under review

ஜாம்பவான்

From Tamil Wiki
(நன்றி: Wisdom Library)

ஜாம்பவான் இராமாயணத்தில் கிஷ்கிந்தை நகரை ஆண்ட சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவர். இராவணனுடனான போரில் ஜாம்பவான் இராமனுக்குத் துணை நின்றார். ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி கிருஷ்ணனின் எண் மனைவியருள் ஒருவர். ஜாம்பவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்பது அவதாரங்களில் துணைக் கதாபாத்திரமாக வருகிறார். ஜாம்பவ இனம் கரடி குலத்தவர்களாகவும், குரங்கு இனத்தவர்களாகவும் புராணங்களில் சித்தரிக்கப்படுகிறது.[1]

பிறப்பு

கும்பகோணம் கோவிலில் உள்ள ஜாம்பவானின் சிற்பம்(நன்றி: Wisdom Library)

இராவணன் பூலோகத்தில் பல தொல்லைகளையும், அநீதிகளையும் செய்து வந்தான். இராவணின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி அவனை தேவருலகிற்குச் செல்லுமாறு கூறினாள். பூமாதேவியின் சொல் கேட்டு இராவணன் தேவருலகம் சென்றான். அங்கும் தேவர்களுக்குப் பல தொல்லைகள் தந்தான். இராவணனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் பிரம்மாவிடம் ஓடினர். பிரம்மா பாற்கடலுக்குச் சென்று விஷ்ணுவிடம் நடந்ததைச் சொன்னார். பிரம்மா சொல்வதைக் கேட்ட விஷ்ணு, "பிரம்ம தேவரே! அந்த இராவணனை அழிக்க நான் அயோத்தி ஆளும் தசரதரின் மகனாகப் பிறப்பேன். இராமன் என்ற அவதாரம் எடுத்ததும் நான் இராவணனை அழிப்பேன்" என்றார். விஷ்ணுவின் சொல் கேட்டு பிரம்மா தேவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பிரம்ம லோகம் திரும்பினார். அங்கிருந்து விஷ்ணுவின் அவதாரத்திற்கு உதவ வானர இனத்தைப் படைத்தார். கிஷ்கிந்தையில் ஜாம்பவான் மற்றும் பிற வானரர்கள் பிறந்தனர்.

புராணக் கதைகள்

அனுமன் இலங்கைக்கு செல்ல ஜாம்பவான் உதவுதல்

ஜாம்பவானின் பிறப்பு குறித்து வேறு இரண்டு புராணக் கதைகளும் உண்டு.

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் வரும் கதை இது. பிரம்மன் வானரப் படைகளால் ஆன இனத்தை உருவாக்க விரும்பி நீண்ட யோசனையில் இருந்தார். அவர் கண்ணயர்ந்த போது அவரது கொட்டாவியில் இருந்து ஜாம்பவான் தோன்றினார். தூங்கி எழுந்ததும் தன் முன் கரடி முகத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்ட பிரம்மா, "இதோ நான் ஒரு அழகிய கரடியை உருவாக்கினேன். என் வாயில் இருந்து வந்த கொட்டாவியில் தோன்றியவன் ஜாம்பவான். (சமஸ்கிருதத்தில் ஜ்ரும்ப என்றால் கொட்டாவி என்று பொருள்)" என தன் பிரஜாதிபதிகளுக்கு காட்டினார். இக்கதை வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் ( சர்கம்-17, பாடல்- 6) இடம்பெற்றிருக்கிறது.

புராணங்கள்
ஜாம்பவான் கிருஷ்ணனுடன் போரிடுதல்

பிரம்ம லோகத்தில் ஒரு நாள் காலை மறைந்து இரவு இரண்டாம் சாமத்தில் (விஷ்ணுவின் காதிலுள்ள குறும்பையிலிருந்து பிறந்த) மது, கைடபன் என்னும் இரு அசுரர்கள் பாற்கடலைக் கலக்கி, குழப்பம் விளைவித்தார்கள். பாற்கடலில் ஒற்றைத் தாமரை மிதந்து வருவதைக்கண்டு,அதைக் கையில் எடுத்து உள்ளே பார்த்த போது பிரம்மா அதனுள் புடவியைப் படைக்கத் துவங்கியிருந்தார். மது, கைடபர் பிரம்மாவைத் தனிப் போருக்கு அழைத்தனர். திகைத்த பிரம்மனின் உடலிலிருந்து வியர்வை வழிந்தது.

