under review

கிருபானந்த வாரியார்

From Tamil Wiki
Revision as of 17:31, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கிருபா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: கிருபா (பெயர் பட்டியல்)
கிருபானந்த வாரியார்

கிருபானந்த வாரியார் (திருமுருக கிருபானந்த வாரியார்; கிருபானந்த வாரி) (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சைவ சமய அறிஞர், முருக பக்தர். சமய, ஆன்மிகச் சொற்பொழிவாளர், எழுத்தாளர். உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்று ஆன்மிகச் சொற்பொழிவாற்றினார். பல ஆலயங்களைச் சீரமைத்து குடமுழுக்குச் செய்தார். 64-வது நாயன்மாராக ஆன்மிக ஆர்வலர்களால் போற்றப்பட்டார்.

கிருபானந்த வாரியார் (இளம் வயதுப் படம்)

பிறப்பு, கல்வி

கிருபானந்த வாரி என்னும் கிருபானந்த வாரியார், ஆகஸ்ட் 25, 1906-ல், சஷ்டி திதியில், காங்கேயநல்லூரில், புராணிகர் மல்லையதாசர் - கனகவல்லி அம்மையார் தம்பதியருக்குப் பிறந்தார். வீட்டில் இருந்தவாறே கல்வி கற்றார். ஐந்து வயது நிரம்பிய போது நூல்களைத் தாமாக படிக்கும் அளவுக்கு பயிற்சி பெற்றார். எட்டு வயதிலேயே 'வெண்பா' உள்ளிட்ட பல பாடல்களை இயற்றுமளவுக்குத் தேர்ச்சி பெற்றார். சித்திரக்கவிகள் இயற்றுமளவுக்குப் புலமை பெற்றார். பத்து வயதிலேயே இலக்கியம், பன்னிரு திருமுறை, புராணம் என பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் வாரியாருக்கு மனப்பாடம் ஆகியிருந்தன.

தனி வாழ்க்கை

வாரியாருக்குப் பத்தொன்பது வயது நிரம்பியபோது, மாமன் மகளான அமிர்தலட்சுமியுடன் திருமணம் நிகழ்ந்தது. குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.

ஆன்மிக வாழ்க்கை

தீட்சை

கிருபானந்த வாரியாருக்குக் குல வழக்கப்படி, அவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது, திருவண்ணாமலை பாணிபாத்திர மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பட்டது. அதன் பிறகு குறிப்பிட்ட நன்னாளில் தந்தையார் சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். மதுரையைச் சேர்ந்த திருப்புகழ்ச் சாமிகள், காங்கேயநல்லூருக்கு வந்தபோது, அருணகிரிநாதருடைய ஆராதனை விழாவில், முருகப் பெருமானின் ஆலயத்தில் வைத்து கிருபானந்த வாரியாருக்கு சூட்சும சடாக்ஷர மந்திரத்தை உபதேசித்தருளினார். அவரே கிருபாநந்தவாரியாரின் குருநாதர்களில் ஒருவராக அமைந்தார். பெருமணநல்லூரில் மகா சிவராத்திரியன்று பழநி, சைவ சித்தாந்த சரபம், சிவத்திரு ஈசான சிவாச்சாரிய சுவாமிகள், வாரியாருக்கு சிவாகம விதிப்படி தீட்சை கொடுத்தருளினார். அப்பொழுது வாரியாருக்கு 'வாம தேவ சிவம்' என்ற தீட்சாநாமம் அளிக்கப்பட்டது.

சொற்பொழிவு

தந்தை மல்லையதாசர், தான் சொற்பொழிவுச் செய்யச் செல்லும் இடமெல்லாம் வாரியாரையும் உடன் அழைத்துச் சென்றார். அங்கு தந்தைக்கு உதவியாக இருந்து பின்பாட்டு பாடி, கையேடு வாசித்தார். தந்தையின் சொற்பொழிவுகளை உன்னிப்பாகக் கவனித்து பேச்சுக்கலையின் நுட்பங்களைக் கற்றுக் கொண்டார். தந்தையுடன் இருமுறை கப்பலில் பர்மா சென்று தந்தை ஆற்றிய சொற்பொழிவுகளில் பின்பாட்டுப் பாடி, மக்களின் மனம் கவர்ந்தார்.

