being created

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்

From Tamil Wiki
Revision as of 23:27, 20 July 2023 by ASN (talk | contribs) (Para Added and Edited; Image Added)
கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் (1858) தாய்மொழி வழிக் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காகவும், தமிழில் கல்வி, சமயம் சார்ந்த நூல்களை அச்சிட வேண்டும் என்ற நோக்கத்திலும், சென்னையில், 1858-ல், ஜான் மர்டாக் என்பவரால் தொடங்கப்பட்டது. கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

தோற்றம்

19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பல்வேறு நூல் வெளியீட்டு நிறுவனங்கள் நூல்களை அச்சிட்டு வந்தன. அவை பெரும்பாலும் சமயம் சார்ந்த நூல்களாகவும், ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்ட பாட நூல்களாகவும் இருந்தன. தமிழ் மொழிக் கல்வி நூல்கள் அதிகம் வெளியாகாத நிலை இருந்தது. அதனை மாற்றும் பொருட்டு 1858-ல், கிறித்தவ தாய்மொழிக் கல்விச் சங்கம் என்னும் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் அமைக்கப்பட்டது. ஜான் மர்டாக், இதனைத் தோற்றுவித்தார். இவ்வமைப்பின் முதல் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

நோக்கம்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம், சமயம் சார்ந்த நிறுவனமாக இருப்பினும், தமிழ் மொழிக்கும், அதன் இலக்கண, இலக்கிய வளர்ச்சிக்கும் தொண்டு செய்வதை தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. கிறிஸ்தவ சமயம் சார்ந்த நூல்களுடன், கல்வி சார் நூல்கள், கவிதை, சிறுகதை, புதினம், நாடகம், வாழ்க்கை வரலாறு, ஆய்வு நூல்கள், இலக்கியம், இலக்கணம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டது.

பணிகள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1953 வரை இங்கிலாந்தில் இருந்த கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் அங்கமாகச் செயல்பட்டு வந்தது. அக்டோபர் 1953-ல், இச்சங்கம் தன்னாட்சி பெற்ற இந்திய நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு பல நூல்களை வெளியிட்டது. பல இலக்கிய நிகழ்வுகளை, பயிற்சிப் பட்டறைகளை ஒருங்கிணைத்தது. இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தியது.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் அலுவலகம், சென்னை பூங்கா நகரில் உள்ள மெமோரியல் கட்டிட வளாகத்தில் அமைந்துள்ளது. அங்கு பொதுச்செயலாளர் அலுவலகம்,  கணக்காளர் அலுவலகம், தமிழ், ஆங்கிலப் பதிப்புத்துறைகள், நூல் விநியோகத்துறை அலுவலகம், பணியாளர் கண்காணிப்புத் துறை மற்றும் நூல் விற்பனை நிலையம் ஆகியவை அமைந்துள்ளன. கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திற்குச் சொந்தமான அச்சகமும் இங்கு அமைந்துள்ளது.

பொறுப்பாளர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் முதல் பொதுச் செயலாளராக ஜான் மர்டாக் பணியாற்றினார். அவரைத் தொடர்ந்து எச்.கிளிப்போர்ட், பாஸ்மோர் தொடங்கி தி. தயானந்தன் பிரான்சிஸ் வரை பலர் இதன் பொதுச் செயலாளராகப் பணிபுரிந்தனர்.

பதிப்பாசிரியர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் முதல் தமிழ்ப் பதிப்பாசிரியராக ஹென்றி ஆல்பர்ட் கிருஷ்ணப்பிள்ளை 1892 தொடங்கி 1900 வரை பணியாற்றினார். அவர் தொடங்கி திருமதி ஸ்வீட்லின் பிரபாகரன் வரை பலர் கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் தமிழ்ப் பதிப்பாசிரியர்களாக அமைந்து தமிழ் வளர்த்தனர்.

இயக்குநர்கள்

கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் தபோதைய இயக்குநர்களாக ஆண்ட்ரூ பலராமன் நடராஜன், தன்ராஜ் லூயிஸ் சிவகுமார், ஜயராஜ் ஜார்ஜ் ஸ்டீஃபன், சுவாமிநாதன் அசோக்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.











🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.