under review

மயில் இராவணன் கதை

From Tamil Wiki
Mayil-1.jpg

மயில் ராவணன் கதை (மயிலிராவணன் கதை) தமிழகத்தில் வழக்கில் உள்ள ராமாயண நாட்டார் கதை. ராவணனின் தம்பியான பாதாளத்தில் வாழும் மயில் ராவணன் ராம, லட்சுமணரைக் கடத்தி வந்து காளிக்குப் பலி கொடுத்ததாகவும், அனுமன் விஸ்வரூபம் கொண்டு பாதாள உலகம் சென்று இருவரையும் மீட்டு திரும்பியதாகவும் அமைந்த கதை. அனுமனுக்கு திமிதி என்னும் மச்சகன்னியில் பிறந்த மச்சவல்லபன், மயில் ராவணனின் தங்கை மகன் நீலமேகன் போன்ற நாட்டார் உபகதைகளையும் உள்ளடக்கியது.

பார்க்க: மச்சவல்லபன் போர்

பதிப்பு

மயில் ராவணன் கதை பி.இரத்தின நாயக்கர் & சன்ஸ் பெரிய எழுத்து பதிப்பாக வெளிவந்தது. இதன் ஆசிரியர் பெயரும் எழுதிய ஆண்டு கிடைக்கவில்லை.

கதை

மயில் ராவணன்1.jpg

இலங்கையில் ராவணனுடன் நிகழ்ந்த போரில் ராமன் அதிகாயன், மகாமாயன், நிகும்பன், அகும்பன் ஆகியோரை வீழ்த்தினான். ராவணனன் இதனையறிந்து பெரும்படையைத் திரட்டிக் கொண்டு ராமனுடன் போர் செய்ய யுத்தக் களத்திற்கு வந்தான். ராவணனுக்கும், ராமனுக்கும் போர் நிகழ்ந்தது. ராவணனின் அம்புகள் அனைத்தையும் தாண்டி ராமன் ராவணப் படைகளை நிர்மூலமாக்கினான். ராவணன் தனியனாக அரண்மனை திரும்பினான். அரண்மனையில் அமைச்சர்களிடம் நடந்ததைக் கூறினான். அதில் அமைச்சர்கள் ராவணனிடம், “பாதாளத்தில் இருக்கும் உங்கள் ஒன்றுவிட்ட தம்பி மயில் ராவணன் உள்ள வரை நீங்கள் ஏன் கவலை கொள்ள வேண்டும். அவன் ராமன், லட்சுமணன் இருவரையும் காளிக்கு பலி கொடுத்து வெல்வான்” என்றனர்.

அனுமன் மயில் ராவணன் போர்

அப்போது தான் நினைவு வந்தவனாய் தசகண்ட ராவணன் தம்பி மயில் ராவணனை அழைத்தான். அண்ணன் அழைத்ததும் பாதாள உலகிலிருந்து இலங்கைக்கு வந்தான் மயில் ராவணன். இலங்கை நகர் சிதைந்து கிடப்பதைக் கண்டு அண்ணனிடம் நட்ந்ததை வினவினான். தசகண்ட ராவணன் நடந்ததைக் கூறியதும், “கவலையை விடு நாம் இச்சிறுவர்களுக்காக அஞ்ச வேண்டியதில்லை. இவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். இவர்களை காளிக்குப் பலிகொடுத்து மீள்வேன்” எனச் சொல்லி அண்ணனிடம் ஆசி பெற்று பாதாள இலங்கைக்குச் சென்றான். அவனது அமைச்சனைக் கலந்தாலோசித்தான்.

