under review

குறமகள் குறிஎயினி

From Tamil Wiki
Revision as of 08:29, 3 December 2022 by Logamadevi (talk | contribs)

குறமகள் குறிஎயினி,  சங்ககாலப் பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவரது ஒருபாடல் சங்கத் தொகை நூலான நற்றிணையில் இடம் பெற்றுள்ளது.

ஆசிரியர் குறிப்பு

குறமகள் குறிஎயினி என்ற பெயரிலுள்ள குறமகள் குறிஞ்சி நிலப் பெண்ணை குறிப்பது. எயினி என்பது பாலை நிலத்துப் பெண்ணை குறிப்பது.  குறி எயினி என்று குறிப்பிடப்படுவதால் இவர் குறி சொல்லும் பெண்ணாக இருந்திருக்கலாம். குறிஞ்சி நிலத்துப் பெண் குறத்தி. முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர் படிமம் கெள்ளுமாகையால் குறிஞ்சி நிலக் குறமகள் எயினியாகவும் திணைநிலத் திரிவால் பேசப்படுகிறாள் எனக் கொள்ளலாம். குறமகள் இளவெயினி என்ற புலவரின் பெயரும் இவ்வாறு அமைந்திருப்பதைக் காணலாம்.

பாடல்கள்

குறமகள் குறிஎயினி இயற்றிய ஒரு பாடல்  சங்கப்பாடல் தொகுப்பான நற்றிணை நூலில் 357 எண் கொண்ட பாடலாக இடம்பெற்றுள்ளது.

நற்றிணை 357

நின் குறிப்பு எவனோ?- தோழி!- என் குறிப்பு
என்னொடு நிலையாதுஆயினும், என்றும்
நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே-
சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன்,
பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப்
பீலி மஞ்ஞை ஆலும் சோலை,
அம் கண் அறைய அகல் வாய்ப் பைஞ் சுனை
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி,
நீர் அலைக் கலைஇய கண்ணிச்
சாரல் நாடனொடு ஆடிய நாளே.

 பொருள்

மலைச்சோலைப் பாறையில் ஏறி மயில் ஆடிற்று. அப்போது அங்கிருந்த சுனையில் பூத்திருந்த நீலமலர் அவரும் நானும் நீராடும்போது எங்களைப் பார்த்து ஆடியது. நான் சூடியிருந்த நீலமலர்க் கண்ணியும் நீரலையில் ஆடியது. நான்தானே நீராடினேன். இப்போது அவர் பிரிந்தாலும் நானே தாங்கிக்கொள்வேன்.

உசாத்துணை


✅Finalised Page