first review completed

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை

From Tamil Wiki
Revision as of 03:47, 19 November 2023 by Tamizhkalai (talk | contribs)

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை (1850-1932) ஓர் தமிழக எழுத்தாளர், இதழாளர், பத்திரிகை ஆசிரியர். சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். ‘மஹாவிகடதூதன்’, ’விநோதபாஷிதன்’ எனும் இரண்டு வார இதழ்களைத் தொடங்கி நடத்தினார். தமிழின் மூத்த தலித் எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர்களுள் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை, சென்னையில் 1850-களில் பிறந்தார். இவருடைய தந்தையார் அமிர்தகவி அப்பாவு ஒரு தமிழ்ப் பண்டிதர். பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை தந்தையிடம் தமிழ் கற்றார். ஆங்கிலம், தெலுங்கு மொழிகளைக் கற்றுக் கொண்டார். சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார்.

தனி வாழ்க்கை

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை மணமானவர். மகன்: தாசன். குடும்பம் பற்றிய பிற விவரங்களை அறிய இயலவில்லை.

இலக்கிய வாழ்க்கை

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை மஹா விகட தூதன் இதழில் பல கதை, கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலத்திலிருந்து பல கதைகளை, நூல்களை மொழிபெயர்த்து அவ்விதழில் வெளியிட்டார். அவை பின்னர் நூல்களாக வெளிவந்தன.

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை எழுதிய பூலோக விநோதக் கதைகள் ஐந்து தொகுதிகளாக வெளிவந்து ஆயிரக்கணக்கான பிரதிகள் விற்றது. படங்களுடன் வெளிவந்த தொகுப்பு நூலான இது, பரவலான வரவேற்பைப் பெற்றது.

இதழியல்

பா.அ.அ. இராஜேந்திரம் பிள்ளை, மஹா விகட தூதன் என்ற வார இதழை 1886-ல் தொடங்கினார். அவரே உரிமையாளர், வெளியீட்டாளர், அச்சகர். 1927 வரை இவ்விதழ் வெளிவந்தது. 1893-ல் இவ்விதழ் 1500 பிரதிகள் விற்பனையானது.

மஹா விகட தூதன் இதழ் குறித்து, எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, அமிர்த குணபோதினி இதழில் எழுதிய “சென்று போன நாட்கள்’ கட்டுரையில், “ஸ்ரீ பிள்ளையவர்கள் 1910-ம் வருஷத்தில் அரசாங்கக் கிளர்ச்சி அதிகமாயிருந்த சமயம் மஹாவிகடதூதன் பத்திரிகையை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டார். பின்னர் தாம் தமது பத்திரிகையை இழந்ததற்கு வருந்திப் புதிதாக ’விநோத பாஷிதன்’ என்ற வாராந்திர விகடப்பத்திரிகையைத் தொடங்கி ஒரு வருஷம் போல் நடத்தினார். பிறகு மஹாவிகடதூதன் பத்திரிகை தமக்குத் திரும்பவும் கிடைக்கவே, விநோத பாஷிதனை நிறுத்திவிட்டு மறுபடியும் விகடதூதன் பத்திரிகையைத் தொடங்கி நடத்திவந்தார். சந்தாதாரர்களில் வெகுபேர் சந்தா பாக்கிகளை ஏராளமாக வைத்துக்கொண்டு 'பட்டுக் குல்லா'வும் சாத்தினர். அதனால் மனம் நொந்து மாதப்பத்திரிகையாகவும் சில காலம் விகடதூதனை வெளியிட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மறைவு

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை, ஜனவரி 1932-ல் காலமானார்.

மதிப்பீடு

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை, தமிழின் முன்னோடி தலித் இதழாசிரியர், எழுத்தாளர், பதிப்பாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். மஹா விகட தூதன் இதழை நாற்பது ஆண்டுகள் தொடர்ந்து வெளியிட்டது, தலித் இதழியல் வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது.

பா. அ. அ. இராஜேந்திரம் பிள்ளை பற்றி எஸ்.ஜி. ராமாநுஜலு நாயுடு, அமிர்த குணபோதினி இதழில் எழுதிய ‘சென்று போன நாட்கள்’ கட்டுரையில், “தமிழ்ப் பத்திரிகைகளே அபூர்வமாயிருந்த பழங்காலத்தில் புதுவிதமாகப் பத்திரிகையை ஸ்தாபித்து, ஆரம்பத்தில் கொண்ட கொள்கையையும், பத்திரிகையின் ஒரு தனி அமைப்பையும் கடைசி வரையிலும் கலைக்காது காத்து, ஒரே சீராய், ஒழுங்காய், தலைமையாய், பிரபலமாய் நடத்தி அரும்புகழ்பெற்ற ஆசிரியர்களுக்குள் முதன்மையாக நிற்பவர் ஐநவிநோதிநிப் பத்திரிகையின் ஆசிரியரான திவான் பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் அவர்களாவர். அவருக்குப் பின் சுதேசமித்திரன் ஆசிரியர் ஸ்ரீமான் ஜி. சுப்பிரமணிய ஐயரவர்களாவர். அதற்குப் பின் மூன்றாவதாக ஸ்ரீமான் பா.அ.அ. (B.A.A.) இராஜேந்திரம் பிள்ளை அவர்களைக் குறிப்பிடலாம்.” என்று மதிப்பிட்டுள்ளார்.

நூல்கள்

எழுதியவை
  • உலகம் ஒரு நீதிக்கதை (1868)
  • இன்பமும் துன்பமும் (1875)
  • உழைப்பே செல்வத்திலும் பெரிது (1884)
  • இளமையில் கல் (1889)
  • விகட பல பாடல் திரட்டு
  • விகட வெற்றி வேற்கை
  • விகட உலக நீதி
  • விகட விவேக சிந்தாமணி
  • ஜெகசால சித்தர் பாடல்
  • ஆதாம் ஏவாள் விலாசம்
  • பூலோக விநோதக் கதைகள் (ஐந்து தொகுதிகள்) (1897 – 1922)
மொழிபெயர்ப்பு
  • ராணி எஸ்தர் (1870)
  • ஈசா ரெபேக்கா திருமணம் (1895)

உசாத்துணை

  • சென்றுபோன நாட்கள், ஆ.இரா. வேங்கடாசலபதி, காலச்சுவடு வெளியீடு, முதல் பதிப்பு ஏப்ரல், 2015
  • பூலோகவியாஸன் இதழ், ஜெ. பாலசுப்பிரமணியம், காலச்சுவடு வெளியீடு
  • சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை, ஜெ. பாலசுப்பிரமணியம், காலச்சுவடு வெளியீடு


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.