under review

நித்ய சைதன்ய யதி

From Tamil Wiki
Revision as of 18:29, 27 September 2023 by Ramya (talk | contribs)
நித்ய சைதன்ய யதி
நித்ய சைதன்ய யதி

நித்ய சைதன்ய யதி (ஜெயச்சந்திரன்) (1923 - 1999) சிந்தனையாளர், தத்துவ அறிஞர், ஆன்மிகவாதி. நடராஜகுருவின் மாணவர். நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல் முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் நித்ய சைதன்ய யதி.

பிறப்பு, கல்வி

நித்ய சைதன்ய யதியின் இயற்பெயர் ஜெயச்சந்திரன். 1923-இல் கேரளாவின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கோந்நி என்ற ஊரில் மூலூர் ராகவப் பணிக்கர், வாமாக்‌ஷி இணையருக்கு மகனாகப் பிறந்தார். பந்தளம் பணிக்கர்கள் என்ற ஈழவ நிலப்பிரபுக் குடும்பம். தந்தை கவிஞர், தாய்வழித் தாத்தா பாளி மொழி அறிஞர். பௌத்த மதம் சார்ந்த பல செப்பேடுகள் அவரது குடும்பத்திலிருந்து கிடைத்துள்ளன.

ஆன்மிக வாழ்க்கை

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு ஜெயச்சந்திரன் நாடோடியாக அலைந்தார். பிறகு மீண்டு வந்து கொல்லம் கல்லூரியில் தத்துவம் எம்.ஏ படித்து அங்கேயே ஆசிரியராக வேலை பார்த்தார். அப்போது நடராஜகுருவின் தொடர்பு ஏற்பட்டது. துறவு பூண்ட ஜெயச்சந்திரன் பிச்சை எடுத்தபடி பாரதம் முழுக்க அலைந்தார். காந்தியின் சபர்மதி ஆச்சிரமத்திலும், ரமணரின் ஆச்சிரமத்திலும் தங்கி அவர்களை நெருங்கி அறிந்தார். பின்னர் சென்னை விவேகானந்தா கல்லூரியில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1952ல் டாக்டர் ராதாகிருஷ்ணனுடனான ஒரு தத்துவ மோதலுக்குப் பிறகு அப்பதவியைத் துறந்தார்.

நித்ய சைதன்ய யதி, நடராஜகுரு
நடராஜகுருவைச் சந்தித்தல்

1952ல் அவர் ஊட்டி ஃப்ரென்ஹில் குருகுலத்துக்குச் சென்று நடராஜகுருவின் நேரடி சீடரானார். இருவரும் கடும் வறுமையில் தனிமையில் பல வருடங்களை ஊட்டியில் செலவிட்டார்கள். நடராஜகுவிடமிருந்து ஜெயசந்திரன் துறவு பெற்று நித்யசைதன்ய யதி என்ற பெயரை சூட்டிக்கொண்டார். 1956ல் நடராஜகுரு உலகப் பயணத்துக்குப் போனபோது நித்ய சைதன்ய யதி பம்பாய் சென்று விழியிழந்தோர் உளவியலில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவின் ஆணைப்படி 1959ல் மாற்று உளவியல் ஆய்வு மையம் துவக்கப்பட்டபோது அதன் ஸ்தாபக தலைவராக இருந்தார்.

உலகப்பயணம்

1969ல் நித்ய சைதன்ய யதி ஆஸ்திரேலியாவுக்கு ஒரு மாலுமியால் அழைத்துச் செல்லப்பட்டுத் திட்டமிடப்படாத ஓர் உலகப் பயணத்தை துவங்கினார். அப்பயணத்தில் அமெரிக்கா வந்து அங்கு போர்ட்லண்ட், சிக்காகோ உள்ளிட்ட பல பல்கலைகழகங்களில் கீழைத் தத்துவம் மற்றும் மாற்று உளவியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். இங்கிலாந்திலும், பிரான்ஸிலும் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ரஸ்ஸல், கார்ல் பாப்பர் போன்றவர்களிடம் தொடர்பு கொண்டிருந்தார். 1973ல் நடராஜகுரு உடல்நலம் குறைந்து இறந்தபோது இந்தியா திரும்பி ஊட்டி பெர்ன் ஹில் குருகுலத்தின் தலைமை பொறுப்பில் இருந்தார்.