நாளடைவில் கிருபானந்த வாரியாருக்குத் தனியாகச் சொற்பொழிவு செய்யும் வாய்ப்புகள் வந்தன. தந்தையும் அனுமதி அளித்ததால் பல்வேறு தலங்களுக்கும் ஊர்களுக்கும் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். குறிப்பாகச் சென்னையில் அவரது சொற்பொழிவுகளுக்கு மிகுதியாக வரவேற்புக் கிடைத்தது. அதனால் சென்னையிலேயே தங்கி அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சொற்பொழிவு செய்தார்.

பாம்பன் சுவாமிகளுடன் சந்திப்பு

கிருபானந்த வாரியார், சென்னையில், ஒரு சமயம் சொற்பொழிவாற்றச் சென்றபோது, அருகில் உள்ள இடத்தில் பாம்பன் சுவாமிகள் தங்கியிருப்பதை அறிந்தார். நண்பர்களோடு சுவாமிகளைக் காணச் சென்றார். சுவாமிகள் அப்போது 'அசோக காலவாசம்' என்ற தனது நூலுக்கு விளக்கவுரை ஆற்றிக்கொண்டிருந்தார். அதனைக் கேட்டு விளக்கம் பெற்றார் வாரியார்.

கிருபானந்த வாரியாரின் முதல் குருவாக அருணகிரிநாத சுவாமிகளும். இரண்டாவது குருவாகப் பாம்பன் சுவாமிகளும் அமைந்தனர். தனது இல்லத்துப் பூஜை அறையில், முருகப்பெருமான், அருணகிரிநாதர் ஆகியோரோடு, பாம்பன் சுவாமிகள் திருவுருவப் படத்தையும் வைத்து வழிபாடு செய்து வந்தார்.

பாம்பன் சுவாமிகள் சமாதியான பிறகு, திருவான்மியூரில் உள்ள அவரது சமாதிக் கோயிலுக்கு அவ்வப்போது சென்று வந்தார். அங்கு நிகழும் 'மயூரவாகன சேவன' விழாவிலும், பாம்பன் சுவாமிகளின் குருபூஜை விழாவிலும் கலந்துகொண்டு ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

ஆன்மிகப் பயணங்கள்

பல்வேறு ஆன்மிகத் தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்ட வாரியார், அருணகிரிநாதருக்கு முருகன் அருள் புரிந்த தலமான வயலூருக்கு வந்தார். உடன் சென்னை திருப்புகழ் குழுவினரும் வந்திருந்தனர். திருப்புகழ்ப் பாடல்களை ஓதி, முருகப்பெருமானுக்கு வெள்ளிக் கவசம் சாத்தி வழிபட்டார் வாரியார். பின் சென்னைக்குத் திரும்பினார். அவரது கனவில் முருகப்பெருமான் தோன்றி அருள் புரிந்தார் என்பது தொன்மம்.

திருப்பணிகள்

ஒரு சமயம் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் ஆலயத்துக்கு வாரியார் விரிவுரையாற்ற வந்திருந்தார். அப்போது அங்கு அவரை, வயலூர் முருகன் திருக்கோயில் அறங்காவலர் திருச்சி ராதாகிருஷ்ணன் செட்டியார். தனது நண்பர்களுடன் வந்து சந்தித்தார். வாரியாரிடம் அவர், "வயலூர் ராஜகோபுரத் திருப்பணி பல முறை முயன்றும் முடியாமல் நின்று விட்டது. நீங்கள் தான் தலைமை தாங்கி நடத்தி வைக்க வேண்டும்" என்று வேண்டிக் கொண்டார். வாரியாரும் அதற்கு ஒப்புக் கொண்டார்.

1935-ல், வயலூர் ராஜகோபுரத் திருப்பணியைத் தொடங்கினார். பல நபர்களைச் சந்தித்து, பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி நிதி திரட்டி அப்பணியைச் சிறப்பாக நிறைவேற்றினார். அதுவே தனியாக அவர் செய்த அவரது முதல் ஆலயத் திருப்பணி. அதற்கு முன் தனது தந்தையுடன் இணைந்து தன் ஊரான காங்கேயநல்லூர் ஆலயப் பணியை மேற்கொண்டிருந்தார். அந்த அனுபவம் அவருக்கு உதவியது.