மயில் ராவணன் இலங்கைக்கு வந்துச் சென்றதை சீதைக்கு காவல் நின்ற விபீஷணனின் மகள் திரிசடை அறிந்தாள். அவள் வாயு தேவனிடம் நடந்ததைக் கூறினாள். “மயில் ராவணன் ராம, லட்சுமணனை பதினைந்து நாழிகைக்குள் பாதாள இலங்கைக்குக் கொண்டுச் செல்லும் ஆற்றல் கொண்டவன். அவன் இருவரையும் சிறை செய்வதாக சபதம் கொண்டிருக்கிறான். இதனை ராம, லட்சுமணனிடம் சொல்லிவிடு” என்றாள். வாயு தேவன் அவற்றை விபீஷணனிடம் சொன்னான்.

விபீஷணன் அனைத்தையும் ராம, லட்சுமண, சுக்ரீவர்களிடம் கூறினான். மேலும் மயில் ராவணனின் தந்திர சக்தியையும், வீரத்தையும் பற்றி அவர்களிடம் கூறினான். அனைத்தையும் கேட்ட சுக்ரீவன் மயில் ராவணனை வெல்லத் தகுதியானவன் அனுமன் மட்டுமே என்றான். சுக்ரீவன் அனுமனை அழைத்து மயில் ராவணனைப் பற்றிக் கூறினான். அதனைக் கேட்ட அனுமன் ஆர்ப்பரித்தான் மயில் ராவணனைக் கொன்று அவன் ரத்தத்தைக் குடிப்பேன் என சபதமேற்றான். ராமன், லட்சுமணன் அவர்களது எழுபது வெள்ளம் சேனைகளையும் அழைத்தான். அவர்களைச் சுற்றி தன் வாளால் அரண் அமைத்தான். அவர்களைச் சூழ்ந்த வாள் கோட்டையானது. வாள் வளர்ந்து அனைவரையும் மூடிக் கொண்டது. அதன் துவாரம் அனுமனின் வாய் வழியாகச் சென்று காது வழி செல்லும் படி அமைந்தது. அந்த கோட்டையை விபீஷணன் இரவு முழுவதும் காவல் காத்தான். பகலில் நீலன், நளன், அங்கதன் ஆகியோரிடம் காவல் காக்கும் படி கட்டளையிட்டான். இரவில் வீரர்கள் அனைவரும் விழித்திருக்க இசைக் கருவிகளை முழக்கும் படி ஆணையிட்டான்.

மயில் ராவணன் ராம, லட்சுமணர்களை காளிக்கு பலி கொடுக்கும் நாள் குறித்தான். மயில் ராவணன் சதுரன், சகலப் பிரவாணன், மாயவினோதன், சாத்தி என தன் நான்கு அமைச்சர்களை அழைத்தான். அவர்கள் உரையாடலைக் கேட்ட மயில் ராவணனின் மனைவி வர்ணமாலிகை கணவனுக்கு அறிவுரைகள் கூறினாள். விஷ்ணுவின் அவதாரமான ராமனின் பெருமைகளை எடுத்துரைத்தாள். மயில் ராவணன் அவளை அலட்சியம் செய்து அமைச்சர்களின் பேச்சிற்கு மட்டும் செவி கொடுத்தான்.

மயில் ராவணனின் முதன்மை அமைச்சன் சதுரன் ராம, லட்சுமணர்களைக் கொண்டு வரப் புறப்பட்டான். ராமனின் இடத்திற்குச் சென்ற போது அங்கே ஆகாயத்திற்கும் பூமிக்குமான வெறும் கோட்டையைக் கண்டான். வெறுங்கையுடன் திரும்பினான். இரண்டாவது அமைச்சன் சாயித்தன் முயற்சித்துக் கோட்டையைச் சுற்றி வந்து பறவையாக உருமாறி உள்ளே செல்ல முயற்சித்து வாலைத் தள்ளி தலையை உள்ளே விட்டான். மூக்கும், வாயும் சிதைந்து பாதாளம் திரும்பினான். இப்படி அமைச்சர் தோற்று திரும்பியதும் மயில் ராவணன் தானே செல்ல முடிவெடுத்தான். தாமரைத் தண்டின் வழியே பாதாளத்திலிருந்து பூமிக்கு வந்தான். விபீஷணன் உருக் கொண்டு அனுமன் முன் சென்று, “அனுமனே எல்லாம் பத்திரம் தானே? உள்ளே வீரர்கள் உற்சாகத்தோடு இருக்கிறார்களா?” என வினவினான். அனுமன் வாய் வழியே புகுந்து காதுக்குள் சென்று வால் கோட்டையை அடைந்து உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ராமனையும், லட்சுமணனையும் ஒரு பெட்டியில் அடைத்து மீண்டான். அனுமனிடம், “கவனமாக இரு. மயில் ராவணன் என் உருவில் வந்து உன்னை ஏமாற்றக் கூடும்.” என எச்சரித்து பாதாள இலங்கைக்கு மீண்டான்.

