under review

மலேசிய இயல் எழுத்தாளர் மன்றம்

From Tamil Wiki
ஃபியல்.png

மலேசிய இயல் எழுத்தாளர் மன்றம் 2021-ல் பொன் கோகிலத்தால் தோற்றுவிக்கப்பட்டது. மலேசிய இளைஞர்களிடையே படைப்பூக்கத்தை மேலோங்கச் செய்யவும் அவர்களின் படைப்புகளை நூலாகக் கொண்டு வரவும் இவ்வமைப்பு உருவானது.

தொடக்கம்

பொன் கோகிலம் இயல் பதிப்பகத்தை 2020-லும் இயல் எழுத்தாளர் மன்றத்தை 2021-லும் நிறுவினார். இலக்கிய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டுதலும் இலக்கிய பயிற்சிகள் வழங்குவதையும் முதன்மை நோக்கமாக கொண்ட இவ்வமைப்புகள் இளைஞர்களின் முதல் நூலை இலவசமாக வெளியீடு செய்யும் நோக்கத்தையும் கொண்டுள்ளன.

நடவடிக்கைகள்

வெண்பலகை

எழுத்தாளர் கே. பாலமுருகனை பயிற்றுநராக கொண்டு வெண்பலகை எனும் சிறுகதைப் புலனக் குழுவைத் தொடங்கி, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கலை வழியாக(online) சிறுகதை, வாசிப்பு, எழுத்து, பயிற்சி போன்றவை வழங்கப்பட்டு வருகின்றது.

கரும்பலகை

பல்கலைக்கழக, ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவர்களிடையே புதுக்கவிதை ஆர்வத்தை வளர்க்கும் முகமாக, கவிஞர் சிவாவின் வழிகாட்டுதலோடு கரும்பலகை எனும் மாதாந்திர கவிதை பயிலரங்குககள் நடத்தப்படுகின்றன. தொடர்ந்து, தமிழ்நாட்டிலிருந்து கவிஞர் வெய்யில் இளம் கவிஞர்களுக்கு நவீனக்கவிதைப் பயிலரங்கினை டிசம்பர் 10, 2022-ல் நடத்தினார். புதிய கவிஞர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு அவர்கள் எழுதும் சிறந்த கவிதைகள் அச்சு ஊடங்களில் வெளியிடப்படுகின்றனர்.

நூலிழை

கதைசொல்லி அமர்வு ஒவ்வொரு வாரமும் சிறுகதைகளை வாசித்து அதிலிருக்கும் கூறுகளை விவாதிக்கும் களமாக அமைகின்றது. வாசிப்பை மேம்படுத்தவும், பல எழுத்தாளர்களை அறிந்து கொள்வதற்கும் உதவுகிறது.

திறனாய்வு

தமிழக பேராசிரியர் அ. இராமசாமியின் வழிகாட்டுதலோடு மூன்று மாதங்கள் இணையம் வழி திறனாய்வு கல்வி வழங்கப்பட்டது.

விசைப்பலகை

நாவல்கள் எழுதுவதை ஊக்குவிக்கும் நோக்கில், நாவல் பயிலரங்கம் ஆகஸ்ட் 13, 2022 அன்று ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்குப் பயிற்சிகளை வழங்கினார்.

குறுங்கதைப் பயிலரங்கம்

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் 2022 -ஆம் ஆண்டு குறுங்கதைப்பயிலரங்கம் தொடங்கப்பட்டது. எழுத்தாளர் தயாஜி, இப்பயிலரங்கின் பயிற்றுநராகச் செயல்படுகிறார்.

பாடலாசிரியர் பயிலரங்கம்

மலேசியக் கலைத்துறையின் வளர்ச்சியில் உள்ளூர் பாடல்களின் தரத்தை கூட்டும் முயற்சியாக ‘பாடல் எழுதுவது எப்படி’ என்ற பயிலரங்கு கவிஞர் சினேகனின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டது. 2019-ல் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் இப்பயிலரங்கம் நடைபெறுகிறது. 2019 -ல் தமிழ்நாட்டில் இதன் பரிசளிப்பு விழா தமிழர் திருநாள் நிகழ்ச்சியில் நடைபெற்றது. மலேசியப் பாடலாசிரியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.


✅Finalised Page