வயலூர் ஆலயத் திருப்பணி நிகழ்வைத் தொடர்ந்து பலரும் வாரியாரைச் சந்தித்து பல்வேறு திருப்பணிகளை முடித்துத் தருமாறு வேண்டினர். அதன் படி வடலூர் சத்திய ஞான சபைப் பணியைத் தொடங்கி பல்வேறு இன்னல்களுக்கிடையே அதனை நடத்தி முடித்தார். அதே போல் அங்கு அமைக்க வேண்டிய ஸ்தூபியும் சிறப்பாக அமைய உதவினார். தொடர்ந்து பல ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். கோடிக்கணக்கான ரூபாய்களை வசூலித்துக் கொடுத்துப் பணிகள் சிறப்புடன் நிறைவேற உழைத்தார். கும்பாபிஷேக விழாக்களின் போது அந்தந்த ஆலய இறைவன் மீது பல பதிகங்களைப் பாடினார். அவை பின்னர் தொகுக்கப்பட்டு 'பைந்தமிழ்ப் பாமாலை' என்ற பெயரில் நூலாக வெளிவந்தன.

பலி வழிபாடு தவிர்த்தல்

அக்காலத்தில் பல ஆலயங்களில் விலங்குகளைப் பலியிட்டு வழிபடுவது வழக்கமாக இருந்தது. இதனை வாரியார் கடுமையாக எதிர்த்தார். "உயிர்க்கொலை புரிதல் பாவம்; தீது" என்றும், "ஆண்டவன் இவற்றை ஒருபோதும் விரும்புவதில்லை" என்றும் எடுத்துரைத்தார். தனது சொற்பொழிவுகளில் இது குறித்துப் பேசினார். திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் ஆயிரத்தம்மனுக்குப் பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தின் முன் ஓர் எருமைக் கடாவை நிறுத்தி ஒரே வெட்டில் வெட்டி அறுத்துப் பலியிடுவது வழக்கமாக இருந்தது. வாரியார் அங்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் உதவியுடன் அப்பலியைத் தடுத்து நிறுத்தினார்.

வாரியார்

சொற்பொழிவும் உதவிகளும்

இந்தியா மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளுக்குச் சென்று வாரியார் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். தனது சொற்பொழிவின் மூலம் கிடைத்த நிதியை ஆலயங்களை எழுப்பவும், திருப்பணிகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தினார். ஆதரவற்றோர் ஆசிரமங்களுக்கும், தன் குரு திருப்புகழ்ச்சாமியின் குடும்பத்தினருக்கும், வறுமையில் வாடுபவர்களுக்கும் வழங்கி உதவினார். கல்விப் பணிகளுக்குப் பல உதவிகளைச் செய்தார்.

அருணகிரிநாதர் அறக்கட்டளை

ஒரு சமயம் வாரியாருக்குக் கனவு ஒன்று வந்தது. அதில் வாரியாரின் குருநாதரான அருணகிரிநாதர், உணவு கேட்பது போன்ற காட்சி வந்தது. அதன் உட்பொருளை உணர்ந்த வாரியார், அருணகிரிநாதருக்கு நிரந்தர நிவேதனமும், பூஜையும், வழிபாடும், சிறப்புற நடப்பதற்காக அருணகிரிநாதர் அறக்கட்டளை என்பதை ஏற்படுத்தினார்.

பெற்றோருக்குச் சமாதி

வாரியாரின் தந்தை மல்லையதாசர், மார்ச் 17, 1950-ல் சிவனடி சேர்ந்தார். தந்தையின் வேண்டுகோளின்படி வாரியார், லிங்காயத்து வழிபாட்டு முறைப்படி தந்தையாருக்குச் சமாதி நிகழ்வுகளைச் செய்வித்தார். நித்திய வழிபாட்டுக்கான அறக்கட்டளைகளை நிறுவினார், ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவை நடத்தினார்.

அக்டோபர் 20, 1977-ல், வாரியாரின் தாயார் காலமானார். அவருக்கு, வாரியார் தமது தந்தையார் விருப்பப்படி சிவாலய நந்தி போல் தாயையும் வணங்குமாறு, தந்தையின் சமாதியில், தந்தை சமாதிக்கு எதிரே தாயும் அமர்ந்திருக்கும் முறையில் நினைவிடம் எழுப்பினார். தாயாருக்கு நித்திய வழிபாட்டுக்கான நியமக் கட்டளைகளை நிறுவி, ஆண்டுதோறும் நினைவு நாள் விழாவையும் நடத்தினார்.

