standardised

மச்சவல்லபன் போர்

From Tamil Wiki
Revision as of 10:02, 25 October 2022 by Tamizhkalai (talk | contribs)
திமிதியுடன் (மச்சகன்னி) அனுமன்

மச்சவல்லபன் போர்: தமிழகத்தில் வழக்கில் உள்ள ராமாயண நாட்டார் கதைகளுள் ஒன்று. இக்கதை மயில் ராவணன் கதையின் உபகதையாகவும் உள்ளது.

கதை

ராவணனுடன் போர் செய்ய இலங்கைக்குப் புறப்பட்ட போது கிஷ்கிந்தைக்கும், இலங்கைக்கும் நடுவே கடலிருந்ததால் யாராலும் அதனைக் கடக்க முடியவில்லை. கிஷ்கிந்தை கரையில் இருந்த வானரப் படைகள் செய்வதறியாது நின்றனர். அப்போது ஜாம்பவான் அனுமனிடம் வந்தான். அனுமனால் கடலைக் கடந்து பறந்து செல்ல முடியும் எனக் கூறினான். அதுவரை தன் ஆற்றல் அறியாது அனுமன் ஜாம்பவான் சொல் கேட்டு பறந்து கடலைக் கடந்தான். இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு இலங்கையை தீயிட்டு வந்தான். பின் கிஷ்கிந்தையிலிருந்து இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணியில் ராமனுடன் துணை நின்றான்.

இப்படி அனுமன் கிஷ்கிந்தைக்கும், இலங்கைக்கும் பயணம் செய்த போது அனுமனின் நிழலை கடலில் வாழ்ந்த வெட்கை என்னும் அரக்கி கவ்விக் கொண்டாள். அனுமன் அவள் வாய் வழியாகச் சென்று வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான். வெளியே வந்த அனுமனின் உடல் முழுவதும் வியர்வை கொண்டிருந்தது. அதனை கையிலெடுத்து வீசிய போது அங்கே வாய் திறந்து நின்றிருந்த திமிதி என்னும் மச்சகன்னியின் வாயுள் வியர்வை சென்றது.

அனுமனின் வியர்வையால் திமிதி கருவுற்றாள். இதனை அறியாத அனுமன் மீண்டும் ஆகாயத்தில் பறந்து இலங்கைக்குச் சென்றான்.

திமிதி பத்து மாதம் கருவை காத்து ஆண் மகனொன்றைப் பெற்றாள். அவனுக்கு மச்சவல்லபன் எனப் பெயரிட்டாள். மச்சவல்லபன் பிறந்ததும் அவன் தந்தை வழி பாட்டனான வாயு தேவன் அவனிடம் வேண்டும் வரத்தைக் கேட்கும்படி கூறினார்.

மச்சவல்லபன், “என் தந்தைக்கு நிகரான ஆற்றல் கொண்டவனாக வேண்டும். அவரையும் வெல்லும் ஆற்றல் எனக்கு வேண்டுமென்றான்.” வாயுதேவன் மச்சவல்லபனுக்கு அவ்வரத்தை அருளினார்.

மச்சவல்லபன் பதினான்கு உலகங்களையும் வெல்லும் பொருட்டு கிளம்பினான். அவனை அழைத்த மயில் ராவணன் தன்னோடு இருக்கும்படி வேண்டினான். மயில் ராவணன் மச்சவல்லபனுக்கு வேண்டியதைச் செய்துக் கொடுத்தான். மச்சவல்லபன் மயில் ராவணனின் பாதாள இலங்கைக்கான கோட்டைக்கு படைத்தலைவன் ஆனான். மயில் ராவணனின் இரண்டாயிரம் கோடி அரக்கர்களும் கோட்டை வாயிலைக் காத்தனர்.