மயில் ராவணன் ராமனுடன் மீள்வதைக் கண்ட ஆகாயவாணி, “ராக்கதனே! இச்செயலால் நீ துன்புறுவாய். அனுமன் ராம, லட்சுமணனை மீட்பான். உன் தங்கை மகனான நீலமேகனுக்குப் பட்டம் கட்டுவான். அதனால் இப்போதே அவர்களை விட்டுவிடு” என்றாள். மயில் ராவணன் அவள் சொல்லை லட்சியம் செய்யாது பாதாள உலகம் வந்து தங்கை தூர தண்டிகையையும் அவள் மகன் நீலமேகனையும் விலங்கு பூட்டி குகைச் சிறையில் அடைத்து வைத்தான்.

கோட்டைக்குத் திரும்பிய விபீஷணனைக் கண்ட அனுமன் திகைத்தான். “அரை நாழிகை முன்பு தானே வந்து எச்சரித்தீர். மீண்டும் எச்சரிக்கிறீர்.” எனக் கேட்டான். விபீஷணனுக்கு நடந்தது புரிந்தது. அனுமனின் வாய் வழியாகக் கோட்டைக்குள் சென்று பார்த்தான். அங்கே ராமன், லட்சுமணன் இல்லை என்பதை உறுதி செய்தான். திரும்பி வந்து அனுமனிடம் விஷயத்தைச் சொன்னான். அனுமன் தன் கவனக் குறைவை எண்ணிக் கவலை கொண்டான். சுக்ரீவனுக்கு பதில் என்ன சொல்வது என எண்ணினான். விபீஷணனிடம் பாதாள இலங்கைக்குச் செல்லும் வழியைக் கேட்டறிந்தான்.

விபீஷணன் அனுமனிடம் பாதாள இலங்கைக்குச் செல்லும் வழியில் மச்சவல்லபன் காவலிருக்கிறான். அவனை வென்று கடந்து செல்வது யாருக்கும் இயலாதது. கடலின் நடுவே தாமரை ஒன்றுண்டு அதன் தண்டு வழியே ஒரு துவாரம் உள்ளது. அதன் வழி சரீரத்தை ஒடுக்கி காற்றுப் போலச் சென்றால் ஒரு அக்னி கோட்டை வரும், அதன் வாயிலில் மச்சவல்லபன் காவலிருப்பான். அவனுக்கு உதவ இரண்டாயிரம் லட்சம் அரக்கர்கள் இருப்பர். அவர்களைக் கடந்து சென்றால் ஒரு குளம் வரும். அதனையும் கடந்தால் தான் பாதாள இலங்கைக்குச் செல்ல முடியும் என்றான்.

அனுமன் விபீஷணனிடம் விடைபெற்று தாமரை தண்டு வழியாக பாதாள இலங்கைக்குச் சென்றான். அங்கே அக்னி கோட்டையின் வாயிலில் காவலிருந்த மச்சவல்லபனை எதிர் கொண்டான். இருவரும் நிகர் வல்லமையில் போர் புரிந்தனர். இரண்டு முறை மச்சவல்லபனின் அடிக்கு அனுமன் நிலை குலைந்தான். அனுமன் தனக்கு நிகராக ஒருவனா என எண்ணி, “நீ யார்? உன் குலமென்ன? நான் போர் செய்து தோற்றதில்லை. உன்னிடம் மட்டும் என் சக்தி ஒடுங்குகிறது. இனி நான் உயிரோடு வாழ்ந்து பயனில்லை” என்றான்.