நித்ய சைதன்ய யதி (படம்: ஷெளக்கத்)
நித்ய சைதன்ய யதி (ஷெளக்கத்)

நித்ய சைதன்ய யதியின் சிந்தனை

நாராயணகுருவின் சிந்தனை வெளியுலகம் நோக்கி நடராஜகுரு வழியாகச் சென்றது. அங்கே அது பலவிதங்களில் வளர்ந்த பிறகு நித்ய சைதன்ய யதி வழியாக மீண்டும் கேரளத்துகே திரும்பி வந்தது. நாராயணகுருவும் நடராஜகுருவும் உருவாக்கிய புதிய அத்வைத நோக்கையும் முதல் முழுமைவாத நோக்கையும் நவீன இலக்கியக் கோட்பாடுகளிலும் அறிவியல் கோட்பாடுகளிலும் செயல்படுத்திக் காட்டியவர் நித்ய சைதன்ய யதி. நித்ய சைதன்ய யதி கலை இலக்கியங்களில் ஆர்வம் கொண்டவர். கவிதை, ஓவியம், இசை மூன்றிலும் அவரது ஆர்வமும் பயிற்சியும் விரிவானது. அவரது எழுத்துக்களில் தத்துவ நோக்கைவிட கலைநோக்கு மேலெழுந்து காணப்பட்டது.

மேலைச் சிந்தனைகளையும் அழகியல் நோக்குகளையும் அப்படியே ஏற்று அவற்றை பிரதிபலிப்பதே சிறந்த செயல்பாடு என்று நம்புதல்; இதற்கு எதிராக உள்ளது அனைத்துமே மரபில் உள்ளன என்றும் மரபை பயின்று செயல்படுத்தலே போதும் என்றும் நம்புதல் என்ற இரு எதிரெதிர் நிலைகள் இருந்த காலகட்டம் ஒன்று செழித்து வளர்ந்து தேக்கமடைந்த காலத்தில், இவ்விரு தேக்கநிலைகளுக்கும் எதிரான அலையாக எழுந்ததே நித்யா உருவாக்கிய அறிவியக்கம் எனலாம்.

யதிக்கு மரபின் மீதான ஆழமான ஞானம் இருந்தது. அதை மேலைநாட்டு நவீனச்சிந்தனைகள் மூலம் தொடர்ந்து மறுபரிசீலனை செய்யும் திறந்த மனம், அறிவியல் நோக்கு, எந்த தத்துவக் கோட்பாட்டு விவாதத்தையும் கவித்துவம் மூலமே நிகழ்த்தும் மொழிநடை, மூர்க்கமான நம்பிக்கைக்குப் பதிலாக தன்னைத் தானே திருப்பித் திருப்பிப் போட்டு எள்ளி நகையாடிச் செல்லும் ஆன்மீகமான அங்கதம் ஆகியவையே நித்ய சைதன்ய யதியின் சிறப்பியல்புகள்.

நித்ய சைதன்ய யதி
மாணவர்கள்

இந்திய சிந்தனையில் தொடர்ச்சியாக மூன்றாவது தலைமுறையாக வளர்ச்சி பெற்ற சிந்தனைப்பள்ளி நாராயணகுருவினுடையது. பலகோணங்களில் பல தளங்களில் செயல்படும் முக்கியமான பல மாணவர்கள் இதற்கு அமைந்தனர். இயற்கைமருத்துவம் மூலிகை வேளாண்மை சார்ந்து நித்ய சைதன்ய யதியின் மாணவர்கள் பலர் முக்கியமான ஆய்வுகளைச் செய்தனர். நடராஜகுருவின் மாணவர்களான முனிநாராயணபிரசாத், சுவாமி வினய சைதன்யா இருவரும் இன்று இந்திய அளவில் கவனிக்கப்பட்டனர். சுவாமி தன்மயா [டாக்டர் தம்பான்] மாற்று மருத்துவத்தளத்தில் செயல்பட்டார். எழுத்தாளர் ஜெயமோகன் கலை, இலக்கியச் செயல்பாட்டின் வழி யதியின் சிந்தனைகளை எடுத்துச் செல்லும் மாணவர். கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற ஷெளக்கத் ஊட்டியில் யதியின் இறுதி நான்கு வருடங்களில் உடனிருந்த மாணவர். குரு வியாசபிரசாத் ஊட்டி ஃபெர்ன் ஹில் ஆசிரமத்தை நிர்வகிப்பவர்.

நித்ய சைதன்ய யதி
நித்ய சைதன்ய யதி

எழுத்து

நித்ய சைதன்ய யதி ஆங்கிலத்தில் எண்பதும் மலையாளத்தில் நூற்று இருபது நூல்களையும் எழுதினார். எளிய அறிமுக நூல்களை எழுதி அறிவியல் தத்துவக் கண்ணோட்டத்தை கேரளத்தில் வேரூன்றச் செய்த ஆசிரியர். நாராயணகுருவின் நூல்களுக்கு நவீன அறிவியல் தத்துவ நோக்கில் உரைகள் எழுதினார். தமிழில் அவரது விரிவான பேட்டி காலச்சுவடு சிற்றிதழில் வெளிவந்தது. தமிழில் நித்ய சைதன்ய யதியின் நான்கு நூல்கள் உள்ளன.