ராம, ராவணப் போரில் ராவணனின் படைகள் முழுவதும் அழிந்தது. ராவணன் தன் ஒன்றுவிட்ட தம்பியான மயில் ராவணனை அழைத்தான். ராம, லட்சுமணரைக் கொள்ளும்படி ஆணையிட்டான். மயில் ராவணன் இருவரையும் காளிக்கு பலி கொடுப்பேன் என சபதம் கொண்டான். தன் தந்திரத்தால் ராம, லட்சுமணரை பாதாள இலங்கைக்கு கடத்தி வந்த போது அவர்களை மீட்க அனுமன் பாதாள உலகம் வந்தான். அங்கே கோட்டைக்கு காவலாக நின்ற மச்சவல்லபனுடன் போர் புரிந்தான். தன்னுடன் நிகர் வல்லமையில் நின்ற மச்சவல்லபனைக் கண்டு அஞ்சினான். மச்சவல்லபனின் பிறப்பு பற்றி வினவினான். மச்சவல்லபன் நடந்தது அனைத்துயும் சொல்லவும் அனுமன் தன் விஸ்வரூபதை மச்சவல்லபனுக்கு காட்டி, “நான் தான் உன் தந்தை” என்றான்.

மச்சவல்லபனை மயக்கமுறச் செய்து பாதாள இலங்கையில் மயில் ராவணனைக் கொன்று வீழ்த்தினான். மயில் ராவணனின் தங்கை தூரதண்டியின் மகனான நீலமேகனுக்கு அனுமன் பட்டம் கட்டினான். அவனுக்கு காவல் நிற்கும் படி தன் மகன் மச்சவல்லபனை படைத்தலைவனாக நியமித்து பூலோகம் மீண்டான்.

கந்தர்வனுக்கு அடைக்கலம் கொடுத்த கதை

ஆகாய வெளியில் கந்தர்வன் தன் துணைவியர்களுடன் கூடியிருந்தான். அப்போது அவனது வியர்வை கடலில் பட்டு கடல் மாசு கொண்டது. தான் வியர்வையில் பிறந்தவன் என மற்றவர்கள் கேலி செய்துவந்ததால் கந்தர்வனின் வியர்வைக் கண்டு கடலைக் காத்து நின்ற மச்சவல்லபன் கோபம் கொண்டான். அவன் கோபம் கூடி வஞ்சமானது. ஆகாய வெளியில் பறந்து கந்தர்வனை அடைந்தான். அவனைக் கொன்ற பின்னே மீள்வேன் என சபதம் கொண்டான். மச்சவல்லபனின் ஆற்றல் அறிந்த கந்தர்வன் பூலோகம் விரைந்தான். அங்கே கங்கைக் கரையில் பாலம் அமைத்துக் கொண்டிருந்த அனுமனிடம் அடைக்களம் வேண்டினான்.

அவனை துரத்தி வந்த மச்சவல்லபன் அனுமனைத் தந்தை என்றறியாது தனிப் போருக்கு அழைத்தான். இருவரும் நிகர் வல்லமையில் நின்றனர். அனுமன் கடலின் மேல் நின்று வாயு தேவனை வேண்டி காற்றைச் சுழித்து மச்சவல்லபன் மேல் விட்ட போது அவை மலராக மாறி அவன் மேல் தூவின. அதிர்ச்சியடைந்த அனுமன், ”என் வல்லமைக்கு நிகர் நிற்க இந்த பூமியில் யாருமில்லை. அப்பனே, நீ யார்? உன் பிறப்பைப் பற்றிச் சொல்” என்றான்.

மூர்க்கனான மச்சவல்லபன் தான் அனுமனின் வியர்வையில் மச்சகன்னியான திமிதிக்கு பிறந்தவன் என்றான். தன் பிறப்பை முழுவதும் சொன்னதும் அனுமன் தன் விஸ்வரூபம் காட்டி மச்சவல்லபனைக் கையிலெடுத்துக் கொஞ்சினான். திமிதியை சந்தித்து வாழ்த்தினான். மச்சவல்லபனைக் கடலைக் காக்கும்படி பணிந்தான். மூவரையும் ஒன்று சேர்த்ததால் மச்சவல்லபன் கந்தர்வனை மன்னித்தான்.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு

வெளி இணைப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.