standardised

நரிவிருத்தம்

From Tamil Wiki
தமிழ் இணைய கல்விக் கழகம்

நரிவிருத்தம் சீவக சிதாமணியின் ஆசிரியர் திருத்தக்க தேவரால் இயற்றப்பட்ட நூலாகும். நரிவிருத்தம் என்பது நிலையாமை கோட்பாட்டை விளக்கும் ஒரு தமிழ் அறநூல் ஆகும். இது 6-7-ஆம் நூற்றாண்டுகளில் திருத்தக்க தேவர் என்ற சமணரால் எழுதப்பட்டது. "திருஞான சம்பந்தரின் திருவாலவாய்ப் பதிகத்தில் சமணர்களின் மூன்று நூல்களைக் குறிப்பிடுகிறார்:

ஆசிரியர்

நரிவிருத்தத்தின் ஆசிரியர் திருத்தக்க தேவர், சமண சமயம் சார்ந்தவர். சோழர் குலத்தில் பிறந்தவர். திருத்தகு முனிவர், திருத்தகு மகா முனிவர், திருத்தக்க மகாமுனிகள், தேவர் என்ற சிறப்புப் பெயர்களால் சிறப்பிக்கப்பட்டவர். இவர், அகத்தியம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் முதலான தமிழ் நூல்களைக் கற்றறிந்தவர். வடமொழியில் தேர்ந்தவர். சமண சமய நூல்களை முழுமையாகக் கற்றவர்.

இவர் மதுரையில் தன் ஆசிரியருடன் வாழ்ந்து வந்தார். சங்கப் புலவர்களுடன் ஏற்பட்ட விவாதம் ஒன்றில், புலவர் ஒருவர் ‘சமணர்களுக்குத் துறவை மட்டுமே பாடத் தெரியும்; காமச் சுவைபட இலக்கியம் படைக்க அவர்கள் அறியார்” என்று இழித்துப் பேசினார். அதற்கு திருத்தக்க தேவர் ‘சமணர்கள் காமத்தை வெறுத்தனரேயன்றிப் பாடத் தெரியாதவர்கள் அல்லர்’ என்றார். ‘அப்படி என்றால் காமச் சுவைபட ஒரு நூல் இயற்றுக’ என்றார் புலவர். இதனைத் தேவர் தன் ஆசிரியரிடம் கூற, அவர் தம் மாணாக்கரின் புலமைத் திறத்தை அனைவருக்கும் உணர்த்த, எதிரே ஓடிய நரி ஒன்றைக் காட்டி ‘இது பற்றிப் பாடுக’ என்றார். அவ்வாறே நரிவிருத்தம் என்ற நூலைப் பாடினார் திருத்தக்க தேவர்.

நூல் அமைப்பு

நரி விருத்தம் என்பதன் பொருள் நரியின் வரலாறு என்பது (விருத்தம்- விருத்தாந்தம், வரலாறு). விருத்தம் என்பதற்கு விருத்தப் பாவாலான நூல் என்றும் கூறலாம். நரிவிருத்தம் ஐம்பது பாடல்களைக் கொண்ட, ஞானத்தைப் போதிக்கும் நூலாகும். "உலகவாழ்வோ நிலையற்றது; இதனை நம்பிப்‌ பேராசை கொண்டு வீண்‌ ஆலோசனை செய்து நாசமடையலாகாது- திலையான தருமங்களைச்செய்து முத்தியடைதற்குரிய வழிகளையே தேடவேண்டும்‌,” என்பது இந்நூல் வலியுறுத்தும் கருத்து. இவற்றிற்குதாரணமாக முதலில்‌ நரியைப்பற்றிய கதை யொன்றும்‌, பின்னர்‌ அதன்‌ சார்பாக வேறு பதினெட்டுக்‌ கதைகளும்‌ கூறப்படுகின்றன. . இவற்றுள்‌ நரியின் விருத்தாந்தத்தைக் கூறுவன எட்டுச்‌ செய்யுட்கள். மற்றைய பாடல்கள்‌ வேறு கதைகளையும்‌ நீதிகளையும்‌ கூறுவன,

பால் நிலா மதியம் மூன்றும் பன்மணி மிடைந்த பாங்காய்
மேல் நிலா விரித்த போலும் விளங்கு முக் குடையின் நீழல்
தேனவாங் குளிர்கொள் பிண்டிச் செல்வன்சே அடியை வாழ்த்தி
ஊன் அவா நரியினார்தம் உரைசிறி(து) உரைக்க லுற்றேன்

என்று பாயிரத்தில் அருகனை வணங்கித் துவங்குகிறது நரி விருத்தம்.

பதிப்பு

*நரிவிருத்தம்‌* மூலம்‌ மட்டும்‌ முதலில்‌ அச்சிடப்பட்டதாகத்‌ தெரிகிறது. பிறகு 1907-ஆம்‌ ஆண்டில்‌ திரு. மு, இராகவையங்கார்‌ அரும்பத உரையுடன்‌ இந்நாலை வெளியிட்டுள்ளார்‌.

பாடல் நடை

இளமையும் வனப்பு நில்லா இன்பமும் நின்ற அல்ல
வளமையும் வலிதுநில்லா வாழ்வுநாள் நின்ற அல்ல
களிமகள் நேசம் நில்லா கைப்பொருள் கள்வர் கொள்வர்
அளவிலா அறத்தின் மிக்க யாதும் மற்(று)இல்லை மாதோ


உத்தம தானம் ஈந்தே ஒள்பொருள் உவந்து நல்ல
உத்தமர்க்(கு) உவந்து முன்னே உத்தம் தானம் ஈந்தே
உத்தம நெறிநின்றார்க்(கு) உவமை ஒன்று இல்லை ஆகும்
உத்தம குருவும் புத்தேள் உலகமும் உடையார் அன்றே

உசாத்துணை

திருத்தக்க தேவர் அருளிய நரிவிருத்தம் மூலமும் உரையும்-தமிழ் இணைய கல்விக் கழகம்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.