under review

கழாத்தலையார்

From Tamil Wiki
Revision as of 03:44, 5 February 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

கழாத்தலையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

கழாத்தலையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கழாத்தலை என்னும் ஊரில் பிறந்தமையால் இப்பெயர் பெற்றவர் என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பிடுகிறார். கழுவாத தலையை உடையவர் என்று இவரது உடல் உறுப்பினை குறிக்கவே இப்பெயர் பெற்றதாக எஸ். வையாபுரிப் பிள்ளை குறிப்பிடுகிறார். கபிலர் தம் புறநானூற்று பாடலில் (202) 'புகழ்ந்த செய்யுட் கழாத்தலை' என்று இவரை சிறப்பிக்கிறார். அப்பாடலின் வழி இருங்கோவேளின் அரசவையில் மூதூர் தலைவன் ஒருவன் இப்புலவரை இகழ்ந்தான். அதன் பயனாக சிற்றரையம், பேரரையம் என்னும் இருபகுதிகளைக் கொண்ட தன் வளம் மிக்க ஊர் சிதைந்து தானும் அழிந்தான் என்கிற செய்தியை அறிகிறோம்.

இலக்கிய வாழ்க்கை

கழாத்தலையார் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறில் 62[1], 65[2], 270[3], 288[4], 289[5], 368[6] ஆகிய எண்களில் இடம்பெற்றுள்ளன. தம் பாடல்களில் போர் குறித்த செய்திகளை பாடியுள்ளார். புறநானூறு 62, 368 -ம் எண் கொண்ட இருபாடல்களிலும் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளிக்கும் நடந்த போர் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. 62 - ம் பாடல், மன்னர்கள் இருவர்கள் தம் படையினருடன் மாண்டு கிடக்கும் காட்சியைக் காட்டுகிறது. 368-ம் பாடல் இறக்கும் தருவாயில் போர்க்களத்தில் தன்னை வந்து சந்தித்த பாணனுக்கு சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் தனது மார்பில் உள்ள முத்தாரத்தைப் பரிசிலாகக் கொடுத்த செய்தியை கூறுகிறது. புறம் 65-ம் பாடல் சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருந்த செய்தியை கூறுகிறது. புறம் 270-ம் பாடல் இறந்த வீரன் ஒருவனை போர்க்களத்தில் கண்ட ஒருவன், அவ்வீரனின் தாயிடம் அச்செய்தியை கூறும் காட்சியைக் காட்டுகிறது. புறம் 288-ம் பாடல் போர்க்களக்காட்சி ஒன்றையும், 289 -ம் பாடல் மன்னன் ஒருவன் வீரனுக்கு கள்ளருந்தத் தரும் நிகழ்வையும் கூறுகின்றன.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

  • சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளியும் தம் படைகளுடன் போரிட்டுக் கொண்டனர். போரில் இருவரது தரப்பிலும் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை என அனைத்தும் அழிந்தன. போர்வீரர்களின் உடல்கள் வைக்கோல் போர் போல யானைகளால் ஒதுக்கி தள்ளப்பட்டிருந்தன. இறந்த வீரர்களின் பிணங்களை பருந்துகள் கொத்தித் தின்றன. இறந்தவருக்காக கொட்டப்படும் அனந்தல் பறை போர்க்களத்தில் ஒலித்தது. போர்க்களத்து குருதியை அள்ளி பேய்மகளிர் தம் கூந்தலில் பூசிக் கொண்டனர்.
  • தம் படையினர் முழுவதுமாக அழிந்த நிலையில் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும் சோழன் வேற்பல் தடக்கை பெருவிறற்கிள்ளியும் நேரடியாகப் போரிட்டனர். அப்போரில் மன்னர் இருவரின் தேர் குடைகள் முறிந்து வீழ்ந்தன. முரசுகள் கிழிந்தன. இறுதியில் இரு மன்னர்களும் மாண்டனர்.
  • இறந்த வீரர்களின் மனைவியர் கணவர்களின் இறப்புக்கு பின் பச்சைக்கீரையை உணவாக கொண்டும், விடிகாலை பனியில் தினமும் குளித்தும் கைம்மை நோன்பை ஏற்க வேண்டும். ஆனால் அவர்கள் தத்தம் கணவர் இறந்துள்ள நிலையைக் கண்டு போர்க்களத்தில் வீழ்ந்து தாமும் இறந்தனர்.
  • பாணர்கள் தமது தடாரிப்பறையை இசைத்து வென்ற மன்னனை வாழ்த்துவர். வென்ற மன்னர் தோல்வியுற்ற மன்னனின் பொருட்களை தம்மை வாழ்த்திப் பாடும் பாணர்களுக்கு பரிசிலாக வழங்குவர். போர்க்களத்தில் புண்பட்டு இறக்கும் நிலையில் இருந்த சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் தம்மை தேடி வந்து வாழ்த்திய பாணனுக்குத் தன் மார்பில் அணிந்திருந்த ஆரத்தைப் பரிசிலாக வழங்கினான்.
  • சேரமான் பெருஞ்சேரலாதனும் சோழன் கரிகால் பெருவளத்தானும் போரிட்டுக் கொண்டனர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் கரிகால் பெருவளத்தானின் தாக்குதலால் புற முதுகில் புண் பெற்றான். அப்புண்ணுடன் வாழ்வது வீரனுக்கு இழுக்கு என்று கருதி வடக்கிருந்து உயிர் நீத்தான். சங்க காலத்தில் வீரன் ஒருவன் தன் வீரத்துக்கு இழுக்கு ஏற்பட்டதென்று கருதி உண்ணா நோன்பிருந்து உயிர் துறப்பதை வடக்கிருத்தல் என்றனர்.
  • சேரமான் பெருஞ்சேரலாதன் வடக்கிருக்கும் துயரத்தால் அவன் நாட்டில் பாணர்கள் யாழும் முழவும் இசைக்க மறந்தனர். நெய்யிட்டு உணவு உண்ணும் வளம் கொண்ட மக்கள் சமைக்க மறந்தனர். சேரனின் சுற்றத்தார் இன்கள்ளான தேறல் அருந்துவதைக் கைவிட்டனர். உழவர்கள் தமது ஏற்றப்பாட்டை பாடாமல் ஒழிந்தனர். திருவிழாக்கள் நடைபெறாமல் ஊர் வெறுமையாகக் கிடந்தது.
  • போர் மறவர்கள் போர்முரசின் ஒலியை இனிமையானதாக எண்ணுவர். போர் முரசு ஒலிக்க கேட்டவுடன் ஒன்றாகத் திரண்டு மன்றத்தில் கூடுவர். போர்க்களத்தில் இறப்பவர்கள் அனைவரும் இறப்பென்னும் சமத்துவத்தை அடைவதால் எரிசிதையில் வேள்வி நிலையை எய்துவர்.
  • வலிமையான எருதுகளை ஒன்றுடொனொன்று போரிட வைப்பர். போட்டியில் வெற்றி பெற்ற எருதின் தோலையுரித்து போர் முரசுக்கு பயன்படுத்துவர். களத்தில் பகைவனின் வேலால் வீரன் ஒருவன் மார்பு பிளந்து இறக்கும் தருவாயில் இருந்தான். அவன் மனைவி வீரனை நோக்கி ஓடிவந்தாள். பருந்துகள் வீரனின் பிணத்தை கொத்தித் தின்றன.
  • மன்னன் ஒருவன் போருக்கு நடுவில் தமக்கு கிடைத்த கள்ளை வீரன் ஒருவனுடன் பகிர்ந்து உண்டான். இதனை கண்டு வியந்த பாணன் ஒருவனிடம் மற்றொரு பாணன் போர்க்களத்தில் முழங்கும் தண்ணுமை பறையை சுட்டிக்காட்டினான்.

பாடல் நடை

புறநானூறு - 288

  • திணை: தும்பை
  • துறை: மூதின் முல்லை

மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின்
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து,
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க,
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர,
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து,
அருகுகை ...................................... மன்ற
குருதியொடு துயல்வரு மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Feb-2026, 17:00:13 IST