அனுமனின் பேச்சைக் கேட்ட மச்சவல்லபன், “என்னைப் பற்றிச் சொல்கிறேன் கேள். என் தந்தை எட்டுத் திசையிலும் உள்ள பகைவரை வெல்லும் ஆற்றல் கொண்டவர். சிரஞ்சீவி. அனுமனென்று பெயர். என் தாய் திமிதி மச்சகன்னி. வாயு தேவன் என் தந்தை வழி பாட்டன்” என்றான். மச்சவல்லபன் சொல் கேட்டு திகைத்த அனுமன் தன் பிரம்மசரியம் தவறியது எண்ணி வருந்தினான். ராவணனின் அந்தபுறத்திற்குச் சென்ற போது அரக்கியர் நடுவே ஏதேனும் தவறாக நடந்துக் கொண்டார்களா? இவன் தாய் அரக்கி அல்லவே மச்சகன்னி ஆயிற்றே என அனுமன் குழம்பினான். அனுமனின் குழப்பத்தைக் கண்ட மச்சவல்லபன், “என்ன போருக்கு வருகிறாயா? இல்லை தோல்வியை ஒப்புக் கொள்கிறாயா?” என்றான்.

அனுமனும் மச்சகன்னி திமிதியும்

மச்சவல்லபனிடம் அனுமன், “தந்தை அனுமன் என்றாயே. அவன் எங்கிருக்கிறான். யாரிடம் பணிபுரிகிறான்.” என வினவினான். மச்சவல்லபன், “தோல்வியை மறைக்க தந்திர வழியா. இருந்தாலும் சொல்கிறேன் கேள். அவர் அயோத்தியின் அரசர் ராமனின் அடியவர். சுக்ரீவனின் வலதுகை. நீலன், நளன், குமுதன், கேசன் என வானரப் படைகள் கிஷ்கிந்தையில் காத்திருக்க கடல்வழி இலங்கைக்கு சீதையை தேடிச் சென்றார். வழியில் அவரது நிழலைக் கடலில் வாழ்ந்த வெட்கை என்ற அரக்கி கவ்விக்கொண்டாள். அவளது வாய் வழிச் சென்ற என் தந்தை வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் உடலில் பெருகி நின்ற வியர்வையை வழிந்துவிட்ட போது கடலுள் வாய் பிளந்து நின்ற என் தாய் திமிதியின் வயிற்றுள் அவரது வியர்வை சென்று நான் கருவானேன். என் தந்தை இதனை அறியாது இலங்கைக்கு கிளம்பிவிட்டார். என் தாயின் வயிற்றில் பாட்டன் வாயு தேவன் என்னை அரவணைத்தார். ‘குழந்தாய் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்’ என்றார். அவரிடம் என் தந்தைக்கு நிகர் நிற்கும் வல்லமை வேண்டும். அவரை வீழ்த்தும் சக்தி வேண்டுமென வரம் பெற்று வாங்கினேன்.” என்றான்.

அதனைக் கேட்ட அனுமன், “மகனே நானே உன் தந்தை அனுமன். ராம, ராவணப் போரில் நான் ஈடுபட்டிருந்தேன். ராவணனால் போரில் ராமனின் எதிர் நிற்க முடியவில்லை. அதனால் உன் தலைவன் மயில் ராவணனின் உதவிக் கொண்டு சூழ்ச்சியால் வீழ்த்தப் பார்க்கிறான். மயில் ராவணன் என் காவலில் இருந்த ராம, லட்சுமணனை ஏமாற்றி கடத்திவிட்டான். அவர்களை மீட்கவே நான் வந்துள்ளேன்.” என தழுதழுத்த குரலில் சொன்னான்.

