எம்.வி. வெங்கட்ராம்

From Tamil Wiki
Revision as of 22:44, 29 December 2022 by Navingssv (talk | contribs)

எம்.வி.வெங்கட்ராம் (மே 18, 1920 - ஜனவரி 14, 2020) தமிழ் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர். மணிக்கொடி இலக்கியக்குழுவின் இளைய உறுப்பினர்.

பிறப்பு, கல்வி

எம்.வி. வெங்கட்ராம் மே 18, 1920 அன்று கும்பகோணம் மாவட்டத்தில் சௌராஷ்ட்ராக் குடும்பத்தில் ’ரெங்கா’ வீரய்யர், சீதையம்மாள் தம்பதியருக்கு மூன்றாவதாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் நால்வர். தந்தை ரெங்கா வீரய்யர் குடும்ப குலத் தொழிலான நெசவு தொழில் செய்தார். எம்.வி. வெங்கட்ராம் தன் ஐந்து வயதில் தாய் மாமனான மைசூர் வெங்கடாசலம், சரஸ்வதி தம்பதியருக்கு தத்துக் கொடுக்கப்பட்டார். எம்.வி. வெங்கட்ராம் தன் வளர்ப்பு தந்தை பெயரையும் சேர்த்து தன் முழு பெயரை மைசூர். வெங்கடாசலம். வெங்கட்ராம் (எம்.வி.வி) என்றே குறிப்பிடுவார்.

எம்.வி. வெங்கட்ராம் ஆரம்ப கல்விக்கு பின் கும்பகோணம் நகர உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் பயின்றார். கல்லூரி இண்டர்மீடியட் படிப்பை கும்பகோணம் அரசு கல்லூரியில் தொடர்ந்தார். கல்லூரி நாட்களில் ’இந்தி விசாரத்’ தேர்வுக்காக பி.எம். கிருஷ்ணசாமியிடம் தனியாக இந்தி பயின்றார். அப்போது பி.எம். கிருஷ்ணசாமி மணிக்கொடி இதழில் இந்தி சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வந்தார். எம்.வி.வி க்கு பி.எம். கிருஷ்ணசாமி மூலம் கிடைத்த மணிக்கொடி இதழ்களால் தமிழ் இலக்கியத்தில் பரிட்சியம் ஏற்பட்டது.

எம்.வி.வி இன் இலக்கிய ஈடுபாட்டால் அவரது இண்டர்மீடியட் கல்வி ஓராண்டு தடைப்பட்டது. மறு ஆண்டு மீண்டும் தேர்வெழுதி தேர்ச்சி பெற்றார். பின் குடந்தைக் கலைக் கல்லூரியில் பி.ஏ. பொருளியல் பயின்றார். எழுத்தாளர் தி. ஜானகிராமன் எம்.வி.வி. இன் கல்லூரி தோழர். பி.ஏ படிக்கும் போது இந்தி விஷாரத் தேர்வும் எழுதித் தேர்ச்சி பெற்றார்.

தனி வாழ்க்கை

1941 ஆம் ஆண்டு எம்.வி. வெங்கட்ராம் கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்படத்தால் கும்பகோணம் சிறிய மலர் உயர்நிலைப் பள்ளியில் ஓராண்டு காலம் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றினார். 1942 ஆம் ஆண்டு புனா இராணுவ அலுவலகத்தில் மிலிட்டர் அக்கவுண்ட் செக்‌ஷனில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். அங்கே இராண்டாண்டு காலம் பணியாற்றினார். 1944 ஆம் ஆண்டு மீண்டும் ஊர் திரும்பினார்.

எம்.வி. வெங்கட்ராம் ருக்மணி அம்மாளை 1939 ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். எம்.வி.வி, ருக்மணி அம்மாள் தம்பதியருக்கு நான்கு ஆண், மூன்று பெண் என மொத்தம் ஏழு குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

எம்.வி. வெங்கட்ராமின் முதல் சிறுகதையான ’சிட்டுக்குருவி’ மணிக்கொடி இதழில் அவரது பதினாறு வயதில் வெளிவந்தது. தொடர்ந்து பி.எஸ். ராமையா பதிப்பாசிரியராக இருந்த மணிக்கொடியில் முப்பதற்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதினார்.

இதழியல் செயல்பாடு

1944 ஆம் ஆண்டு புனாவிலிருந்து கும்பகோணம் திரும்பிய எம்.வி.வி யை எழுத்தாளர் கு.ப. ராஜகோபாலன்கிராம ஊழியன்’ இதழில் வேலை செய்யும் படி பணிந்தார். 1948 வரை எம்.வி.வி கிராம ஊழியனில் பணியாற்றினார். 1948-ல் கு.ப.ராவின் மறைவிற்கு பின் எம்.வி.வி தன் நண்பர்கள் கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமனுடன் இணைந்துக் கொண்டு ’தேனீ’ மாத இதழைத் தொடங்கினார். தேனீ இதழ் ஜனவரி 1948 முதல் ஜனவரி 1949 வரை ஓராண்டு காலம் வெளிவந்தது. அதன் பின் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தாலும், தேனீ இதழில் ஏற்பட்ட நஷ்டத்தாலும் இதழ் முடிவுக்கு வந்தது.