தல யாத்திரை

வாரியார், முக்தித் தலங்களாகப் போற்றப்பட்டும் அயோத்தி, மதுரா, ஹரித்துவார், வாரணாசி, காஞ்சிபுரம், உஜ்ஜைனி மற்றும் துவாரகைக்குத் தல யாத்திரை சென்று வழிபட்டு வந்தார். தொடர்ந்து பன்னிரு ஜோதிர்லிங்கத் திருத்தலங்களான சோம்நாத், மல்லிகார்ஜுனர், மகாகாளேஸ்வர், ஓம்காரேஷ்வர், பைத்யநாத், பீமாசங்கர், ராமேஷ்வர், நாகேஷ்வர், காசி விஸ்வநாதர், த்ரம்யபகேஷ்வர், கேதார்நாத், கிரிஷ்னேஸ்வர் ஆகிய தலங்களுக்குச் சென்று தரிசித்து வந்தார்.

அன்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமெரிக்கா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, லண்டன் போன்ற நாடுகளுக்குச் சென்று ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

வாரியார் நூல்கள்

இலக்கியம்

திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் ஆன்மிகப் பணிகளோடு இணைந்த பல்வேறு இலக்கியப் பணிகளையும் முன்னெடுத்தார். ஆன்மிகம், இலக்கியம் சார்ந்த பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியதோடு 100-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.

இதழியல்

வாரியார், 'திருப்புகழ் அமிர்தம்' என்னும் ஆன்மிக, இலக்கியத் திங்கள் இதழை 37 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார். ரத்னபாலா, பூந்தளிர், கோகுலம் போன்ற இதழ்களில் ஆன்மிகக் கட்டுரைகளையும், சிறுவர்களுக்கான கதைகளையும் எழுதினார்.

பதிப்பு

வாரியார் நூல்கள் பலவும் 'குகஸ்ரீ வாரியார் பதிப்பகம்' மூலம் வெளியாகின.

பக்தித் திரைப்படத்தில் வாரியார்

திரைப்படம்

வாரியார் சொற்பொழிவாற்றுவது, உரையாடுவது, கதை கூறுவது, சம்பவங்களை விவரிப்பது போன்ற காட்சிகள் ஆன்மிகத் திரைப்படங்கள் சிலவற்றில் இடம்பெற்றன.

சபைகள்

கீழ்க்காணும் சபைகளின் உருவாக்கத்தின் வளர்ச்சிக்கும் கிருபானந்த வாரியார் உதவினார்

திருப்புகழ் சபை

காங்கேய நல்லூரில் வாரியாரின் தந்தையார் மல்லையதாசர் தோற்றுவித்த சபை 'திருப்புகழ் சபை'. இதன் வளர்ச்சிக்கு வாரியார் பெருமளவில் உதவினார். இச்சபை இன்றும் செயல்பட்டு வருகிறது.

திருவருள் தவநெறி மன்றம்

நெல்லையில் 1940-ல் வாரியார் திருப்புகழ் சபையைத் தொடங்கி வைத்தார். தாம் சார்ந்துள்ள மதத்தின்பால் அதிகப் பற்றுக் கொண்ட வாரியார் அதனைப் பரப்பிட விழைந்து, ஏழு சொற்பொழிவாளர்களை நியமனம் செய்து நிரந்தரத் தலைவராக அப்போதைய மதுரை திருஞான சம்பந்த மடத்து ஆதீனம் அவர்களை வீற்றிருக்கச் செய்து, 'திருவருள் தவநெறி மன்றம்' என்ற அமைப்பினை 1954-ல் தொடங்கினார். வாரியார் எங்கிருந்தாலும் மாதந்தோறும் 500 ரூபாய் திருவருள் தவநெறி மன்றத்தின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்தார். சமயச் சொற்பொழிவாளர்கள் எழுவரும் ஊர் ஊராகச் சென்று, ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள்.

பல ஊர்களில் திருவருள் தவ நெறி மன்றத்தின் கிளைகள் அமைந்தன. அவற்றில் சில இன்றும் செயல்பட்டு வருகின்றன.

