ந்து வார மாத இதழ்களில் சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிவந்தார். 2019-ம் ஆண்டு தேசிய நில நிதிக்கூட்டுறவு சங்கம் நடத்திய சிறுகதை போட்டியில் இவருக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது.

வானொலியில்

மின்னல் பண்பலையில், பொன் கோகிலம் 2008-ம் ஆண்டு'அமுதே தமிழே' இலக்கிய நிகழ்ச்சியின் தயாரிப்பாளராக அமர்த்தப்பட்டார். அமுதே தமிழே நிகழ்ச்சியின் தயாரிப்பாளராகப் பணியாற்றிய போது எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரடியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். மேலும், அந்நிகழ்ச்சி தயாரிப்புப் பணியின் வழி சங்க இலக்கியம், தொல்காப்பியம் போன்ற மரபு இலக்கிய அறிவை மேலும் பெருக்கிக் கொண்டார். கவிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்களின், தொல்காப்பியக் கடலின் ஒரு துளி எனும் ஐந்து நிமிட இலக்கண விளக்கவுரைதொடர் நிகழ்ச்சியை தயாரித்தது சிறப்பான அனுபவமாக அமைந்தது. கவிஞரின் அவ்வுரைகள் பின்னர் நூலாக தொகுக்கப்பட்டன.

வானொலியில் சிறுகதை தயாரிப்பாளராகப் பணியாற்றிய போது பல சிறுகதைகளை தேர்வு செய்து ஒலிபரப்பினார். சிறுகதை எழுத்தாளர்கள் பலர் இதனால் வானொலி வழி பரவலாக அறியப்பட்டனர். பி.எம். மூர்த்தி அவர்களின் முயற்சியில், என் நன்றிக்குரிய ஆசிரியர் எனும் நூலின் தொகுப்பாளராக 2012-ல் பணியாற்றியது இவருக்கு மேலும் விரிவான அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. பல பிரமுகர்களையும் ஆசிரியர்களையும் அடையாளம் காணவும் அவர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் நல்வாய்ப்பு அமைந்தது.

சிறுகதை

2020-ல் ‘அகிலம் நீ’ எனும் தலைப்பிலேயே தனது முதல் சிறுகதை நூலை வெளியிட்டார்.

அமைப்புப் பணிகள்

2018 -ம் அண்டு 'அகிலம் நீ' யுவதிகள் அமைப்பை தொடங்கினார். இளைஞர்களிடையே படைப்பூக்கத்தை மேலோங்கச் செய்யவும் அவர்களின் படைப்புகளை நூலாக வெளி கொண்டு வரவும் பொன் கோகிலம் இயல் பதிப்பகத்தை 2020- லும் மலேசிய இயல் எழுத்தாளர் மன்றத்தை 2021-லும் நிறுவினார். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும் இலக்கிய பயிற்சிகளும் வழங்குவதை முதன்மை நோக்கமாக கொண்ட இவ்வமைப்புகள் இளைஞர்களின் முதல் நூலை இலவசமாக வெளியீடு செய்யும் நோக்கத்தையும் கொண்டுள்ளன. இயல் பதிப்பகம் 2022-ல் முதல் ஐந்து புதுமுக எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டது.

பொன் கோகிலம் தலைமையில் இயல் எழுத்தாளர் மன்றத்தின் வழி பல இலக்கிய பயிற்சி வகுப்புகளும் பட்டறைகளும் நடத்தப்படுகின்றன.

இலக்கிய இடம்

பொன் கோகிலம் இலக்கியச் செயல்பாட்டாளராகக் கருதப்படுகிறார். இவர், மலேசியாவில் குறிப்பிடத்தக்க வானொலி அறிவிப்பாளர்.

சர்ச்சைகள்

  • பொன் கோகிலம் இயல் பதிப்பகம் வழி வெளியிட்டுள்ள நூல்களை விமர்சனம் செய்யும் முன் பதிப்பாளரின் அனுமதி பெற வேண்டும் என நூலின் முதல் பக்கத்தில் அச்சிட்டு வெளியிட்டுள்ளது இலக்கியச் சூழலில் அவரது ஜனநாயகமற்ற தன்மையை சக எழுத்தாளர்கள் விமர்சிப்பதாக அமைந்தது.
  • தன் இயக்கத்தை விமர்சித்த இளம் எழுத்தாளரான ஆதித்தன் மகாமுனியை நோக்கி இவர் வக்கீல் நோட்டிஸ் அனுப்பிய சம்பவம் மலேசிய இலக்கியச் சூழலில் ஒரு பின்னடைவு செய்கையாகக் கருதப்படுகிறது.
  • எழுத்தாளர் ம. நவீன் போன்றவர்கள் இவரது சிறுகதைகளைக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் பள்ளி மாணவர்களுக்கு இவர் நடத்தும் குறுங்கதை பட்டறைகள் குறித்தும் கடுமையாக விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.

விருதுகள்/பட்டங்கள்

  • இந்தியத் தூதரக கலை கலாச்சார மைய முன்னாள் மாணவர் விருது – 2019
  • ஆளுமைப் பெண் விருது – 2019 சென்னைப் பல்கலைக்கழகம்
  • 2022 உலக பெண் ஆளுமை விருது - விழுத்தெழு பெண்ணே அமைப்பு கனடா

வெளியிட்ட நூல்கள்

  • 2020 - அகிலம் நீ (சிறுகதை தொகுப்பு)
தொகுப்பாசிரியர்
  • 2012- என் நன்றிக்குரிய ஆசிரியர்
  • 2012- தொல்காப்பியக் கடலின் ஒரு துளி

இயங்கும் சமூக அமைப்புகள்

  • மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில், துணைப் பொருளாளராக, உதவித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார் (2018)
  • மலேசிய இந்திய காங்கிரசில் யுவதிகள் பிரிவு தேசியத் தலைவியாக பதவி வகித்துள்ளார் (2019)
  • அகிலம் நீ யுவதிகள் அமைப்பின் தலைவர் (2018)
  • மலேசியத் தமிழ் இயல் எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் (2021)
  • இயல் பதிப்பகத் தோற்றுநர் (2020)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 08-Sep-2023, 12:45:54 IST