அதனைக் கேட்ட மச்சவல்லபன், “தந்தையே! நான் ஒரு முறை பதினாறு உலகத்தையும் வெல்ல இங்கிருந்து புறப்பட்ட போது மயில் ராவணன் என்னை அழைத்து எனக்கு சகல நன்மைகளும் செய்து, அவனுடன் இருக்கும்படி வேண்டினான். அதன் கோட்டையின் தலைமைக் காவலனாக என்னை நியமித்தான். அத்தகையவனுக்கு என்னால் துரோகம் செய்ய இயலாது. நான் உயிரோடு இருக்கும் வரை இக்கோட்டையை கடக்க உங்களால் இயலாது. எனவே என்னை நெஞ்சில் தட்டி மயக்குற செய்து கடந்து செல்லுங்கள்” என்றான்.

மச்சவல்லபன் நெஞ்சில் தட்டிய அனுமன் கோட்டை காவல்களைத் தாண்டி பாதாள உலகினுள் சென்றான். பாதாள இலங்கையில் செங்கல் கோட்டை, இரும்பு கோட்டை, வெள்ளி, வெண்கலம், தங்கம் என வரிசையாக கோட்டைகள் இருந்தன. அனுமன் அக்கோட்டைகளை கடந்து சோலை ஒன்றினுள் சென்றான்.

இந்நேரத்தில் மயில் ராவணன் ராம, லட்சுமணர்களை பலி கொடுக்கும் ஏற்பாடுகளைச் செய்துக் கொண்டிருந்தான். மயில் ராவணன் தன் தங்கையை அழைத்து, “காளிக்குப் பலி கொடுப்பதற்கு உத்தியாவனத்திற்குப் போய் தண்ணீர் கொண்டு வா.” எனக் கட்டளையிட்டான்.

தூரதண்டி உத்தியாவனத்திலுள்ள பொய்கையின் கரையில் அமர்ந்தாள். தன் மகன் சிறை பட்டதையும், ராம, லட்சுமணர் பலியாகப் போவதையும் எண்ணி வருத்தமுற்றாள். வருதத்தை புலம்பி அழுதுக் கொண்டிருந்த போது அனுமன் அவ்வழியே சென்றான். அவள் சொல்வதைக் கேட்டு, “அம்மா, இந்த பாதாள இலங்கையில் ராம நாமத்தைச் சொன்ன ஒரே ஆள் நீ தான். புண்ணியவதி, அவர்கள் இருக்கும் இடத்தை அறிவாயா? உன் காலில் விலங்கிட்டது யார்?” என வினவினான்.

அனுமனிடம் தூரதண்டி தன் கதையை முழுவதும் கூறினாள். ஆகாயவாணி சொன்ன குறியால் தன்னையும் தன் மகன் நீலமேகனையும் மயில் ராவணன் சிறையிட்டதைச் சொல்லி வருந்தினாள். ”அந்த ஆகாயவாணி நீலமேகம் மயில் ராவணனின் மகள் ரூபவதியை மணந்தால் அவனே பாதாள இலங்கையின் அரசன் என மயில் ராவணனிடம் கூறினாள். அதனைக் கேட்டவன் அரசவைக்கு வந்து என் கணவனைக் கொன்றான். என் மகன் நீலமேகனை குகைச் சிறையில் அடைத்தான்.” என்றாள்.

அனுமன் தூரதண்டியின் கால் விலங்கை உடைத்து அவளுக்கு காவல் கொடுத்தான். நீலமேகனையும் காப்பாற்றுவதாக வாக்களித்தான். தூரதண்டியை மயில் ராவணனின் அரண்மனைக்குச் செல்லும் வழியைச் சொல்லும்படி கேட்டான். தூரதண்டி கொண்டு வந்த குடத்தில் நீர் எடுத்தாள். அதன் மேல் ஒரு மாங்கொம்பை ஒடித்து மூடிவைத்தாள். அனுமன் ஈயாக மாறி குச்சியில் அமர்ந்தான்.