ஆலயத் திருப்பணிகள் பட்டியல்

கிருபானந்த வாரியார் கீழ்க்காணும் ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களின் திருப்பணிகளை மேற்கொண்டார்.

  • காங்கேய நல்லூர் முருகன் கோயில் திருப்பணி
  • சென்னைக் குயப்பேட்டை இராஜகோபுரத் திருப்பணி, திருக்குளத் திருப்பணி
  • மோகனூர் அருணகிரிநாதர் அறச்சாலைத் திருப்பணி
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருமதில் திருப்பணி
  • வடலூர் சத்திய ஞானசபைத் திருப்பணி
  • திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் திருப்பணி
  • சமயபுரம் திருப்பணி
  • கோவை தடாகம் ரோடு பாலதண்டாயுதபாணி கோயில் திருப்பணி
  • கோவை வெங்கடேசுவரர் கோயில் திருப்பணி
  • கோவை சேஷாத்திரி சுவாமிகள் அதிஷ்டானத் திருப்பணி
  • கோவை ஐயப்ப சுவாமி திருப்பணி
  • கோவை காமகோடி வித்யாமந்திர் திருப்பணி
  • திருவானைக்கா திருப்பணி
  • மதுரை ஐயப்ப சுவாமி திருப்பணி
  • மதுரைக் கூடலழகர் திருப்பணி
  • திருமோகூர் காளமேக சுவாமி திருப்பணி
  • சென்னை தேனாம்பேட்டை முருகன் கோயில் திருப்பணி
  • வள்ளிமலைத் திருப்பணி (இராஜகோபுரம்)
  • சென்னை மாதவப் பெருமாள் கோயில் திருப்பணி
  • வள்ளிமலை சரவணப் பொய்கைத் திருப்பணி
  • ஸ்ரீரங்கம் திருப்பணி
  • திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் திருப்பணி
  • நெல்லிக்குப்பம் வீரபத்திர சுப்ரமண்ய சுவாமி கோயில் திருப்பணி
  • வயலூர் திருப்பணி (இரண்டுமுறை)
  • கும்பகோணம் கொட்டையூர் கோடீசுவரநாதர் கோயில் திருப்பணி
  • காங்கேயநல்லூர் பெருமாள் கோயில் இராஜகோபுரத் திருப்பணி
  • சென்னை சைதாப்பேட்டை திருக்குளத் திருப்பணி
மு. கருணாநிதியுடன் வாரியார்

விருதுகள்

திருமுருக கிருபானந்த வாரியார் பெற்ற விருதுகளில் சில...

  • முறையாக இசைப் பயிற்சி பெற்ற வாரியாருக்குச் சென்னைத் தமிழ் இசைச் சங்கம் தனது வெள்ளி விழாவின் பொழுது, 'இசைப் பேரறிஞர்' பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
  • தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் 'கலைமாமணி' விருது வழங்கிச் சிறப்பித்தது.
  • தருமபுரம் ஆதீனம் மகாசந்நிதானம், 'அமுதமொழிக் கொண்டல்' என்னும் விருதை வழங்கியதுடன் கௌரிசங்கர் உருத்திராட்சத்தையும் அளித்துக் கௌரவித்தார்.
  • பவானி திருமுறைக் கழகத்தினர் 'திருப்பணிச் சக்கரவர்த்தி', 'திருப்பணிச்சரபம் ஆகிய இரண்டு பட்டங்களை அளித்துப் பெருமைப்படுத்தினர்.
  • வேலூர் சண்முகன் அடியார் சங்கம் 'சொற்பொழிவு வள்ளல்' என்னும் பட்டத்தைத் தந்தது.
  • ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தர், 'திருப்புகழ் ஜோதி', 'ப்ரவசன சாம்ராட்' ஆகிய பட்டங்களை அளித்து வாழ்த்தினார்.
  • காஞ்சி மகாப் பெரியவர் 'சரஸ்வதி கடாஷம்ருதம்' என்ற விருதை அளித்து வாழ்த்தினார்.