நித்யசைதன்ய யதி நாராயணகுருவின் தரிசனமாலாவுக்கு எழுதிய விரிவான உரை அவரது அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சிறந்த உதாரணம். மேலை உளவியல் கோட்பாடுகளையும் இந்திய யோக மரபில் உள்ள உளவியல் அறிதல்களையும் இணைத்துக் கொண்டு தர்சனமாலாவை புரிந்துகொள்ள முயலும் நூல் அது. பகவத்கீதை, பிரகதாரண்யக உபநிடதம், பதஞ்சலி யோக சூத்திரம் போன்றவற்றுக்கு நித்ய சைதன்ய யதி எழுதிய பெரிய ஆழமான உரைகள் மரபை வழிபடும் நோக்கு சற்றும் இல்லாத சமநிலை கொண்ட ஆய்வுகள்.

மரபை அப்படியே ஏற்றுக் கொள்ளாமல் பரிசீலனை செய்யும் போக்கு கொண்டவை. அவற்றை ஒருசில அர்த்த தளங்கள் நோக்கி குறுக்கும் போக்குகளை நிராகரிப்பார். இந்து மெய்ஞானத்தை உயர்குடிகளுக்குள் நிறுத்திக் கொள்ள செய்யப்பட்ட விரிவான முயற்சியையும், அதை மதக் கோட்பாடுகளாக சுருக்க நிகழும் யத்தனங்களையும் பெரும் அறிவுச்சதியுடன் எதிர்கொண்டு முறியடிக்கும் ஆக்கங்களாக யதியின் உரைகள் அமைந்தன.

நித்ய சைதன்ய யதி

மதிப்பீடு

”நித்ய சைதன்ய யதியின் அணுகுமுறை சமநிலை கொண்ட நடுப்பாதை. கண்மூடித்தனமான மேலைச்சார்பு, மரபு எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அவர் எந்த அளவுக்கு எதிரானவரோ அதேயளவுக்கு மரபு வழிபாடு, மதவாத அரசியல் ஆகியவற்றுக்கும் எதிரானவர். ஆனால் நாராயணகுருவின் மரபை ஒட்டியவர் என்பதால் ஒருபோதும் எதிர்மறைக் கருத்துக்களைச் சொல்லி விவாதங்களில் ஈடுபடும் இயல்பு அவரிடம் இல்லை-விதிவிலக்காக இந்திய அரசியலில் மதவாதம் தலையெடுத்தபோது மட்டும் ஒரு சிறு பிரசுரம் அளவுக்கு எதிராக எழுதியுள்ளார். ஆக்கபூர்வமான படைப்புகளை தொடர்ந்து முன்வைப்பதே அவரது வழிமுறையாகும். நூறு வருடம் முன்பு மனித சமத்துவம் மற்றும் முழுமையான ஆன்மிக விடுதலையின் குரலாக நாராயணகுருவின் தத்துவம் எழுந்தது. பின்பு உலகசிந்தனையை நோக்கி முழுமைவாதத்தை முன்வைப்பதாக அது நடராஜ குருவால் விரிவாக்கம் செய்யப்பட்டது. நித்ய சைதன்ய யதியின் காலத்தில் இந்திய மரபைச் சார்ந்து உலகசிந்தனையை எதிர்கொள்வதற்கான காய்தல் உவத்தல் அற்ற நோக்குநிலையாக அது வளர்ச்சி பெற்றது.” என ஜெயமோகன் மதிப்பிட்டார்.

மறைவு

நித்ய சைதன்ய யதி 1999இல் காலமானார். ஊட்டி ஃபெர்ன் ஹில்லில் அவரது சமாதி உள்ளது.

நூல்கள் பட்டியல்

ஆங்கிலம்
  • That Alone, the Core of Wisdom
  • Love and Blessings (autobiography)
  • Meditations on the Self
  • Psychology of Darsanamala
  • Brihadaranyaka Upanishad (3 volumes)
  • In the Stream of Consciousness
  • Saundarya Lahari
  • Bhagavad Gita
  • Living the Science of Harmonious Union (Patanjali’s Yoga Shastra)
தமிழில்
  • ஈசோவாஸ்ய உபநிடதம் (சூத்ரதாரி மொழிபெயர்ப்பு)
  • அனுபவங்கள் அறிதல்கள் (தமிழினி வெளியீடு)
  • குருவும் சீடனும் (எனி இண்டியன் பதிப்பகம்)
  • யதி : தத்துவத்தில் கனிதல் (தன்னறம் நூல்வெளி)
  • சின்னச் சின்ன ஞானங்கள் (யூமா வாசுகி மொழிபெயர்ப்பு) (தன்னறம் நூல்வெளி)
  • அறிவு: ஞானத்தின் ஆய்வியல் (எம். கோபாலகிருஷ்ணன்)
  • உண்மை சார்ந்த உரையாடல் (காலச்சுவடு) (நித்ய சைதன்ய யதி நேர்காணல்)

உசாத்துணை

இணைப்புகள்


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.