first review completed

புருஷாதேவி கதை

From Tamil Wiki
Revision as of 10:03, 10 November 2023 by Tamizhkalai (talk | contribs)

புருஷாதேவி கதை தென் தமிழகத்தில் வழங்கும் நாட்டார் வாய்மொழிக் கதைகளில் ஒன்று. இக்கதையின் ஆதார நிகழ்வு தென்காசியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. புருஷாதேவி தென்காசியில் காட்டாளம்மனாகக் கோவில் கொண்டாள். புருஷாதேவி இப்போது காட்டாளம்மனாக வழிபடப்படுகிறாள். புருஷாதேவி பொன்னிறத்தாளை பலி கேட்டு ஏவியதாக நம்பப்படுகிறது. இக்கதைப்பாடலை செம்பமுற மன்னன் பாட்டு என்றும் அழைப்பர்.

பார்க்க: பொன்னிறத்தாள் கதை

புருஷாதேவி கதை

புருஷாதேவி/செம்பமுற மன்னன் வில்லுப்பாட்டு கதை

புருஷாதேவி அர்ஜூனனின் காதலி அல்லி போல் வீரம் பொருந்தியவள். தன் வாழ்நாளில் ஆண்வாடை வேண்டாமென வாழ்ந்தவள். தன் அரசில் வீராங்கனையாக திகழ்ந்தாள்.

ஒரு நாள் செம்பமுற மன்னன் தன் குதிரையில் வேட்டைக்கு வந்தான். தன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த புருஷாதேவியைக் கண்டு அவள் மேல் காதல் கொண்டான். தன் காதலை வெளிப்படுத்த புருஷாதேவியை அணுகினான். ஆண் மகன் ஒருவன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட புருஷாதேவி சீற்றம் கொண்டாள். வேகமாக பறந்து வந்து செம்பமுற மன்னன் மேல் சாடினாள். ஒரு பெண் தன்னுடன் சண்டைக்கு வருவதைக் கண்ட செம்பமுற மன்னன் கோபம் கொண்டான்.

இருவருக்கும் இடையேயான சண்டை போராக மாறியது. செம்பமுற மன்னன் புருஷாதேவியுடன் போர் செய்தான். போர்களத்திலேயே புருஷாதேவி இறந்தாள். புருஷாதேவி இறந்த செய்தி அறிந்ததும் செம்பமுற மன்னன் தன் வாளின் மேல் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டான்.

புருஷாதேவி காட்டாளம்மனாக மாறி தென்காசி காட்டில் கோவில் கொண்டாள். காட்டாளம்மன் தன் பேய்ப்படைகளைக் கள்ளர்களாக அனுப்பி பொன்னிறத்தாளை பலி கொண்டாள். பொன்னிறத்தாளும் தெய்வமான பின்னர் இருவரும் சேர்ந்து மதுரை படைவீட்டை அழிக்கச் சென்றனர்.

பெண்ணரசியர் வில்லுப்பாட்டு கதை

திருவணையாள் அரசி தன் நாடு செழிக்க ஏழு தோழியர்களுடன் பெண்கள் வாழும் ஒரு நாட்டை ஆட்சி செய்து வந்தாள். ஆண் வாடை இல்லாததால் தன் நாடு செழிப்புடன் இருப்பதாக அரசி நம்பினாள். நாட்டில் அனைத்து செல்வமும் இருந்தபோதும் தான் மகப்பேறு இல்லாமல் இருப்பதால் கவலையுற்றாள். அப்போது பெண் தானாகக் கருவுறும் சிங்களக் காற்று வீசியது. அதன் காரணமாக பெண்ணரசி கர்ப்பமுற்றாள்.

பத்து மாதமும் கருவை பத்திரமாக பேணிவந்த பெண்ணரசி பத்தாவது மாதத்தில் தன் தோழியர்களாலும், அரச சேவகர்களாலும் கட்டப்பட்ட தனிமாடத்தில் தன் நாட்டின் நியதிப் படி பெண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். பெண்ணரசி அக்குழந்தைக்கு புருஷாதேவி எனப் பெயரிட்டாள்.

புருஷாதேவி அரசவையில் இளவரசியாக சகல மரியாதையுடன் வளர்ந்தாள். புருஷாதேவி தன் ஏழு வயதில் கல்வி கற்க விரும்பினாள். பெண்ணரசியும் அவள் விருப்பத்தை ஏற்று கல்வி கற்க அனுப்பினாள். புருஷாதேவி கல்விப் பயிற்சியோடு சிலம்பாட்டம், வாள்சண்டை, நடனம், குதிரையேற்றம், வேதக் கல்வி என அனைத்தும் கற்று தேர்ச்சி பெற்றாள்.

