under review

செ.து. சஞ்சீவி

From Tamil Wiki
Revision as of 21:57, 3 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed from Category:ஆய்வாளர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
செ து சஞ்சீவி

செ.து. சஞ்சீவி (அக்டோபர் 17, 1929 - மே 20, 2023) தமிழ்க் கவிஞர், ஆய்வாளர், நூல் பதிப்பாளர். நெடுங்காலம் வெளிவராமல் இருந்த கவிஞர் தமிழ் ஒளியின் கவிதைகளையும் படைப்புகளையும் தேடித் தொகுத்து வெளியிட்டவர்.

பிறப்பு, கல்வி

சஞ்சீவி அக்டோபர் 17, 1929-ல் துரைசாமி - அங்கம்மாள் இணையருக்குப் பிறந்தார். எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார்.

தனிவாழ்க்கை

சென்னை அமைந்தகரையில் ஒரு கடை நடத்தி வந்தார். அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இலக்கியப்பணி

1966 முதல் 2019 வரை தொடர்ந்து கவிஞர் தமிழ் ஒளியின் ஆக்கங்களை வெளியிடுவதை தம் வாழ்நாள் பணியாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர் சஞ்சீவி.

சஞ்சீவி பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் வழியாக கவிஞர் தமிழ் ஒளியைக் கண்டடைந்தார். தமிழின் முதல் தலித் காவியம் என்று கூறப்படும் தமிழ் ஒளியின் வீராயி காவியத்தின் கவிதை வரிகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். தமிழ் ஒளியின் நண்பராகத் திகழ்ந்தார். தமிழ் ஒளி மனநிலைச் சிக்கலுக்குள்ளாகி மறைந்தமை சஞ்சீவியை பெரிதும் பாதித்தது. தமிழ் ஒளியின் படைப்புகளை தொகுத்து மு. வரதராசன், கா.அப்பாத்துரை போன்றவர்களிடம் முன்னுரை பெற்று வெளியிட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற அமைப்புகளின் உதவியுடன் தமிழ் ஒளியின் பிறந்த நாள், நினைவு நாள் கூட்டங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வந்தார். புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உதவியுடன் தமிழ் ஒளியின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த வழிவகுத்தார்.

மறைவு

சஞ்சீவி தன் 94-வது வயதில் மே 20, 2023-ல் சென்னையில் இறந்தார்.

நூல்கள்

எழுதியவை
  • தமிழ்ஒளி நினைவாக சில பதிவுகள் (தமிழ் ஒளியின் ஆக்கங்களை வெளியிட்ட வரலாறு)
  • தமிழ்ஒளி (சாகித்திய அகாதமி வெளியீடு)
  • தமிழ்ஒளி: கவிதையும் வாழ்வும்
  • தமிழறிஞர் பார்வையில் தமிழ்ஒளி (தொகுப்பு நூல்)
  • தமிழ்ஒளி காவியங்கள் ஓர் அறிமுகம்
பதிப்பித்தவை
  • தமிழ்ஒளியின் கவிதைகள் (1964)
  • கவிஞனின் காதல்
  • நிலைபெற்ற சிலை
  • வீராயி
  • மே தின ரோஜா
  • கோசலக்குமாரி
  • மாதவி காவியம்

உசாத்துணை

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 19-Jul-2025, 21:47:22 IST