being created

சாமி சிதம்பரனார்

From Tamil Wiki
சாமி சிதம்பரம்

சாமி சிதம்பரனார்(சாமி சிதம்பரம்) (டிசம்பர் 1, 1900 – ஜனவரி 17, 1961) தமிழறிஞர், ஆய்வாளர், கவிஞர், இதழாளர், எழுத்தாளர், திராவிட இயக்கச் செயல்பாட்டாளர்.

பிறப்பு,கல்வி

சாமி சிதம்பரம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள கடக்கம் எனும் சிற்றூரில் டிசம்பர் 1, 1900-ல் சாமிநாத மலையமான்- கமலாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக் கல்வியை கடக்கத்திலும், மயிலாடுதுறையிலும் நிறைவு செய்தார். மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் 1923-ஆம் ஆண்டு 'பண்டிதர்' பட்டம் பெற்றார். நீதிக்கட்சியின்மீதும், அதன்பின் சுயமரியாதை இயக்கத்தின்மீதும் ஈடுபாடு கொண்டார்.

தனி வாழ்க்கை

சாமி சிதம்பரம் 1930- ஆம் ஆண்டு சிவகாமி என்னும் கைம்பெண்ணை சுயமரியாதைத் திருமண முறையில் மணம் புரிந்தார். இத்திருமணம் ஈரோட்டில் நடைபெற்ற இரண்டாவது சுயமரியாதை மாநாட்டுப் பந்தலில் நடந்தது.

கல்விப் பணி

சாமி சிதம்பரனார் பண்டிதர் பட்டம் பெற்றதும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழாசிரியரகப் பணியாற்றினார். அப்போது உமாமகேசுவரனார், ஏ.டி. பன்னீர்செல்வம் ஆகியோரின் அறிமுகமும், நட்பும் கிடத்தன. அரசமடம் மற்றும் பாபநாசம் மாவட்டக்கழக உயர்நிலைப்பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தஞ்சாவூர் போர்டு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றினார். பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து பள்ளிக்குச் செல்லும் வழக்கத்தை மாற்றி கோட், கால்சட்டை அணிந்து பள்ளிக்குச் சென்றார். இலக்குவனார், சாமி சிதம்பரத்தின் மாணவர்.

சாமி சிதம்பரனார் பள்ளி மாணவர்களுக்கான பாடநூல்கள் எழுதினார்.

சுயமரியாதை இயக்கம்

சாமி சிதம்பரம், ஈ.வே. ராமசாமியின் கொள்கைகளால் கவரப்பட்டு அவரது சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்தார். ஈ.வே. ராமசாமி 1929-30 -இல் மலேசியா சென்ற போது சாமி சிதம்பரமும் உடன் சென்றார். பெரியாரின் அனுமதியுடன் அவரது வாழ்க்கை வரலாற்றை 'தமிழர் தலைவன்' என்ற பெயரில் எழுதினார். அந்நூல் பெரியாரின் வாழ்க்கை பற்றிய சிறந்த ஆவணமாக அமைந்தது.

சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கமாக மாற்றம் கண்டபோது சாமி சிதம்பரனார் அதை எதிர்த்தார். 1940-களில் ஈ.வே. ராமசாமியுடன் ஏற்பட்ட கொள்கை வேறுபாட்டால் சாமி சிதம்பரம் திராவிடர் கழகத்தை விட்டு வெளியேறினார்.

சாதிப் பிரிவினைகள் ஆரியரால்தான் ஏற்பட்டன என்று திராவிட இயக்கம் முன்வைத்த திராவிட-ஆரிய முரண் கொள்கையை ஆரியர்கள் ஊடுருவிய உலகின் மற்ற பகுதிகளில் சாதிப்பிரிவினை இல்லாததைக் காரணம் காட்டி மறுத்தார். திராவிடர், ஆரியர் இருவரும் ஒரே இனம் என வலியுறுத்தினார்.

பொதுவுடைமை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்திலிருந்து விலகியபின் சாமி சிதம்பரனார் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்து சமூகப் பணியாற்றினார். சென்னைக்குக் குடிபெயர்ந்து ம. சிங்காரவேலு முதலியார், ப. ஜீவானந்தம், மணலி கந்தசாமி போன்றோருடன் நட்பு கொண்டார். பொதுவுடைமை இயக்கப் பணிகளுடன் ஆய்வுப் பணிகளையும், எழுத்துப் பணியையும் தொடர்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

சாமி சிதம்பரனார் இலக்கியம், தத்துவம், சமுதாயம், அரசியல் என 62 நூல்கள் எழுதினார். சரஸ்வதி, தாமரை, தினமணி, வெற்றிமுரசு போன்ற இதழ்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதினார். சிலப்பதிகாரத்தையும், கம்பராமாயணத்தையும் ஆய்ந்து கட்டுரைகள் எழுதினார். கம்பராமாயணத்தின் ஆகச் சிறந்த பாடல்களின் தொகுப்பை வெளியிட்டார். 'குறுந்தொகைப் பெருஞ்செல்வம்' மாணவர்களுக்கான முக்கியமான நூல்.

