first review completed

உருத்திரனார்

From Tamil Wiki
Revision as of 07:14, 8 December 2022 by Tamizhkalai (talk | contribs)

உருத்திரனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

உருத்திரனாரின் இயற்பெயர் இதுதானா என்பதை உறுதியாக அறியக்கூடவில்லை. அக்கால மக்களின் முதன்மை தெய்வமாக ருத்திரன் விளங்கியதால் இவருக்கு இப்பெயர் இடப்பட்டிருக்கலாம். அல்லது, பாலை நிலத்தில் கொளுத்தும் வெயிலை, வெயிலின் ருத்திரத்தை இவர் புதுமையான சொற்களால் பாடலில் கூறியுள்ளதால் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

இலக்கிய வாழ்க்கை

உருத்திரனார் இயற்றிய ஒரு பாடல் சங்க  இலக்கியத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 274- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. கடும் தாகமெடுக்கும்பொது நீர்ப்பசையுள்ள மரப்பட்டையை மென்று தாகம் தணித்துக்  கொள்ளும்   வழக்கத்தை இப்பாடல் காட்டுகிறது.

பாடலால் அறியவரும் செய்திகள்

குறுந்தொகை 274
  • பாலைத் திணை
  • புறா முதுகு போன்ற நிறம் கொண்ட உகாய் என்னும் மரத்தின் கனிகள் இறா மீன் போல் இருக்கும்
  • வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர்
  • அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால்  நீர்ப்பசை உள்ள ஒருவகை இலை அல்லது மரப்பட்டையை மென்று அதன் சாறை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர். 
குறுந்தொகை 274

புறவுப் புறத்தன்ன புன்கா லுகாஅய்க்
காசினை யன்ன நளிகனி யுதிர
விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும்
இன்னாக் கானமும் இனிய பொன்னொடு
மணிமிடை யல்குல் மடந்தை
அணிமுலை யாக முயகினஞ் செலினே.

(புறா முதுகு போன்ற நிறம் கொண்ட உகாய் என்னும் மரத்தின் சூல் கொண்ட இறா மீன் போல் இருக்கும் கனிகள் உதிரும்படி வழிப்பறி செய்யும் ஆடவர் அதன் கிளை மேல் ஏறி இருந்துகொண்டு அம்பு எய்வர். அவர்களுக்குத் தண்ணீர்த் தாகம் எடுத்தால்  நீர்ப்பசை உள்ள ஒருவகை நாரை/மரப்பட்டையை மென்று அதன் சாறை உறிஞ்சித் தன் தாகத்தைத் தீர்த்துக் கொள்வர்.  உன்னை அழைத்துச் செல்லும் காட்டுவழி அத்தனை வறண்டது.எனினும், மடந்தையே!  உன்னைத் தழுவிக்கொண்டு சென்றால் அது எனக்கு இனியது.)

உசாத்துணை

சங்கத் தமிழ் புலவர் வரிசை, அதியன் விண்ணத்தனார் முதலிய புலவர்கள் , புலவர் கா. கோவிந்தன், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்

குறுந்தொகை 274  ,  தமிழ்த் துளி இணையதளம்

குறுந்தொகை 274  , தமிழ் சுரங்கம் இணையதளம்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.