பட்டங்கள்:

  • 64-வது நாயன்மார் - திருப்பணித் தொண்ட நாயனார்
  • இசை நற்கலைஞர்
  • தமிழ்ப் பேரவைச் செம்மல்
  • அருள்மொழி அரசு
  • ஷட்பதா நந்தா
  • மதிப்புறு இலக்கிய முனைவர்
  • சகல தேச சத்பிரசங்க சக்ரவர்த்தி
  • சொற்பொழிவு வள்ளல்
  • ஞானக் கதிரவன்
  • அமுதப் பெருங்கடல்
  • முத்தமிழ் வள்ளல்
  • நூற்றாண்டு வாரி
  • வாரி வழங்கும் வள்ளல்
  • சொற்பொழிவுக் கடல்
  • சொல் மாரி வாரி
  • முத்தமிழ் ரத்தினாகரம்
  • தரும மூர்த்தி
  • பிரசங்கச் சக்ரவர்த்தி
  • விரிவுரை வித்தகர்
  • ஞான சூரியன்
  • தவராச சிங்கம்
  • சொல்லின் செல்வர்
  • இறை நாவுடையார்

மறைவு

திருமுருக கிருபானந்த வாரியார் 1993-ல், லண்டனில் நடைபெறும் முருகப்பெருமானுடைய குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவதற்காக லண்டன் புறப்பட்டுச் சென்றார். அங்கு, அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மெக்கிரேடிக் என்ற லண்டன் மருத்துவரும், கணேசரத்தினம் என்னும் தமிழ் மருத்துவரும் வாரியாருக்குச் சிகிச்சை அளித்தனர். வாரியாரும் விரைவில் குணமடைந்தார்.

அவர் தமிழகம் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்டது. ஏர்பஸ் விமானத்தில் வாரியார் இந்தியா புறப்பட்டார். காலை 10 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானம் 1 மணி நேரம் தாமதமாக 11 மணிக்குப் புறப்பட்டது. அப்போது இந்தியாவின் நேரம் மாலை 4.30 மணி.

மருத்துவரும் உடன் வந்தார். அவ்வப்போது வாரியாரின் உடல் நிலையைக் கண்காணித்து வந்தார். ஜூலை 07, 1993, மறுநாள் காலை, மும்பையிலிருந்து சென்னைக்கு விமானம் மாறினார் வாரியார் சுவாமிகள். அது திருப்பதியைக் கடந்தபோது, அருகில் இருந்தவரிடம் வாரியார்," அடுத்தது என்ன திருத்தணிதானே?" என்று கேட்டார். அவ்வாறு கேள்வி கேட்ட சிறிது நேரத்திலேயே முருகன் பெயரைச் சொல்லியவாறே இயற்கை எய்தினார். வாரியாரின் உடல் நலனை உடன் பயணித்த மருத்துவர் பரிசோதித்தபோது வாரியார் காலமானது தெரியவந்தது. அப்போது வாரியாருக்கு வயது எண்பத்து ஏழு.

வாரியாரின் உடல், சென்னை, பெரம்பூரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின் அவரது சொந்த ஊரான காங்கேயநல்லூருக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்குச் சரவணப் பொய்கையில் மேடை அமைக்கப்பட்டு சமாதி வைக்கப்பட்டது.

கிருபானந்த வாரியார் சிறப்புத் தபால் தலை

நினைவாலயம்

வாரியாரின் பக்தரும், சரவண பவன் ஓட்டல் அதிபருமான ராஜகோபால், இரண்டாயிரமாவது ஆண்டில், காங்கேயநல்லூரில், 'வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம்' என்ற பெயரில் ஒரு கோவிலை அமைத்தார். அது திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் நினைவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.

இந்திய அரசு கிருபானந்த வாரியார் நூற்றாண்டையொட்டி அவருக்குச் சிறப்புத் தபால் தலையை வெளியிட்டுக் கௌரவம் செய்தது.

மதிப்பீடு

திருமுருக கிருபானந்த வாரியார் தன் ஆன்மிகக் கருத்துக்களாலும், சொற்பொழிவுகளாலும், நூல்களாலும், உரைகளாலும் சைவ சமயத்திற்கும், ஆன்மிகத்திற்கும் புத்தொளியை அளித்தார். நாத்திகக் கருத்துக்கள் மேலோங்கிய காலத்தில் அதற்கு எதிரான ஆன்மிகத்தின் குரலாக ஒலித்தார். பாமரருக்குப் புரியும் எளிய மொழியில், நகைச்சுவை கலந்து, இலக்கியங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும் கொண்டு சேர்த்தார். பல்வேறு அரசியல் எதிர்ப்புகளையும் மீறி சமயப் பணியாற்றினார்.