ஜாம்பவான் அந்த வியர்வைத் துளியிலிருந்து பிறந்தான். தன் வியர்வையில் இருந்து பிறந்ததால் பிரம்மா அவனுக்கு அம்புஜதன் எனப் பெயரிட்டார். பின்னர் பிரம்மன் மதுகைடபருடன் யுத்தம் செய்ய விஷ்ணுவை வேண்டினார். மது கைடப யுத்தத்தின் போது ஜாம்பவான் உடனிருந்ததாகச் சொல்லப்படுகிறது. மது கைடபரின் இறந்த உடலிலிருந்து பூமி ஏழு நிலத்தட்டுக்களாக (த்வீபங்களாக) உருவானது. பாரத தேசம் ஜம்புத்வீபத்தில் அமைந்தது. பிரம்மா அவனை ஜாம்பூநதத்திற்குப் (ஜாம்பூநதம் - கங்கை பாயும் பள்ளத்தாக்கை உடைய பொன்னிறமான மலை) போகும் படி சொன்னார். ஜாம்பூநததிற்கு முதலில் சென்றதால் அவன் பெயர் ஜாம்பவான் என்றானது (ஜம்புத்வீபத்துக்குப் போனதால் ஜாம்பவான் என்ற பெயர் வந்தது என்றும் கூறப்படுகிறது).

ஜாம்பவான் உதயமான போது புடவி இல்லாததால் காலமும் இல்லை அதனால் பிறந்த நேரத்தைக் கணிக்க முடியவில்லை. ஸ்ரீ இராமருக்கு உதவிய ஜாம்பவான் ஆறு மன்வந்தரமும் நூற்றி அறுபத்தி நான்கு சதுர்யுகமும் (நான்கு யுகங்களின் காலம்) வயதானவன். ஜாம்பவான் மச்சாவதாரம் முதல் இராமாவதாரம் வரை விஷ்ணுவின் அவதாரங்களில் துணை இருந்தான் என்ற குறிப்பு கூர்ம புராணத்தில் பூர்வ காண்டத்தில் வருகிறது.

இராம அவதாரத்தில் ஜாம்பவான்

ஜாம்பவான் கிருஷ்ணனுக்கு சியமந்தகத்தை கொடுத்தல்

இராமாயணக் கதையில் வரும் ஜாம்பவான் சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டத்தின் நாற்பத்தி ஒன்றாவது சர்கத்தில் இது பற்றிய குறிப்பு வருகிறது. நீலன், அனுமன், ஜாம்பவன், சுகோத்திரன், சராரி, சரகுல்மன், கஜன், கவஸ்கன், கவயன், சுசேனன், ரிஷபன், மந்தன், திவிவிடன், விஜயன், கந்தமதனன், உள்காமுகன், அசங்கன், அங்கதன் என்பவர்கள் சுக்ரீவனின் அமைச்சர்களாக இருந்தனர். வானரப் படைகள் இராமேஸ்வரம் அடைந்த போது அங்கே கடலைக் கடக்க ஒவ்வொருவராக முன்வந்து தோல்வியுற்றனர். இதனைக் கண்ட ஜாம்பவான் அனுமனை அழைத்து கடலைத் தாண்டும்படிச் சொன்னார். தன் வல்லமையை தான் அறியாத அனுமன் தயக்கம் காட்டவே, ஜாம்பவான் அனுமனின் வல்லமையை எடுத்து கூறி, அவன் பெற்ற வரங்களையும் நினைவூட்டினார். ஜாம்பவானின் சொல் கேட்டுத் தன் பலத்தை உணர்ந்த அனுமன் இராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்குத் தாவிச் சென்றான். (கிஷ்கிந்தா காண்டம்)

லட்சுமணன் இந்திரஜித்தின் நாகபாசத்தால் மயங்கியபோது ஜாம்பவான் சஞ்சீவி மலையில் நாகபாசத்திற்கான மூலிகை இருப்பதையும், அங்கு செல்லும் வழியையும் சொல்லி, அனுமனை மூலிகை எடுத்து வரப் பணித்தார். (யுத்த காண்டம்)[2]

வாமன அவதாரத்தில் ஜாம்பவான்

Jambavan2.jpg

விஷ்ணுவின் வாமன அவதாரத்தில் ஜாம்பவான் விஷ்ணுவைச் சுற்றி இருந்தான். விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு மகாபலியை வெல்ல வந்த போது ஜாம்பவான் பெரும் வல்லமையுடன் இருந்தான். இராம அவதாரத்தில் ஜாம்பவானின் பலம் குன்றிவிட்டது. வானரப் படையிடம் "பண்டைய நாட்களில் என் ஆற்றல் நீங்கள் இப்போது காணும் என் ஆற்றலை விட நூறாயிரம் மடங்கு பெரியது. மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மூவுலகையும் அளந்த போது அவருடன் நான் துணையாக மூவுலகையும் சுற்றி வந்தேன். இப்போது வயதாகி விட்டதால் என்னால் இந்த கடலைக் கூட கடக்க இயலவில்லை" என்று ஜாம்பவான் கூறுவதிலிருந்து இது புலனாகிறது.

