second review completed

கோ. வில்வபதி

From Tamil Wiki

கோ. வில்வபதி(ஜூன் 12, 1921- அக்டோபர் 5, 1991) தமிழறிஞர், கல்வியாளர், எழுத்தாளர், பதிப்பாளர். இலக்கண நூல்களும், உரைகளும் எழுதினார்.

பிறப்பு,கல்வி

கோ. வில்வபதி திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் கோவிந்தசாமி -அபரஞ்சி இணையருக்கு ஜூன் 12, 1921 அன்று பிறந்தார். திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

கோ. வில்வபதி சென்னை, இந்து தியலாஜிகல் மேனிலைப் பள்ளியில் 37 ஆண்டுக்காலம் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

அமைப்புப் பணிகள்

கோ. வில்வபதி நீதிக்கட்சியின் தலைவரான கரந்தை எஸ். தர்மாம்பாள் தலைமையில் 1931-ல் உருவாக்கப்பட்ட சென்னை மாணவர் மன்றம் என்ற அமைப்பின் தலைவராகச் செயல்பட்டார். இவர் தலைமையில் மாணவர் மன்றப் பொன் விழா, மயிலை சிவமுத்து சிலை திறப்பு விழா போன்ற விழாக்கள் நடைபெற்றன. மயிலை சிவமுத்துவால் 'மன்றக் கண்மணி' என்றும் 'உரைமணி' என்றும் பாராட்டப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

வில்வபதி திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை ஆகிய சங்க இலக்கிய நூல்களுக்கும் கம்பராமாயணத்தின் பால காண்டம், அயோத்தியா காண்டம் ஆகிய பகுதிகளுக்கும் உரை எழுதினார். மாணவர்களுக்கான இலக்கண நூல்களை எழுதினார்.

தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தின் நூலாசிரியராகவும் மேலாய்வாளராகவும் பணிபுரிந்தார்.

இதழியல்

வில்வபதி 'நித்திலக் குவியல்' என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.

மறைவு

கோ. வில்வபதி அக்டோபர் 5, 1991 அன்று காலமானார்.

நூல்கள்

  • சிலையாகி நிற்கும் செம்மல்கள்
  • காவிரி
  • நன்னெறி கதைகள்
  • கம்ப இராமாயணம் பால காண்டம் தெளிவுரை
  • முல்லை பாட்டு இனிய எளிய உரை.
  • குறள் விளக்க கதைகள்.
  • திருக்குறள் விளக்கவுரை
  • மூவர் தமிழ் வாசகம்
  • கௌதம புத்தர் (நாடகம்)
  • மூவர் தமிழ் இலக்கணம்
  • முல்லைப்பாட்டு –இனிய எளிய உரை
  • நன்னூல் மூலமும் உரையும்

உசாத்துணை


✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.