இலக்கியம், இதழியல், திருப்பணிகள், சமூகப் பணிகள் என்று ஆன்மிகத்தோடு இணைந்து பிற பணிகளையும் முன்னெடுத்த அறிஞராகவும், முருகனின் புகழைப் பரப்பிய முன்னோடி ஆன்மிகவாதியாகவும் திருமுருக கிருபானந்த வாரியார் மதிப்பிடப்படுகிறார்.

நூல்கள்

  • இராமகாவியம்
  • மகாபாரதம்
  • கட்டுரைக்கனிகள்
  • திருக்குறள் கதைகள்
  • புராணக் கதைகள்
  • இரு துருவங்கள்
  • வாரியார் காட்டும் வனிதையர்
  • பாவையர் கதைகள்
  • தேன் விருந்து
  • கந்தரநுபூதி உரை
  • வாரியாரின் சிறுகதைகள்
  • கந்தர் திருவிளையாடல்
  • அறநெநி
  • முருகன் கதைகள்
  • முருகன் பெருமை
  • காசித் திருப்புகழ் உரை
  • பன்னிரு திருமுறைத் திரட்டு
  • விநாயகர்
  • மாணவருக்கு மணிமொழிகள்
  • கேள்வி - பதில்
  • சிவபுரணம் - உரை
  • திருநீற்றின் தெய்வநலம்
  • வாரியாரின் ஒருவரி பதில்
  • அமுதமொழி
  • திருமண வாழ்த்து
  • இராமாயணம் - வசனம்
  • கந்தவேள் கருணை
  • தவம்
  • வாரியார் வாக்கு
  • விளக்கு
  • அருள்வாக்கு
  • சிந்தனைச் செல்வம்
  • கட்டுரைச் செல்வம்
  • திருப்புகழ்த் திரட்டு மூலம் - விரிவுரை (11 பாகங்கள்)
  • திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் விரிவுரை
  • திருப்புகழ், குன்றுதோறாடல் முதல் தொகுதி
  • சிவபுராணம் - மூலம்
  • கனவு
  • வாழும் வழி
  • வயலூர் திருப்புகழ் (விரிவுரை)
  • ஆலயம் ஏன்?
  • வாரியார் விருந்து
  • அபிராமி
  • பவளேந்திரி
  • கந்தவேள் கருணை
  • சிவனருட் செல்வர்
  • பிள்ளையார் பெருமை
  • கண்ணன் கனியமுதம்
  • கற்புக் கனிகள் (9-பாகங்கள்)
  • மகாபாரத வசனம்
  • குழவியும், கிழவியும்
  • தியாகம்
  • சிந்தனைத்தேன்
  • அறிவுரை அமுது
  • செந்தமிழ் இன்பம்
  • தேன் விருந்து
  • வினா விடை
  • திரு மயிலைத் திருப்புகழ் உரை
  • சத்திய ஞானசபை ஸ்தூபி நீராட்டு நினைவு மலர்
  • திருவாசகத் தேன்
  • வடநாட்டு யாத்திரை
  • இமாலய யாத்திரை
  • கம்பன் கவிமணிகள்
  • மலேயா மாட்சியும் அமர்நாத் காட்சியும்
  • கந்தரலங்கார உரை
  • நேபாள யாத்திரை
  • வாரியார் விருந்து
  • மங்கல மங்கையர்
  • வாரியார் விரிவுரை விருந்து
  • பெண்குலப் பெருமை
  • வாரியார் வழங்கும் மனைவாழ்வு
  • பைந்தமிழ்ப் பாமாலை
  • லண்டனில் முருகன், மருதமலை முருகன் போற்றி (1008)
  • மாதர் மணிகள்
  • பழநி மலைப் பரமன்
  • செஞ்சொல் உரைக்கோவை வேல், மயில், சேவல் விருத்தங்கள்
  • விழாக்களும் விரதங்களும்
  • வல்லக்கோட்டை திருப்புகழ் உரை
  • வயலூர் திருப்புகழ் உரை

