under review

அமைச்சன் (இதழ்)

From Tamil Wiki
Revision as of 10:58, 4 December 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
அமைச்சன் மாத இதழ் முகப்புப் பக்கம்

அமைச்சன் (1963) சென்னையிலிருந்து வெளிவந்த பல்சுவை இதழ். கண. இராமநாதன் இதன் ஆசிரியர். நான்கு ஆண்டுகள் மட்டுமே வெளிவந்த இவ்விதழ் 1966-ல் நின்று போனது.

பிரசுரம், வெளியீடு

இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த கண. இராமநாதன், 1963-ல், சென்னையில், அமைச்சன் இதழைத் தொடங்கினார். தனது ஸ்டார் பிரசுரம் மூலம் இதழை வெளியிட்டார். இவ்விதழ் டெம்மி 1 × 8 அளவில் 96 பக்கங்களைக் கொண்டதாக வெளிவந்தது. விலை 50 காசுகள்.



கண. இராமநாதன் தலையங்கம்

உள்ளடக்கம்

சிறுகதைகள், கட்டுரைகளுக்கு, அறிவியல் செய்திகளுக்கு, துணுக்குகளுக்கு அமைச்சன் இதழ் இடமளித்தது. செய்திக் குறிப்புகள் என்ற பகுதியில் தமிழ்நாட்டின் பல்வேறு பஞ்சாயத்து யூனியன்களில் நடந்த நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. விக்டர் ஹுயூகோ, ஜார்ஜ் ஸாண்ட், செகி அந்தனோவ், சார்லோட் பிராண்ட்டி, ஜோகன் ருடால்ப் வைஸ், ஜேன் போர்ட்டர், ரிச்சர்ட் டாட்ரிட்ஜ் பிளாக்மோர் போன்ற பல வெளிநாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், ரகுநாதனால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகின. கண. ராமநாதனின் மனைவி, கோமதி இராமநாதன் செட்டிநாட்டுச் சமையற்கலை பற்றிப் பல கட்டுரைகளை எழுதினார். சிறுவர்களுக்கான பகுதியில் கதைகள், பாடல்கள், புதிர்கள் இடம்பெற்றன. அவற்றை நாக. முத்தையா எழுதினார்.

'கிராம வைத்தியம்', 'உடலினை உறுதி செய்' போன்ற மருத்துவம் சார்ந்த கட்டுரைகள் வெளியாகின. நூலகம் பற்றி, நூல்கள் பற்றிப் பல கட்டுரைகள் வெளிவந்தன. நூல் மதிப்புரை இடம் பெற்றது. விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல கட்டுரைகள் வெளியாகின. ‘திருச்சிற்றம்பலக் கவிராயர்’ என்ற புனைபெயரில் ரகுநாதன் எழுதிய பல கவிதைகள் இடம் பெற்றன. கண. இராமநாதனின் தலையங்கங்கள் இதழ் தோறும் வெளிவந்தன. ஸ்டார் பிரசுரம் வெளியிட்ட நூல்கள் பற்றிய விளம்பரங்கள், சுவையான செய்தித் துணுக்குகள், பொது அறிவுச் செய்திகள் வெளியாகின.

பங்களிப்பாளர்கள்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

அமைச்சன் இதழ் 1966-ல் நின்று போனது.

மதிப்பீடு

அமைச்சன் இதழ் அரசியல் நிகழ்வுகளுக்கு, பஞ்சாயத்து யூனியன்களில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகள் வெளியிட்டது. சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கும், சிறார் படைப்புகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளித்தது. தமிழின் பல்சுவை இதழ்களுள் ஒன்றாக அமைச்சன் இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page