வடநெடுந்தத்தனார்
வடநெடுந்தத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
வடநெடுந்தத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். வடநாட்டில் இருந்து தமிழகத்தில் வந்து குடியேறிய இனத்தை சேர்ந்தவர். தத்தனார் என்னும் இயற்பெயர் உடையவர். இவரது புலமை சிறப்பினை உணர்த்தும் பொருட்டு நெடு என்னும் அடைமொழியுடன் வடநெடுந்தத்தனார் என அழைக்கப்பட்டார்.
இலக்கிய வாழ்க்கை
வடநெடுந்தத்தனார் பாடிய பாடல் புறநானூறில் 179 ஆம் பாடலாக இடம்பெற்றுள்ளது. பாண்டியனின் படைத்தளபதியான நாலைக் கிழவன் நாகன் என்பானின் வீரச் சிறப்பையும் கொடைச் சிறப்பையும் கூறுவதாக வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமைந்துள்ள பாடல்.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பாண்டிய மன்னன் தனது பகைவர்களின் நாட்டையும் அவர் கோட்டை முரசையும் வென்று திரும்பும் திறன் படைத்தவன். திருமகளால் விரும்பப்படும் அழகிய அணிகலன்களை அணிந்தவன். நாலைக் கிழவன் நாகன் அத்தகு பாண்டிய மன்னனின் படைத்தலைவன்.
- நாலைக் கிழவன் நாகன் பாண்டியனுக்கு படைத்துணை வேண்டும் போது படை வீரர்களையும் அறிவுரை வேண்டும் போது அறிவுரையும் தருபவன். பாண்டியனுக்கு வேண்டியதை தரும் வளமிக்கவன்.
- உலகத்தில் வள்ளல்களே இல்லை என்று இரவலர் வருந்தும்போது அவர்களுக்கு தக்கன கொடுக்கும் கொடைச்சிறப்பு மிக்கவன்.
- உவமைகள்: நாலைக் கிழவன் நாகனின் ஆண்மை காளையின் வலிமை என சிறப்பித்து கூறப்பட்டது. அவனது கொடைத் தன்மை பருந்துக்கும் பசி தீர்ப்பவன் என சிறப்பிக்கப்பட்டது.
பாடல் நடை
புறநானூறு - 179
- திணை: வாகை
- துறை:வல்லாண் முல்லை
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்
வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே.
உசாத்துணை
- சங்க தமிழ் புலவர்கள் வரிசை - பேயனார் முதலிய 39 புலவர்கள்: புலவர் க,கோவிந்தன்
- புறநானூறு - 179:puramam400
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.