குறுந்தகடுகள்/ ஒலிப்பேழைகள்

  • அரிச்சந்திரா
  • அருணகிரிநாதர்
  • ஆத்மாவின் முருக கீதம்
  • இராமாயணம் - 8 தொகுதிகள்
  • இராமாயண இன்பம்
  • இரு மனைவியர்
  • இரு வேலைக்காரிகள்
  • இரு சகோதரர்கள்
  • பெண்ணின் பெருமை
  • சிறுவர்களுக்கு அறிவுரை
  • கும்பாபிடேக மகிமை
  • கந்தர் அநுபூதி
  • முருகன் இசைமலர்
  • கந்தரலங்காரம்
  • வள்ளித் திருமணம்
  • சந்திரகாசன்
  • சுவாமி ஐயப்பன்
  • திருமண வாழ்த்து
  • கர்ணன்
  • சீதா கல்யாணம்
  • கந்தவேள் கருணை
  • ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி வரலாறு
  • இலக்கியத்தில் நகைச்சுவை
  • திருக்குறள் கதைகள் - 1
  • திருக்குறள் கதைகள் - 2
  • சூரியன் சந்திரன்
  • திருச்செந்தூர் வரலாறு
  • தாயுமானவர்
  • பிரதோஷ மகிமை
  • திருப்புகழ்ப் பாடல்கள் (ஆறு தொகுதிகள்)
  • திருப்புகழ் விரிவுரை
  • திருப்புகழ் - கைத்தல நிறைகனி
  • திருப்புகழ் - முத்தைத்தரு
  • திருப்புகழ் - உனைத் தினம்
  • திருப்புகழ் - அறுகநுனி
  • திருப்புகழ் - ஐந்து பூதமும்
  • வழிபாடு
  • முருகன் பெருமை
  • செந்தமிழ் இன்பம்
  • வாரியாரின் பூஜைப் பாடல்கள்
  • திருப்புகழ்ப் பாடல்கள்
  • வாரியாரின் முருகன் பாடல்கள்
  • பட்டினத்தடிகள்
  • நளாயணி
  • ஒளவையாரும் தமிழும்
  • முற்பிறவிக் கதைகள்
  • பிரகலாதர்
  • நாதவிந்து கலாதீ நமோ நம
  • வாரியார் கண்ட வள்ளுவர்
  • வாரியார் கண்ட காந்திஜி
  • சண்முகக் கவசமும், பக்திப் பாமாலையும்
  • நந்தனார்
  • இராம நாடகக் கீர்த்தனை
  • திருப்புகழ் இன்பம்
  • மார்க்கண்டேயர்
  • திருவகுப்பு
  • வணக்கத்திற்குரிய முதலமைச்சர்கள்
  • சுபத்ரா திருமணம்
  • வள்ளலாரும் அருட்பாவும்
  • குசேலர்
  • விநாயகர் பெருமை
  • மீனாட்சி திருமணம்
  • கண்ணன் கருணை
  • காரைக்காலம்மையார்
  • கண்ணப்ப நாயனார்
  • சம்பந்தர்
  • அப்பர்
  • சுந்தரர்
  • வல்லக்கோட்டை முருகன்
  • தேவார இன்பம்
  • மகாபாரதம் 10 தொகுதிகள்
  • மாணிக்கவாசகரும் சிவபுராணமும்
  • ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்
  • மகாபாரத மகிமை
  • கந்தபுராணத் தத்துவம்
  • பெரிய புராண நுட்பம்
  • கந்தபுராணம் 8 தொகுதிகள்
  • நக்கீரன் குற்றவாளியா? (வழக்காடு மன்றம்)
  • பாரதப் போருக்குக் காரணமானவர்கள் யார் (சுழலும் சொற்போர்)
  • வலையப்பட்டி திருவிழாவில் குயில் இசை
  • பெரியபுராணப் பாடல்கள்

ஒளிப்பேழைகள் (வாரியாரின் வீடியோக்கள்)

  • வணக்கத்திற்குரிய முதலமைச்சர்கள்
  • சூரியன் சந்திரன்
  • ஆலயம்
  • ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்
  • சுவாமி விவேகானந்தர்
  • பாதுகாப் பட்டாபிஷேகம்
  • வள்ளித் திருமணம்
  • சீதா கல்யாணம்
  • கந்தன் கருணை
  • நந்தனார்
  • வள்ளலார்
  • பார்த்தசாரதி

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 26-Sep-2025, 12:49:30 IST