first review completed

ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து

From Tamil Wiki
Revision as of 19:02, 15 September 2023 by Tamizhkalai (talk | contribs)
ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து

ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து (1878) ஆண்பிள்ளையின் நற்பண்புகளையும் வீண்பிள்ளையின் தீய பண்புகளையும் கூறும் சிந்து இலக்கிய நூல். நீதிச் சிந்து நூல் வகைகளுள் ஒன்று. இந்நூல், ஜீவரக்ஷாமிர்தசாலை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பதிப்பித்தவர் சிறுமணவூர் முனிசாமி முதலியார்.

பிரசுரம், வெளியீடு

ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து நூல், 1878-ல், ஆ.வே. ஆறுமுக முதலியாரின் பொருள் உதவியினால், க.வே. சொக்கலிங்க முதலியாரின் ஜீவரக்ஷாமிர்தசாலை அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்நூலைப் பதிப்பித்தவர் சிறுமணவூர் முனிசாமி முதலியார். தொடர்ந்து பல்வேறு பதிப்பகங்கள் இந்நூலைப் பதிப்பித்துள்ளன.

நூல் அமைப்பு

ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து சிந்து என்னும் இலக்கிய வகைமையச் சார்ந்தது. சிந்துக் கண்ணிகளால் இயற்றப்பட்டுள்ளது. முகப்பில் காப்புச் செய்யுளைத் தொடர்ந்து கண்ணி வடிவில் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. ஆண்பிள்ளை என்பவனின் நற்பண்புகளையும், வீண்பிள்ளை என்பவனின் தீய இயல்புகளையும் அடுத்தடுத்து இச்சிந்து நூல் கூறுகிறது. தெய்வபக்தி, கோயில் தொண்டு, தீயபெண்களை வெறுப்பது போன்ற குணங்களை ஆண்பிள்ளையின் பண்புகளாகவும், பக்தியின்மை, பெண்ணாசை, தொண்டு செய்யாமை, பொய் வாக்குக் கூறிப் பிறரை ஏமாற்றுவது போன்றவற்றை வீண்பிள்ளையின் இயல்புகளாகவும் இந்நூல் கூறுகிறது.

பாடல்கள்

முத்தி முதல்வனைப் பணியாமல் நாடோறும்
மூடமாய்த் திரிந்தவன் வீண்பிள்ளை
மும்மலமுங் கடந்த மூர்த்தியி னருள்பெற
முனைந்து திரிந்தவ னாண்பிள்ளை

வஞ்சனைசெய் மடமாதர்கள் மயக்கத்தில்
வாடி விழிப்பவனே வீண்பிள்ளை
ஆதியனாதிசோதியாய்நின்றிலங்கும்
அய்யனையறிந்தவ னாண்பிள்ளை

தேவாலயங்களுந் திகழ்மாடங்களுங்கண்ட
தேசங்கள் திரிந்தவ னாண்பிள்ளை
நல்லோர்கள் வாசங்கள் புரிந்தவ னாண்பிள்ளை
பாவாணர்களுக்குப் பத்தர்க்குமாசை சொல்லி
பலகால்திரியச்செய்தோன் வீண்பிள்ளை

மதிப்பீடு

ஆண்பிள்ளை வீண்பிள்ளைச்சிந்து, நீதிச் சிந்து இலக்கிய நூல் வகைகளுள் ஒன்று. ஒரு பண்புள்ள நடத்தை கொண்ட ஆண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதை ஆண்பிள்ளை, வீண்பிள்ளை என்ற இரு பாத்திரங்கள் மூலம் கூறுகிறது. இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்ற அக்கால மூத்தோர்களின் எதிர்பார்ப்பே இவ்வகைச் சிந்து நூல்கள் உருவாகக் காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.