கல்வியில் புருஷாதேவியின் பன்னிரெண்டு வருடம் கடந்தபின் சிங்களக் காற்று வீசி கருவுற்றாள். தன் மகள் கர்ப்பமானதை அறிந்த பெண்ணரசி மகிழ்ச்சியுற்றாள். அரண்மனை சேவகர்களை புருஷாதேவியை நன்கு கவனிக்கும் படி ஆணையிட்டாள். புருஷாதேவி கர்ப்பமுற்றத்தை சிறப்பிக்கும் வண்ணம் அரச தோழியரும் நாட்டு மக்களும் வானுயர கோட்டை கட்டும் எண்ணம் கொண்டனர். மூன்று மாதத்தில் கோட்டை கட்டி முடிக்கவும் பெண்ணரசியும், புருஷாதேவியும் அக்கோட்டைக்குச் சென்றனர். ஒன்பது மாத கர்ப்பிணியான புருஷாதேவியை புதிய கோட்டையில் வைத்து பெண்ணரசி பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள்.

பெண்ணரசியின் அண்டை நாட்டு அரசன் செம்பன்மாமுடி காசி யாத்திரை செய்ய வேண்டி புருஷாதேவி வசித்த கோட்டை வழி சென்றான். ஆண் மகனைக் கண்ட பெண்ணரசியும், புருஷாதேவியும் அவனைத் தடுத்து நிறுத்தினர். தான் செம்பமுற நாட்டு மன்னன் எனச் சொன்ன பின்பும் இருவரும் வழிவிட மறுத்தனர். இச்செயலால் கோபம் கொண்ட செம்பன்மாமுடி பெண்ணரசி நாட்டைக் கப்பம் கட்டும் படி கூறினான். பெண்ணரசி அதற்கு மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே போர் மூண்டது.

முதல் போர் பெண்ணரசி குதிரை, யானை, காலாட் படைகளோடு, தன் மகள் புருஷாதேவி, தோழியர் துணை கொண்டு செம்பன்மாமுடியை வென்றாள். பெண்ணரசி நாட்டில் அனைவரும் திறம்பட நடந்தமையால் செம்பன்மாமுடி தோற்று பின்வாங்கினான். தோல்வியின் அவமானத்தால் மேலும் சினம் கொண்ட செம்பன்மாமுடி தன் நண்பன் காடத்தி நாட்டு அரசனிடம் படைகளைப் பெற்றுக் கொண்டு பெண்ணரசி நாட்டின் மேல் மீண்டும் போர் செய்தான்.

இரண்டாவது போரிலும் பெண்ணரசி படைகள் திறம்படப் போர் செய்தனர். போரின் இடையே தோல்வியை தாங்கள் தழுவ நேரிடுமோ என்ற அச்சத்தில் தோழியர் அறுவரும் வாளால் தங்கள் உடலைப் பிளந்து மாண்டனர். தோழியர் இறப்பதைக் கண்ட பெண்ணரசி வாளால் தன்னுடலை இரண்டாகப் பிளந்து மாண்டாள். நிறைமாதக் கர்ப்பினியான புருஷாதேவி சூலத்தை எடுத்து வயிற்றில் உள்ள குழந்தை வெளியே எடுத்த பின் மாண்டாள்.

பெண்களின் வீரத்தையும், மாண்பையும் கண்ட செம்பன்மாமுடியும், காடத்தி அரசனும் வாளின் மேல் பாய்ந்து தங்கள் உயிரை மாய்த்தனர். உயிர்விட்ட அனைவரும் கைலாயம் சென்று சிவனிடம் வேண்டினர். சிவனின் வேள்வியில் மூழ்கி வரங்களைப் பெற்றனர். வரத்தின் பயனாக இசக்கி, ஆட்டுக்கார இசக்கி, செங்கிடாய்காரன், கழுக்காரன் போன்ற வடிவம் கொண்டு பல துணை வாதைகளுடன் பூலோகம் திரும்பினர். மதுரை நகரடைந்தவர்கள் மக்களுக்கு பலவித துன்பங்கள் கொடுத்தனர். ஒவ்வொரு மாசி வீதியாக சென்று பலி கேட்டுப் பெற்றனர்.

மதுரை நகர் மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்க மந்திரவாதி வேலவன் வாதைகளை அடக்க முன்வந்தான். இளவேலன் வேறு மந்திரவாதிகளையும் மலையிலிருந்து அழைத்து வந்தான். எல்லோரும் கூடி மன்னனிடம், "மன்னா மதுரையிலுள்ள வாதைகளை இப்போதே விரட்டுவோம். எங்களுக்கு வேண்டிய பொருட்களை தாருங்கள். வெள்ளரிசி, குருத்தரிசி, சாம்பிராணி, களபம், பூ, பழம், சர்க்கரை, 21 பூனைமுட்டை, 21 குதிரைமுட்டை, புலிமான் கொம்பு, நீலம் தீண்டா வெல்லம், 7 சாவல், 100 கோழி எல்லாம் வேண்டும்" என்றனர். மன்னன் அவர்களுக்கு தேவையான பொருட்களை வரும்படி செய்தான். மந்திரவாதிகள் பெரிய பரண்கட்டி நின்றனர். இளவேலன் அந்த பரண்மேல் உரலைக் கவிழ்த்து வைத்து அதன்மேல் நின்றான்.

