under review

யாப்பருங்கலக்காரிகை

From Tamil Wiki
Revision as of 20:17, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)

தமிழ் யாப்பிலக்கண நூலான யாப்பருங்கலக்காரிகை தொல்காப்பியத்திற்குப் பின் தோன்றிய யாப்பியல் நூல்களுள் சிறப்புப் பெற்றது. காக்கைபாடினியத்தை பின்பற்றி வந்த யாப்பருங்கலக்காரிகையில் தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணத்தில் இல்லாத, பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களின் இலக்கணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காரிகை என்றும் குறிக்கப்படுகிறது.

ஆசிரியர்

யாப்பருங்கலக்காரிகை நூலின் ஆசிரியர் அமிதசாகரர். இவர் பெயர் அமுதசாகரர், அமிர்த சாகரர் என்பனவாகவும் வழங்கப் பெற்றுள்ளது. அமிதசாகரர் என்பது அளப்பரிய கடல் என்றும் அமிர்தசாகரர் என்பது அமுதக்கடல் எனவும் பொருள்தரும். இதனை, ‘அளப்பரும் கடற்பெயர் அருந்தவத்தோனே’ என்னும் காரிகை நூலின் பாயிர அடியினால் அறியலாம். அருகக்கடவுளை வழிபட்டவர் என்பதை, கீழ்க்கண்ட பாயிர முதல் செய்யுள் கூறுவதால் இவர் சமணர் என்று அறிகிறோம்.

கந்த மடிவில் கடிமலர்ப் பிண்டிக்கண் ணார்நிழற்கீ
ழெந்த மடிக ளிணையடி யேத்தி யெழுத்தசைசீர்
பந்த மடிதொடை பாவினங் கூறுவன் பல்லவத்தின்
சந்த மடிய வடியான் மருட்டிய தாழ்குழலே.

அமிதசாகரர் காலம் பொ.யு, 10-ஆம் நூற்றாண்டு. பொ.யு 11-ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எனும் நூலை இயற்றிய புத்தமித்திரனாருக்குக் காலத்தால் முற்பட்டவர். யாப்பியலில் புலமை பெற்ற குணசாகரர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். யாப்பருங்கலம் என்ற யாப்பியல் நூலையும் எழுதினார்.

நூலின் காலம்

அமிதசாகரரின் காலம் பதினோறாம் நூற்றாண்டின் தொடக்கமென வரலாற்றாசிரியர்களால் வரையறுக்கப் படுகின்றது. தஞ்சாவூர் மாவட்டம் நீடுர் எனும் சிற்றூரில் காணப்படும் கல்வெட்டொன்றில்

தண்டமிழ் அமித சாகர முனியைச்
சயங்கொண்ட சோழ மண்டலத்துத்
தண்சிறு குன்ற நாட்டகத் திருத்தி

என்று குறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழன் காலம் (பொயு. 1070-1120). செயங்கொண்டான் என்பான் முதலாம் இராசராசன்( காலம் பொ. யு. 985-1014). இராசராசன் தொண்டை மண்டலத்தை வென்று செயங்கொண்டான் எனப் பெயர் பெற்றான். தொண்டை மண்டலத்திருந்த அமிதசாகரரின் ஊரினை சோழநாட்டொடு இணைத்ததை இக்கல்வெட்டு கூறுகின்றது. இன்னொரு கல்வெட்டில்

அமுதசாகரன் நெடுந்தமிழ் தொகுத்த
காரிகைக் குளத்தூர் மன்னவன்

எனக் காணப்படுகின்றது. (அமுதசாகரர் என்பதும் அமிதசாகரர் என்பதும் ஒருவரையே குறிக்கும்). இவ்விரண்டு கல்வெட்டுக்களாலும் அமிதசாகரரின் காலம் அறுதியிடப்படுகின்றது. இக்காரிகைக்கு முன் செய்த நூல் யாப்பருங்கலம் நூலின் நூற்பாயிரத்திலும் அவரது பெயரும் அருகனை வணங்கியமையும் குறிப்பிடப்படுகிறது.

முழுதுல கிறைஞ்ச முற்றொருங்‌ குணர்ந்தோன்‌
செழுமலர்ச்‌ சேவடி செல்விதின்‌ வணங்கிப்‌
பாற்படு தென்றமிழ்ப்‌ பரவையின்‌ வாங்கி
யாப்பருங்‌ கலம்நனி யாப்புற வகுத்தோன்‌
தனக்குவரம்‌ பாகிய தவத்தொடு புணர்ந்த
குணக்கடற்‌ பெயரோன்‌ கொள்கையின்‌ வழாஅத்‌
துளக்கறு கேள்வித்‌ துகள்தீர்‌ காட்சி
அசாப்பருங்‌ கடற்பெயர்‌ அருந்தவத்‌ தோனே

