first review completed

அ. சக்கரவர்த்தி நயினார்

From Tamil Wiki
Revision as of 08:06, 14 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text:  )
அ. சக்கரவர்த்தி நயினார்

அ. சக்கரவர்த்தி நயினார் (அப்பாசாமிப் பிள்ளை சக்கரவர்த்தி நயினார்; ராவ்சாகிப் சக்கரவர்த்தி நயினார்) (மே 17, 1880-பிப்ரவரி 12, 1960) சமண அறிஞர். எழுத்தாளர், பதிப்பாளர். கல்லூரிப் பேராசிரியராக, முதல்வராகப் பணியாற்றினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். நீலகேசியை உரையுடன் முதன் முதலில் பதிப்பித்தார். பிரிட்டிஷ் அரசு வழங்கிய ராவ்சாகிப் பட்டம் பெற்றார்.

பிறப்பு, கல்வி

சக்கரவர்த்தி நயினார், மே 17, 1880 அன்று, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திற்கு அருகில் உள்ள வீடூரில், அப்பாசாமி நயினார்-அச்சம்மாள் இணையருக்குப் பிறந்தார். உயர்நிலைக் கல்வியை சென்னை இராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப்பள்ளியில் படித்தார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்வியியலில் எல்.டி. (Licenciate in Teaching -LT)பட்டம் பெற்றார். தமிழ், ஆங்கிலத்தோடு சம்ஸ்கிருதமும் கற்றார்.

தனி வாழ்க்கை

சக்கரவர்த்தி நயினார், சென்னை கணக்காயர் அலுவலகத்தில் கணக்கராகப் பணியாற்றினார். பின் கல்லூரிகளில் பணிபுரிந்தார்.

கல்விப் பணிகள்

  • சக்கரவர்த்தி நயினார், 1906 முதல் 1908 வரை, சென்னை மாநிலக் கல்லூரியின் தத்துவத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
  • 1908 முதல் 1912 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாளராகப் பணிபுரிந்தார்.
  • 1912 முதல் 1917 வரை ராஜமுந்திரி அரசுக் கல்லூரியில் தத்துவத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
  • 1917 தொடங்கி 1930 வரை சென்னை மாநிலக் கல்லூரியில், தத்துவத்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.
  • 1930-1932 வரை ராஜமுந்திரி அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார்.
  • 1932-1938 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சக்கரவர்த்தி நயினார் இலக்கியம், சமயம், தத்துவம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அது குறித்த கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார். அந்த நூல் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டு ‘திருக்குறள் வழியில் செய்தி’ என்ற தலைப்பில் வெளியானது.

பதிப்பியல்

சக்கரவர்த்தி நயினார், சமண இலக்கிய நூல்கள் சிலவற்றை உரையுடன் பதிப்பித்தார். 'திருக்குறள் ஜைனக் கவிராஜ பண்டிதர் உரை', 'மேருமந்தர புராண உரை', 'நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரை' போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.

பொறுப்புகள்/அமைப்புப் பணிகள்

  • தமிழ் லெக்சிகன் கமிட்டியில் உறுப்பினர்.
  • கும்பகோணம் மக்கள் மன்ற நிறுவனர்.
  • ஈ.வெ.ரா. பெரியார் நடத்திய திருக்குறள் (தமிழர் நெறி விளக்கம்) மாநாட்டிற்குத் தலைமை.

விருதுகள்

  • பிரிட்டிஷ் அரசு அளித்த இந்தியக் கல்விப் பணி (ஐ.இ.எஸ்-I.E.S) பட்டம்
  • பிரிட்டிஷ் அரசு அளித்த ராவ் பகதூர் பட்டம்

இலக்கிய இடம்

அ. சக்கரவர்த்தி நயினார், கல்வித்துறையிலும், தத்துவத் துறையிலும், சமண சமய அறிஞர்கள் நடுவிலும் மிகவும் புகழ்பெற்றிருந்தார். அறிஞர்கள், துறவிகள் பலராலும் மதித்துப் போற்றப்பட்டார். சமணம் பற்றி அறிய விரும்பிய திரு.வி.கலியாணசுந்தர முதலியார், சக்கரவர்த்தி நயினார் வீட்டுக்கு வந்து பாடம் கேட்டார். நீலகேசியை உரையுடன் பதிப்பித்தது அ. சக்கரவர்த்தி நயினாரின் முக்கிய பணிகளுள் ஒன்றாக மதிப்பிடத்தக்கது. திருக்குறளை இயற்றியது ஜைன மதத்துறவியான குந்த குந்தர் என்பது அ. சக்கரவர்த்தி நயினாரின் கருத்தாக இருந்தது. அது குறித்து ஆங்கிலத்திலும், தமிழிலும் இதழ்களில் பல கட்டுரைகளை எழுதினார்.

மறைவு

அ. சக்கரவர்த்தி நயினார், பிப்ரவரி 12, 1960-ல் காலமானார்.

நூல்கள்

படைப்புகள்
  • திருக்குறளும் சமதர்மமும் (ஆங்கில நூல்)
  • திருக்குறள் - ஆங்கில உரை
  • பஞ்சாஸ்தி காயம் (சம்ஸ்கிருத நூல்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கம்)
  • சமயசாரம்
  • இராவணன் வித்தியாதரனா? (ஆராய்ச்சி நூல்)
பதிப்பித்தவை
  • திருக்குறள் ஜைனக் கவிராச பண்டிதர் உரை
  • நீலகேசி சமய திவாகர வாமன முனிவர் உரை
  • மேரு மந்திரப் புராண உரை

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.