மயில் ராவணனின் கோட்டை வாயிலில் தூர இயந்திரம் ஒன்று இருந்தது. எதிரியென யாரும் வந்தால் அந்த இயந்திரம் மும்முறை சரிந்து எச்சரிக்கும். தூரதண்டி அதன்முன் வந்த போது சரிந்தது. காவலர்கள் அதனைக் கண்டு எச்சரித்தனர். தங்கள் தலைவன் தத்தாட்சகனை அழைத்தனர். அனுமன் விஸ்வரூபம் கொண்டு அரக்கர்கள் மேல் பாய்ந்தான். அனைவரையும் கொன்று குவித்தான். சிறையிலிருந்த நீலமேகனை மீட்டான்.

அனுமன் முன் வந்த நீலமேகன் அவன் தாள் பணிந்து வணங்கினான். அனுமன் தூரதண்டியையும், நீலமேகனையும் ஒரு குகையில் பத்திரமாக அடைத்துவைத்துவிட்டு பத்ரகாளி கோவிலுக்கு கிளம்பினான். கோவிலின் முன் வாயிலை கையால் அடித்து உடைத்து உள்ளே சென்றான். அங்கே ஆயிரம் கண்ணரின் அருகே ராம, லட்சுமணனைக் கண்டான். இருவரும் அரக்கர்களின் மாயையால் மீளா உறக்கத்திலிருந்தனர். இருவரையும் பூலோகம் தூக்கி வந்து பூமாதேவியிடம், “அம்மையே இவர் உன் தங்கையின் கணவர். இவர்கள் இருவரையும் அரக்கர்களிடமிருந்து காத்து தருவாயாக” என வேண்டினான்.

கடகன் என்ற அரக்கன் மயில் ராவணனிடம் சென்று நடந்ததைக் கூறினான். தன் மனைவியுடனிருந்த மயில் ராவணன் அவன் சொல் கேட்டு ஓடி வந்தான். தன் வீரர்களை அழைத்தான். அவர்கள் யாரும் வரவில்லை. அமைச்சர்கள் மட்டும் வந்தனர். வீரர்கள் அனைவரையும் அனுமன் கொன்றழித்துவிட்டதைக் கூறினர். மயில் ராவணன் பத்ரகாளி கோவிலுக்கு ஓடினான். அங்கே கோவில் சிதைந்து கிடப்பதையும் தான் ராம, லட்சுமணனை வைத்திருந்த பெட்டி காணாமல் போயிருப்பதையும் கண்டான். கடகனை அழைத்து தூரதண்டி, நீலமேகன் இருவரையும் அழைத்து வரும்படி சொன்னான். இருவரும் தப்பிச் சென்றுவிட்டனர் என திரும்பி வந்த கடகன் மயில் ராவணனிடம் கூறினான்.

மயில் ராவணன் அனுமனுடன் போர் செய்ய வித்திய சம்மன், உத்திரசேனன், காலத்தச்சன் எனத் தன் படைத் தலைவர்களை அனுப்பினான். அனுமன் அவர்களை கொன்றழித்தான். இறுதியாக மயில் ராவணன் தன் தேரில் ஏறி அனுமனுடன் போருக்குச் சென்றான். அனுமன் மும்முறை மயில் ராவணனைக் கொன்று வீழ்த்தினான். ஒவ்வொரு முறையும் அரக்கன் உயிர் பெற்று வந்தான். மயில் ராவணன் மீண்டு வருவதைக் கண்ட அனுமனி திகைத்து தூரதண்டியிடம் ஓடினான்.

தூரதண்டி அனுமனிடம் மயில் ராவணன் பிரம்மாவை வணங்கி பெற்ற வரத்தைப் பற்றிக் கூறினாள். தூரதண்டி, பிரம்மாவை நோக்கி தவமிருந்த மயில் ராவணன் அவன் உடலை எப்படி வெட்டினாலும் அழியக் கூடாது. பல கூறாக வெட்டினாலும் அவை உடனே ஒன்று சேர வேண்டும் என்ற வரம் வேண்டினான்.