நூல் அமைப்பு

தமிழ் இணைய பல்கலைக்கழகம்

யாப்பருங்கலக்காரிகை கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பில் இயற்றப்பட்டுள்ளது. அமிதசாகரர் இயற்றிய யாப்பருங்கலம் நூலின் சுருக்கமாக அமைகிறது. காரிகை என்னும் சொல்லுக்கு கட்டளைக் கலித்துறை என்று ஒரு பொருளும் உண்டு. இந்நூலின் செய்யுள்கள் மகடூஉ முன்னிலையாக எழுதப்பட்டுள்ளன. கட்டளைக் கலி என்பதற்கு எழுத்தெண்ணிப் பாடப்படும் கலி யாப்பு என்று பொருள். துறை என்பது பா இனத்தின் ஒரு வகைக்குரிய பெயர். எழுத்தெண்ணிப் பாடுகிறபொழுது ஒற்றெழுத்துகள் அனைத்தையும் விட்டுவிட்டு, உயிர் அல்லது உயிர்மெய் எழுத்துகளை மட்டும் எண்ணி எழுதுவது வழக்கம். ஒரு (செய்யுள்) அடி நேரசையில் தொடங்கினால் ஒற்று நீக்கி 16 எழுத்துகள் இருக்குமாறும், நிரையசை கொண்டு தொடங்கினால் ஒற்று நீக்கி 17 எழுத்துகள் இருக்குமாறும் பாடுவர். இதன்படி நான்கடிகள் உடைய ஒரு கலித்துறைச் செய்யுள் நேரசையில் தொடங்கினால் ஒரு செய்யுளில் மொத்தம் 64 எழுத்துகளும், நிரையசையில் தொடங்கினால் அச்செய்யுளில் மொத்தம் 68 எழுத்துகளும் இருக்கும். யாப்பருங்கலக்காரிகையில் நேரசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்தியொன்றும், நிரையசை கொண்டு தொடங்கும் செய்யுள்கள் இருபத்து மூன்றும் உள்ளதாக அந்நூலின் உரை கூறுகிறது. ஆயினும், இன்று கிடைக்கும் அச்சு நூல்களில் அறுபது காரிகைகள் உள்ளன. மிகுதியாக உள்ள 16 செய்யுள்கள் உரையாசிரியரால் எழுதப்பட்ட உரைக்காரிகைகள்.

உறுப்பியல்

முதல் இயலாகிய உறுப்பியலில் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகிய செய்யுள் உறுப்புகள் பற்றிக் கூறப்பட்டுள்ளன.

பாடல் நடை-எழுத்து

குறினேடி லாவி குறுகிய மூவுமி ராய்தமேய்யே
மறுவறு மூவின மைதீ ருயிர்மேய்‌ மதிமருட்ஞ்‌
சிறுநுதற்‌ பேரமர்க்‌ கட்சேய்ய வாயைய நண்ணிடையாய்‌
அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப்‌ பாவனவே.
சீர்
தேமா புளிமா கருவிளங் கூவிளஞ் சீரகவற்
காமாங் கடைகா யடையின்வெண் பாவிற்கந் தங்கனியா
வாமாண் கலையல்குன் மாதே வருபவஞ் சிக்குரிச்சீர்
நாமாண் புரைத்த வசைச்சீர்க் குதாரண நாண்மலரே. (07)

செய்யுளியல்

இரண்டாம் இயலாகிய செய்யுளியலில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய பாக்களுக்குரிய இலக்கணம் பேசப் பெற்றுள்ளது. இறுதியில் மருட்பா பற்றியும் கூறப்பட்டுள்ளது. நான்கு வகைப் பாக்களின் இனங்களும் கூறப்பட்டுள்ளன.

பாடல் நடை-பாக்களின் அடியும் ஓசையும்

வெண்பா வகவல் கலிப்பா வளவடி வஞ்சியென்னும்
ஒண்பா வடிகுறள் சிந்தென் றுரைப்ப வொலிமுறையே
திண்பா மலிசெப்பல் சீர்சா லகவல்சென் றோங்குதுள்ளல்
நண்பா வமைந்த நலமிகு தூங்க னறுநுதலே. (01)

ஒழிபியல்

ஒழிபியலில் உறுப்பியலிலும், செய்யுளியலிலும் இடம்பெற்ற செய்திகளுக்கான ஒழிபுச் செய்திகள் தரப் பெற்றுள்ளன.ஒழிபுச் செய்திகள் என்பன முன்னர்க் கூறப்பட்ட செய்திகளுக்கு வேறுபட்டு வருவனவும், அங்குக் கூறப்படாதனவும், அங்குக் கூறப்பட்டவற்றிற்கு மேலும் விளக்கம் தருவனவும் ஆன செய்திகள்.

பாடல் நடை-அடிமயக்கம்

இயற்றளை வெள்ளடி வஞ்சியின் பாத மகவலுள்ளான்
மயக்கப்படா வல்ல வஞ்சி மருங்கினெஞ் சாவகவல்
கயற்கணல் லாய்கலிப் பாதமு நண்ணுங் கலியினுள்ளான்
முயக்கப் படுமுதற் காலிரு பாவு முறைமையினே. (04)

உரை

யாப்பருங்கலத்துக்கு எழுதப்பட்ட உரைகளில் குணசாகரர் (கலத்தின் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டவர் இவர் அல்லர்) என்பவரது உரை தொன்மையானது. சென்ற நூற்றாண்டில் யாழ்ப்பாணம் சுன்னாகம் அ. குமாரசுவாமிப் பிள்ளை என்பவரது உரையை அடியொட்டியே தற்கால விளக்கங்கள் அமைகின்றன.

உசாத்துணை

தமிழ்ச்சுரங்கம்-யாப்பருங்கலக்காரிகை யாப்பருங்கலக்காரிகை-குணசாகரர் உரை ,சு. குமாரசாமிப்பிள்ளையின் புத்துரையுடன் தமிழ் இணையக் கல்விக் கழகம்


✅Finalised Page