கிருஷ்ணாவதாரத்தில் ஜாம்பவான்

Jambavan3.jpg

ஜாம்பவான் பற்றிய குறிப்பு விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணனின் கதையிலும் வருகிறது. சூரிய தேவர் ஒளி பொருந்திய சியமந்தக மணியை சத்ராஜித் மன்னனுக்குப் பரிசாகத் தந்தார். சத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன் அதனை அணிந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். காட்டில் சிங்கத்தால் பிரசேனன் கொல்லப்பட, சியமந்தகம் சிங்கத்தின் குகையில் கிடந்தது. காட்டில் வசிக்கும் ஜாம்பவான் அந்த சிங்கத்தின் குகையில் மணியைக் கண்டு, சிங்கத்தைக் கொன்று சியமந்தக மணியை எடுத்துவந்து தன் மகள் ஜாம்பவதியின் கழுத்தில் இட்டார். கிருஷ்ணனின் பகைவர்கள் சத்ராஜித் மன்னனிடம் பிரசேனனை கிருஷ்ணன் கொன்று சியமந்தக மணியை எடுத்ததாகப் பழி கூறினர். அப்பழியைப் போக்க கிருஷ்ணன் சியமந்தக மணியைத் தேடி காட்டிற்குச் சென்றார்.

Jambavanta.jpg

காட்டில் ஜாம்பவதியின் கழுத்தில் சியமந்தகம் இருப்பதைக் கண்ட கிருஷ்ணன் ஜாம்பவானுடன் போர் புரிந்தார். இருவருக்கும் இடையே இருபத்தெட்டு நாட்கள் துவந்தம் நிகழ்ந்தது. இருபத்தெட்டாம் நாள் இறுதியில் கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று ஜாம்பவதியை மணம் செய்தார். மணக் கொடையாக சியமந்தக மணியைப் பெற்றுத் திரும்பினார்.

ஜைன இராமாயணம்

Jambavan1.jpg

ஜைன இராமாயணத்திலும் ஜாம்பவான் பற்றிய குறிப்பு வருகிறது. ஜாம்பவான் இராவணனுடன் போர் செய்ய இராமனுக்கு துணை புரிந்ததாக ஸ்வயம்புதேவரின் பௌமாசரியத்தில் குறிப்பு வருகிறது. ஸ்வயம்பு தேவர் பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் கர்நாடகப் பகுதியில் வாழ்ந்தவர். இதில் ஜாம்பவ படைகள் பற்றிய குறிப்புகளில் பல்லாயிரம் யானை, குதிரை, காலாட் படைகள் இருந்ததாக செய்தி உள்ளது.

ஜாம்பவான் பெற்ற சாபம்

வாமன அவதாரத்தில் ஜாம்பவான் அதீத சக்தி பெற்றவனாக இருந்தான். விஷ்ணு மூவுலகைக் அளந்த போது அச்செய்தியை சுமந்து மூவுலகும் பதினெட்டு மடங்கு வேகத்தில் பறந்து சென்றார். ஜாம்பவான் பூலோகத்தில் உள்ள மகாமேரு மலையைக் கடக்கும் போது கர்வம் கொண்டான். அதனை கண்ட மேரு, "உன் ஆற்றலாலும், இளமையாலும் கர்வம் கொண்டாய். இனி உனக்கு அவை இரண்டும் இல்லாமல் ஆகுக. நீ இனி எப்போதும் முதுமையுடேனே இருப்பாய். உன் மனம் அறியும் வேகத்தை உடலால் செலுத்த முடியாது" என்றது. அதனால் இராம அவதாரத்தில் ஜாம்பவானால் பறந்து சென்று இராமனுக்கு உதவ முடியாமல் போனது.

ஜாம்பவதி

ஜாம்பவானுக்கு ஜாம்பவதி என்றொரு மகள் இருந்தாள். அவள் மகாபாரத காலத்தில் கிருஷ்ணனை மணந்தாள்.

ஜாம்பவ நகரம்

ஜமுத்தூன் என்னும் கிராமம் மத்திய பிரதேசம் ரத்லம் மாவட்டத்தில் உள்ள ரத்லம் தக்சல் என்னும் பகுதியில் ஜமுதூன் கிராமம் உள்ளது. இதில் பழங்கால கலாசாரம் இருந்ததற்கான தடையங்கள் காணக் கிடைக்கின்றன. அந்நகரம் ஜாம்வந்தா அல்லது ஜாம்பவ நகரம் என நம்பப்படுகிறது. அதனை அகழ்வாய்வு செய்த போது பழங்கால செங்கல்கள் கிடைத்தன.

