under review

இலக்கணக் கொத்து

From Tamil Wiki
Revision as of 17:26, 30 September 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)

இலக்கணக்கொத்து (பொ.யு. பதினேழாம் நூற்றாண்டு) தமிழ் இலக்கண நூல். வடமொழி இலக்கண மரபைத் தழுவி சுவாமிநாத தேசிகரால் உரையுடன் இயற்றப்பட்டது. சைவ மடாலயங்களில் தமிழிலக்கணப் பாடமாகப் பயிலப்பட்டது.

பதிப்பு, வெளியீடு

இலக்கணக்கொத்து முதன்முதலில் யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலரால் 1866-ல் பதிப்பிக்கப்பட்டது. 1973-ல் தி. வே. கோபாலையர் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.

ஆசிரியர்

இலக்கணக்கொத்து நூலை இயற்றியவர் சுவாமிநாத தேசிகர். திருநெல்வேலி ஈசான மடத்தில் இருந்தார். வடமொழியிலிருந்து தமிழ் பிறந்தது என்னும் கொள்கையைக் கொண்டிருந்தார்.

நூல் அமைப்பு

இலக்கணக்கொத்து வடமொழி இலக்கணத்தைத் தழுவி எழுதப்பட்டது. இருமொழிகளிலும் இலக்கணம் ஒன்றே எனத் தேசிகர் குறிப்பிடுகிறார். பல நூல்களில் பலர் உரைத்துச் சிதறிக் கிடந்த இலக்கண விதிகளைக் கொத்தாக சேர்த்துத் தருதலின் இந்த நூலுக்கு இலக்கணக்கொத்து என்று பெயர் சூட்டப்பட்டது.

வடமொழி தமிழ்மொழி யெனுமிருமொழியினும்
இலக்கணம் ஒன்றே யென்றே யெண்ணுக

இந்நூலில் பாயிரத்துடன் 131 பாடல்கள் உள்ளன, பாயிரம் 85 அடிகளைக் கொண்டது. சிறப்புப் பாயிரம் 31 அடிகளைக்கொண்ட நேரிசை ஆசிரியப்பா.

இலக்கணக்கொத்து வேற்றுமையியல் (52 பாடல்கள்), வினையியல் (22 பாடல்கள்), ஒழிபியல் (45பாடல்கள்) என்னும் மூன்று இயல்களாக இயற்றப்பட்டுள்ளது.

வேற்றுமையியல்
  • வடமொழியில் வேற்றுமை
  • வேறுபடுத்தலால் வேற்றுமை
  • வேற்றுமை உருபு
  • இரண்டாம் வேற்றுமை உருபு
  • வினைமுதலை விளிக்கும் எட்டாம் வேற்றுமை
  • மூன்றாம் வேற்றுமை
  • 3,4,5 வேற்றுமை
  • 5,6 ஆம் வேற்றுமை
  • ஏழாம் வேற்றுமை
  • வேற்றுமை மயக்கம்
  • வேற்றுமைப் பொருள்
வினையியல்
  • முற்று, எச்சம்
  • வினை வகைகள்
  • படு - துணைவினை
  • அசைதல்
  • பெயர் வினை முற்று - எச்சம்
  • வேறு இல்லை உண்டு
ஒழிபியல்
  • வடசொல்லை எழுதுதல்
  • தொகுநிலை
  • சாரியை
  • புணர்ச்சி
  • பகுபதம்
  • எடுத்தல் படுத்தல் ஓசை
  • செய்து வாய்பாடு

பாடல் நடை

உயர்திணையியற்பெய ரஃறிணை யியற்பெய
ருயர்திணைப் பொருளிற் சாதி யொருமை
யஃறிணைப் பொருளிற் சாதியொருமை
யுயர்திணைப் பொருளிற் சாதிப் பன்மை
யஃறிணைப் பொருளிற் சாதிப் பன்மை
யொருசொன்னின்றே தனிந்தனி யுதவுத
லெனப்பிரிவேழென் றியம்புவர் புலவர்

உசாத்துணை


✅Finalised Page