first review completed

சாந்தாதியசுவமகம்

From Tamil Wiki
Revision as of 19:44, 12 February 2023 by Tamizhkalai (talk | contribs)

சாந்தாதியசுவமகம் (18ம் நூற்றாண்டு) மகாபாரதத்தின் பதினான்காவது பருவமான அஸ்வமேத பருவத்தை விவரித்து இயற்றப்பட்ட தமிழ்க் காவியம். இந்த நூலை இயற்றியவர் சையிது முகம்மது அண்ணாவியார்.

பதிப்பு

இந்நூல் பதினெட்டாம் நூற்றாண்டில் சையது முகம்மது அண்ணாவியாரால் இயற்றப்பட்டது. இந்த நூலில் இரண்டாயிரம் செய்யுட்கள் ஏட்டிலும், இரண்டாயிரம் செய்யுட்கள் தாளிலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. உ.வே. சாமிநாதையருக்கு நூலின் முதற் பகுதியான 1370 செய்யுட்கள் சுவடிப் பிரதியில் கிடைத்துள்ளன. 1989ல் சி. ஜெகந்நாதாசார்யார் உரையுடன் டாக்டர் உ.வே. சாமிநாதையர் நூலகம் இந்நூலை அச்சில் பதிப்பிட்டு வெளியிட்டது.

ஆசிரியர்

சாந்தாதியசுவமகம் நூலின் ஆசிரியர் சையிது முகம்மது அண்ணாவியார் என்ற புலவர். இவர் மதுரையில் பிறந்து, மதுக்கூரிலும் மூத்தாக்குறிச்சியிலும் கல்வி கற்றார். அதிராமபட்டினத்தில் வாழ்ந்து அங்கே தனது 65-ஆவது வயதில் இறந்தார். அதிராமபட்டினம் பள்ளிவாசலின் வடக்குப் பக்கத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

சையிது முகம்மது அண்ணாவியார் அலிநாமா என்ற காவியத்தை இயற்றினார். இது தவிர, மகாபாரத அம்மானை, சாந்தாதியசுவமகம் உட்பட பத்து காவியங்களை பாடியுள்ளார் எனத் தெரியவருகிறது. சாந்தாதியசுவமகம் நூலில் பாயிரத்தில் தன்னைப் பற்றி சில் வரிகள் குறிப்பிட்டுள்ளார்.

நூல் சுருக்கம்

மகாபாரதம் பதினெட்டு பருவங்களைக் கொண்டது. அதில் பதினான்காவது அசுவமேத பருவம். தருமன் போரில் ஏற்பட்ட தோஷம் நீங்க வியாசர் கூறியபடி அசுவமேத யாகம் செய்ததை கூறுகிறது. தேர்வு செய்த வேள்விக் குதிரையை பல நிலங்களில் மேய விட்டு அங்கு இருக்கும் நிலங்களை வென்று தருவித்த பொருட்கள் மூலம் செய்யும் யாகம். இந்த யாகம் ஒரு ஆண்டு முழுக்க நிகழும்.

சாந்திக்காக செய்யப்பட்ட யாகம் என்பதால் 'சாந்தாதியசுவமகம்' என்று இந்த நூலுக்கு சையிது முகம்மது அண்ணாவியார் பெயரிட்டார்.

நூல் பகுதிகள்

இந்த நூலின் முதற்பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இதில் ஒன்பது சருக்கங்கள் உள்ளன

  1. நாட்டுச் சருக்கம்
  2. நகரச் சருக்கம்
  3. தருமராஜன் கீர்த்திச் சுருக்கம்
  4. எமனாசுரன் போர்ச்சருக்கம்
  5. அனுசாளுவச் சருக்கம்
  6. வேள்வியாரம்பச் சருக்கம்
  7. நீலத்துசன் போர்ச் சருக்கம்
  8. சண்டிகை சாபநிவாரணச் சருக்கம்
  9. சுதர்மத்துசன் போர்ச் சருக்கம் (இந்தச் சருக்கம் முழுமையாக கிடைக்கவில்லை)

தற்பாயிரம் சேர்த்து இந்நூலில் மொத்தமாக 1186 செய்யுட்கள் பதிப்பிக்கப்பட்டுள்ளன. சி. ஜெகந்நாதாசார்யார் ஒவ்வொரு செய்யுளுக்கும் பதவுரையும் இலக்கிய இலக்கண நுணுக்கங்கள், குறிப்புகள், அணிகள் பற்றிய விளக்கங்கள் அளித்துள்ளார்.

பதிப்பின் இறுதிப் பகுதியில் அருஞ்சொல் அகராதி, அருந்தொடர்கள் மற்றும் பாத்திரங்கள் இடம்பெறும் அட்டவணையான 'அபிதான சூசிகை' ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.

தற்பாயிரம் - காப்பு, கடவுள் வாழ்த்து, தன்னைப் பற்றிய தகவல்கள், இஸ்லாமிய நபிமார்கள் வாழ்த்து, யாப்பு அமைப்பு குறிப்பு ஆகியவை பாடப்படுகின்றன.

பாடல் நடை

வரையி னம்பல முழுகிடத் தழுவிமா திரத்தின்
திரவியங் கவர்ந் திருதரு வினத்தையுஞ் சேர்ந்தங்
குரியதுங் கவர்ந் துலவிய பொதுமக ணிகர்ப்பப்
பரவி நானிலம் வெருக்கொளப் பரந்தது பயமே

--பாடல் 7, நாட்டுச் சருக்கம்

நாட்டுச் சருக்கத்தில் தருமன் ஆளும் குரு நாட்டின் நீல வளம் நீர் வளம் வேளாண் தொழிலின் வளம் விவரிக்கப்படுகிறது. வெள்ளநீர் அனைத்தையும் கவர்ந்து நான்கு வகையான நிலத்தில் பாய்கிறது

சென்றவிபஞ் சகடெருது பரிபரித்த தல்லதொக்கச் சேர்ந்தோ ரெல்லாம்
அன்றெடுக்கக் கட்டளையிட் டெடுத்ததல்லால் மற்றதவ ணமைத்து வைத்து
வென்றியொடு செயமுரச மிகமுழங்க அலும்பகலும் விரைந்து ஏகிக்
கன்றலற நாள்மூன்றிற் கங்கைநதிக் கரைசேர்ந்தான் காண்டீ பத்தோன்

--பாடல் 18, வேள்வியாரம்பச் சருக்கம்

அர்ஜுனன் இமயமலைப் பகுதிகளிலிருந்து திரவியங்கள் சேர்த்து கங்கைக் கரையை அடைதல்

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.