பிரம்மா மயில் ராவணனிடம், “பஞ்ச பூதங்கள் மாய்ந்தால் உடல் அழிய வேண்டியது தானே. நான் எப்படி இந்த வரத்தைத் தரமுடியும்” என்றார்.

மயில் ராவணன் விடாமல், “என் உடலில் உள்ள பஞ்ச பூதங்களை வித்தியாசல பர்வதத்தில் மறைத்துவைப்பேன். அவை ஐந்து வண்டுகளின் வடிவில் அங்கு இருக்கும். என் உடலை மிதித்து விட்டு அவ்வண்டுகளை அழித்தால் என் உயிர் போகும் வரம் கொடுங்கள்” என வேண்டினான். பிரம்மா தந்த வரத்தின் பலனே மயில் ராவணன் சாகாமல் இருப்பது என்றாள் தூரதண்டி.

திரும்பி வந்த அனுமன் மயில் ராவணனை வீழ்த்தினான். மயில் ராவணன் அனுமனை தன் மாயையால் கண்களைக் கட்ட முயற்சித்தான். அனுமன் “அடே அரக்கா, இந்திரஜித்தின் மாயைக்கு அடங்காத நானா உன்னை மாயைக்கு அடங்குவேன். ஆகாயவாணி சொன்னது பலிக்கும் நேரம் வந்துவிட்டது” என்றான்.

அவன் சொல் கேட்ட மயில் ராவணன் அனுமனுக்கு ரகசியம் தெரிந்துவிட்டது அறிந்து அங்கிருந்து ஓடினான். அரக்க அந்தணர்கள் செய்யும் பெரும் யாகத்தில் சென்று பூதம் ஒன்றை யாக குண்டத்திலிருந்து வெளிவர வைத்தான். அனுமனை வீழ்த்திக் கொன்று வா என அதனை ஏவினான். பூதம் அனுமனைச் சுற்றி தீயால் அரண் அமைத்தது. அனுமன் சீதையை வேண்டி நின்றான். தர்ம தேவதை அசிரீரி வடிவில் தோன்றி, “அனுமனே அருகிலுள்ள வெள்ளிமலைக்கும் தங்க மலைக்கும் நடுவில் மயில் ராவணன் யாகம் செய்துக் கொண்டிருக்கிறான். அங்கே சென்று யாகத்தை அழித்தால் பூதம் அழியும்” என்றாள்.

அனுமன் யாகத்திற்குச் சென்று யாக குண்டத்தை அழித்தான். மயில் ராவணனிடம் மீண்டும் போர் புரிந்தான். ஒரு காலால் மயில் ராவணனை மிதித்து வீழ்த்தி விந்திய பர்வதத்திலிருந்து ஐந்து வண்டுகளையும் எடுத்து நசுக்கிக் கொன்றான். பஞ்ச பூதங்களும் மயில் ராவணனின் உடல் பிரிந்தது.

மயில் இராவணன் அனுமனை வணங்கி, “ராம தூதா! உன்னால் எனக்கு வைகுண்டம் கிடைத்தது. என் தங்கை மகன் நீலமேகனுக்கு அரியணையை வழங்கு.” எனச் சொல்லி மாய்ந்தான்.

அனுமன் திரும்பி வந்து தூரதண்டியையும், நீலமேகனையும் மீட்டான். அவனுக்கு அரசப்பட்டம் கட்டினான். நீலமேகனுக்கு காவலாக தன் மகன் மச்சவல்லபனை நியமித்தான். பூலோகம் மீண்டு வந்து ராம, லட்சுமணர்களை மயக்கம் தெளியச் செய்தான். ராவணனுடனான போர் மீண்டும் தொடங்கியது.

உசாத்துணை

  • இராமன் எத்தனை இராமனடி! அ.கா. பெருமாள், காலச்சுவடு வெளியீடு

வெளி இணைப்புகள்


✅Finalised Page