ஜாம்பவான் குகை

ஜாம்பவான் குகை குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகில் உள்ள ரானவாவ் என்னும் கிராமத்தில் உள்ளது. கிருஷ்ணனுக்கும், ஜாம்பவானுக்கும் இடையே சியமந்தக மணிக்காக நடந்த போர் நடந்த இடமாக நம்பப்படுகிறது. இங்கு கிருஷ்ணன் ஜாம்பவதி திருமணம் நிகழ்ந்து ஜாம்பவான் சியமந்தக மணி கிருஷ்ணனுக்கு மணக்கொடையாக வழங்கினார். இக்குகையின் உள்ளே இரு சுரங்கப்பாதைகள் உள்ளன. ஒரு பாதை ஜுனாகாத் செல்லும் வழியாகவும், மற்றொரு பாதை துவாரகைக்கான பாதையாகவும் உள்ளது. இக்குகை தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

ஒன்பது அவதாரங்களின் சாட்சி

ஜாம்பவான் பரசுராமன், அனுமனைப் போல் இராம, கிருஷ்ண என விஷ்ணுவின் இரண்டு அவதாரங்களிலும் பங்கு கொண்டுள்ளான். விஷ்ணு கூர்ம அவதாரத்தில் பூமியைக் குடைந்தபோது ஜாம்பவான் சாட்சியாக இருந்தான். வாமன அவதாரத்தில் விஷ்ணுவுடன் மூவுலகையும் சுற்றி வந்தார். ஜாம்பவான் மட்டுமே விஷ்ணுவின் ஒன்பது அவதாரங்களிலும் வாழ்ந்த கதாபாத்திரம்.

மறைவு

இராம பட்டாபிஷேக சத்சங்கத்தில் ஜாம்பவான் முக்தியடைந்தார் என்ற குறிப்பு விஷ்ணு புராணத்தில் உள்ளது.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. ஜாம்பவான் இனம் குரங்கு அல்லது கரடி முக அமைப்புக் கொண்டதாக சித்தரிக்கப்படுகிறது. சில இந்திய மொழிகளில் குரங்கு முகம் கொண்டவராக ஜாம்பவான் வருகிறார். மலையாளத்தில் ஜாம்பவான் குரங்கு முகம் கொண்ட ஆதி மனிதனாக அறியப்படுகிறார். வால்மீகி இராமாயணத்தில் ஜாம்பவான் 'கப்பி’ (குரங்கு) என்ற சொல்லாலும், 'ர்க்ஷா’ (கரடி) என்ற சொல்லாலும் குறிப்பிடப்படுகிறார். ஜாம்பவான் ’ர்க்ஷாபுங்கவன்’ என வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் பதினேழாவது சர்கத்தில் சொல்லப்பட்டுள்ளார். அதே பகுதியில் பிரம்மாவின் எண்ணத்தில் இருந்த கடவுள் மற்றும் தேவ பெண்கள் குரங்குகளாக பிறப்பெடுத்து விஷ்ணுவின் இராம அவதாரத்தில் போரில் உதவினர் என்ற குறிப்பும் வருகிறது. இதன் மூலம் ஜாம்பவானை குரங்கு அல்லது கரடி என இரண்டில் எதுவாக சித்தரித்தாலும் சரியே என அறிய முடிகிறது.
  2. கம்பராமாயணப் பாடல்கள்

    "மாண்டாரை உய்விக்கும் மருந்து ஒன்றும், மெய் வேறு வகிர்களாகக்
    கீண்டாலும் பொருந்துவிக்கும் ஒரு மருந்தும், படைக்கலங்கள் கிளர்ப்பது ஒன்றும்,
    மீண்டேயும் தம் உருவை அருளுவது ஓர் மெய்ம் மருந்தும், உள; நீ, வீர!
    ஆண்டு ஏகி, கொணர்தி' என அடையாளத்தொடும் உரைத்தான், அறிவின் மிக்கான்..!
                                                        (யுத்த காண்டம் மருத்துமலைப் படலம்-26)
     எழுபது வெள்ளத்தோரும், இராமனும், இளைய கோவும்,
    முழுதும் இவ் உலகம் மூன்றும், நல் அற மூர்த்திதானும்,
    வழு இலா மறையும், உன்னால் வாழ்ந்தன ஆகும்; மைந்த!
    பொழுது இறை தாழாது, என் சொல் நெறி தரக் கடிது போதி.
                                                       (யுத்த காண்டம் மருத்துமலைப் படலம்-23)
     


✅Finalised Page