இன்பசாகரன், அணைந்த விளக்கு போன்ற நாடகங்களை எழுதினார். 'சித்தர்கள் தந்த விஞ்ஞானம் தத்துவம்' என்ற சித்தர் தத்துவங்களுக்குப் புதுவிளக்கம் கூறும் நூல்களை எழுதினார். பண்டைத்தமிழிலக்கிய நூல்களிலிருந்து தமிழர்களின் வாழ்வுமுறை, நாகரிகம், கலை, பண்பாடு போன்றவற்றைத் தெளிவுபடுத்துவதைத் தன் நோக்கமாகக் கொண்டிருந்தார்.

இதழியல்

சாமி சிதம்பரம், 1930- களில் பகுத்தறிவு, புரட்சி, குடியரசு, திராவிடன், விடுதலை போன்ற திராவிட /சுயமரியாதை இயக்க இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். இவை தவிர தினமணி, வெற்றிமுரசு, சரஸ்வதி ஆகிய இதழ்களிலும் பணியாற்றினார். 1936-38 -ஆம் ஆண்டுகளில் 'அறிவுக்கொடி' என்னும் பத்திரிக்கையை கும்பகோணத்தில் நடத்தினார். 1950- களில் இந்திய பொதுவுடைமைக் கட்சியின் அதிகாரபூர்வ இதழான ஜனசக்தியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

ஆய்வுக் கருத்துகள்

சாமி சிதம்பரம், தனது ஆராய்ச்சி கருத்துகளாக கீழ்காண்பவற்றை முன்வைத்தார்;

  • சிலப்பதிகாரம், திருக்குறள் போன்ற நூல்கள் கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவையல்ல; பிற்காலத்தியவை. .
  • இளங்கோவடிகள் செங்குட்டுவனின் உடன்பிறந்தவர் அல்லர்.
  • சிலப்பதிகாரத்தில் கூறப்படும் சேரன் செங்குட்டுவனின் வட நாட்டுப் படையெடுப்பு (கனக-விஜயர்களை வெற்றி கொள்ளுதல்) தமிழர்கள் வடநாட்டவர்பாற் கொண்ட காழ்ப்புணர்ச்சியின் காரணமாகத் திணிக்கப்பட்ட புனைவு.

படைப்புகள்

பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்

சாமி சிதம்பரம் மாணவர்களுக்கான் பாடநூல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், இலக்கிய ஆய்வு நூல்கள் என சுமார் அறுபது நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில:

  • அணைந்த விளக்கு - குண்டலகேசி காப்பியம்
  • அணைந்த விளக்கு (வசன நாடகம்)
  • அருட்பிரகாசர் அமுத வாசகம்
  • அருணகிரியார் - குருபரர் அறிவுரைகள்
  • அருள்நெறித் தொடர் (1-6)
  • ஆபுத்திரன் அல்லது சமூக ஊழியன்
  • இலக்கிய நுழைவாயில்
  • இலக்கியம் என்றால் என்ன? - இரு பகுதிகள்
  • இன்பசாகரன் (வசன நாடகம்)
  • கம்பன் கண்ட தமிழகம் (1955)
  • கற்பரசியார் நளாயினி வெண்பா
  • காரல் ஹென்றி மார்க்ஸ்
  • சாமி. சிதம்பரனார் சிந்தனைச்செய்யுள்
  • சித்தர்கள் கண்ட விஞ்ஞானம் தத்துவம்
  • சிலப்பதிகாரக் காலத்து தமிழ்நாடு
  • தமிழர் தலைவர் ( இந்நூல், 1939- ஆம் ஆண்டு வரையான ஈ.வே. ராமசாமி பெரியாரின் வாழ்க்கை வரலாற்றைப் பதிந்துள்ளது)
  • தொல்காப்பியத் தமிழர்
  • நாலடியார் பாட்டும் உரையும்
  • பத்துப் பாட்டும் பண்டைத் தமிழரும்
  • பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
  • புகழேந்தியின் புலமை
  • புதிய தமிழகம்
  • புதுக்குறள்
  • மாதர் சுதந்திரம் அல்லது பெண்மக்கள் பெருமை (1931)
  • மாயூரம் முன்சீப் வேதநாயகம்பிள்ளை
  • வடலூரார் வாய்மொழி
  • வளரும் தமிழ்
  • வள்ளலார் கூறும் வாழ்க்கை நெறி

மறைவு

சாமி சிதம்பரம் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஜனவர் 17, 1961அன்று மறைந்தார்.

நாட்டுடைமை

சாமி சிதம்பரத்தின் படைப்புகள் 2000-ல் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டன.

உசாத்துணை

தமிழ் வளர்த்த பெருமக்கள், அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு

சாமி சிதம்பரனார்-தென்றல் இதழ்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.