பொன்னிறத்தாள் இளவேலனை ஓங்கி அடித்தாள். இளவேலன் அக்கணமே மாய்ந்தான். இளவேலனைக் கொன்ற பிறகு ஏழுகாணி என்னுமிடத்தில் மக்களால் நடத்தப்படும் பூஜையில் சாந்தி அடைந்தனர். பின் வெள்ளாளர்களில் ஒரு பிரிவினரான கரையாளர் நடத்தும் கூத்து பார்க்க கன்னியாகுமரி மாவட்டம் தாழாக்குடி ஊரைத் தெய்வங்கள் அடைந்தனர். வாதைகள் மகிழ்ச்சியில் கும்மாளமிட்டத்தைக் கண்ட மக்கள் பயந்து அஞ்சினர். அவர்களுக்கு பூஜை செய்து படையலிட்டனர். தெய்வங்களும், வாதைகளும் கோவில் அமைத்துக் கொள்ள நீலன் குறுப்பு வயலின் கிழக்கு பகுதியைக் கொடுத்தனர். தெய்வங்கள் அங்கே கோவில் அமைத்து குடிகொண்ட போது நீலன் தன் வயலை எடுத்ததால் கோபம் கொண்டு கோவிலை எரித்தான். கோவில் எரிவதைக் கண்ட வாதைகளும் தெய்வங்களும் நீலனை அழித்து மேலாங்கோட்டிற்கு அருகில் உள்ள கொடுங்கோட்டூர் மக்களுக்கு தொல்லை கொடுக்கத் தொடங்கினர். பின் திருவிதாங்கூர் அரசனின் பூஜைக்கு இறங்கி சாந்தி அடைந்தனர். திருவிதாங்கூர் மன்னனின் பூஜையைப் பெற்ற தெய்வங்கள் கன்னியாகுமரியில் தீர்த்தமாடி பகவதியிடம் வரம் பெற்று தெங்கன்புதூர் அருகிலுள்ள குளத்தங்கரை மறுகால் அய்யனாரை வழிபட்டு அவரருகில் தெய்வங்களாக அமைந்தனர்.

கதைப்பாடல்களின் காலம்

பெண்ணரசியர் கதைப் பாடலில், "வையகந் தன்னிலே பாண்டியெனும் நகர்தன்னை வரகுண மன்னனாண்டங் கிருக்கிற நாளில்" என்ற குறிப்பு வருகிறது. இதன் மூலம் இக்கதைப் பாடல் தென்காசியை வரகுண பாண்டியன் ஆண்ட 17-ஆம் நூற்றாண்டின் முதற்பகுதி அல்லது அதற்கு பிறகாக இருக்கலாம் என அறிய முடிகிறது

காட்டாளம்மன் கோவில்

இக்கதைப்பாடலில் வரும் காட்டாளம்மன் கோவில் தென்காசியில் கோட்டை வடிவில் இருந்தது எனப் பாடல் மூலம் அறிய முடிகிறது.

அந்நாளில் கள்ளரெல்லாம்
ஆகாவென்று கூடுவாராம்
கூடிய கள்ளரெல்லாம் காட்டாளம்மன்
கோவிலிலே
தென்காசிக் கோட்டையைப் போல்
அழகாய் நின்ற இடம்
காட்டாளச்சி கோவிலிலே கடிதாய்
கூடினரே.

என வருணிக்கிறது. தென்காசி பாழடைந்த கோட்டையைத் தான் நேரில் பார்த்ததாக 1820-ஆம் ஆண்டில் டர்னல் என்ற ஆங்கிலேயர் குறிப்பிடுகிறார் (A History of Tinnelvely, R. Caldwell, 1982, P54.) எனவே இக்கதைப்பாடல் 1820-க்கு முன் கோட்டை பாழடைவதற்கு முன்பு இயற்றப்பட்டதாக இருக்கலாம்.

உடையார் கதைப்பாடல் உடையார் தென்காசி வீதி வழியே சென்று கோட்டைக்குள் சென்ற நிகழ்ச்சியைக் குறிப்பிடுகிறது. இக்கதை 17-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். எனவே பொன்னிறத்தாள் கதை, புருஷாதேவி கதை இரண்டும் இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என ஆய்வாளர் அ.கா. பெருமாள் கருதுகிறார்.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.