சயாம் மரணரயில்

From Tamil Wiki
சயாம் மரணரயில்

சயாம் மரணரயில் ( ) மலேசிய எழுத்தாளர் ஆர். சண்முகம் எழுதிய நாவல். சயாம் மரண ரயில் என அழைக்கப்படும் ரயில் அமைப்பு திட்டத்தின் பின்னணியில் எழுதப்பட்ட எளிமையான காதல்கதை. தலைப்பை ஒட்டி பரவலாக நம்பப்படுவதுபோல இதில் அந்த திட்டத்தில் அழிந்த மக்களைப் பற்றிய ஆவணப்படுத்தலோ, அம்மக்கள் மீதான பரிவோ இல்லை. மாறாக அம்மக்களுக்கு எதிராக அங்கே கங்காணியாக வேலைபார்த்த மாயா என்னும் இளைஞனின் கதை இது. அவன் அங்கே மகிழ்ச்சியாக வாழ்வதை, விமர்சனம் ஏதுமின்றி, கூறுகிறது. சயாம் மரணரயில் என்னும் தலைப்பின் மூலம் அந்த பேரழிவை சுட்டியது என்பதனால் மட்டுமே இலக்கியக் கவனம் பெறும் படைப்பு.

வெளியீடு

சயாம் மரணரயில் நாவல் ஆர்.சண்முகம் அவர்களால் 1993ல் எழுதப்பட்டது.

கதைச்சுருக்கம்

மாயாகிருஷ்ணன் (மாயா) எனும் இளைஞன் ஜப்பானிய காலத்தில் ஏற்படும் பஞ்ச காலத்தில் தன் அன்னை வேறொருவனுடன் சேர்ந்து வாழ்வதனால் புண்பட்டு சயாமுக்கு தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் ரயில் வண்டியில் ஏறிவிடுகிறான் .அவன் படித்தவன் என்பதனால் கங்காணிப் பணி (கேபி) கிடைக்கிறது. மாயா சயாம் ரயில்பாதைப் பணியில் தன் அப்பாவை தேடுகிறான்.

மாயா ஆற்றின் கரையில் கடை வைத்திருக்கும் அங்சாலா என்னும் சயாமியப் பெண்ணிடம் காதல் கொண்டு அவளுடன் உறவு கொள்கிறான். அப்பெண்ணின் தந்தை தமிழர் என்பதனால் அவள் தமிழ் பேசுகிறாள். அவர்கள் மணம் புரிந்துகொள்கிறார்கள். ஒரு குழந்தை பிறந்து உறக்கிறது. மீண்டும் கருவுறுகிறாள். ரயில் பாதைப்பணி முன்னகரவே அவன் வேறு பகுதிக்கு மாற்றலாகிச் செல்ல நேர்கிறது. மாதம் ஒருமுறை வந்து அவளை பார்த்துச் செல்கிறான்.

மாயாவின் அண்ணனின் இடத்தில் இருக்கும் வேலுவுக்கும் படகுக்கடை வைத்திருக்கும் சயாமியப் பெண்ணுக்கும் காதல் உருவாகிறது. மலேசியாவில் இருக்கையில் ஒருவரை கொலைசெய்துவிட்டு ஓடிவந்த வேலுவை தேடி இறந்தவரின் அண்ணன் மன்னார்சாமி வருகிறார். மாயாவின் காதலியைச் சீண்டிய மொட்டை சிங்காரம் என்பவனுடனும் வேலு மோதுகிறார். ஒரு தமிழரின் உதவியுடன் மன்னார்சாமி மற்றும் மொட்டை சிங்காரத்தால் வேலு நஞ்சூட்டிக் கொல்லப்படுகிறார். குற்றவாளிகள் பிடிபடுகின்றனர். மொட்டை சிங்காரத்துக்கும் மன்னார்சாமிக்கும் கொலைக்கு உதவியவர் காணாமல்போன தன் அப்பா என அறிந்த மாயா அதிர்ச்சி அடைகிறான். அண்ணனைக் கொன்ற அப்பாவை காப்பாற்ற அவன் முயலவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றனர். மாயா தன் தந்தையின் மனைவியின் பிள்ளைகளை தன் சகோதரர்களாக ஏற்கிறான்.

ஜப்பான் சரணடைந்ததும் மீண்டும் மலேசியா செல்கிறான். அங்கே அம்மாவும் தம்பியும் மரணமடைந்தது தெரிய வருகிறது. அவன் தங்கை அவன் அம்மாவுடன் வாழ்ந்தவருடன் தமிழகம் போய்விடுகிறாள். மாயா மீண்டும் தாய்லாந்து சென்று பாங்காக் நகரில் தன் எஞ்சிய வாழ்நாளை குடும்பத்துடன் கழிக்கிறான்.

இலக்கிய இடம்

சயாம் மரணரயிலில் தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் அழிந்தது எழுத்தில் முறையாகப் பதிவுசெய்யப்படவில்லை. ஆகவே அது வாய்மொழிக்கதைகளாகவே எஞ்சியது. ஒரு தலைமுறைக்குப்பின் அது மறக்கப்பட்டது. மங்கலான நினைவுகளாக எஞ்சிய அந்நிகழ்வின் வரலாற்று முக்கியத்துவத்தை மலாய எழுத்தாளர்கள் உணர்ந்திருக்கவில்லை. மலாய எழுத்தின் பேசுபொருள் இரண்டாம் உலகப்போருக்குப்பின் மலாயச் சூழலில் வாழ்வதற்காக தமிழர்களுக்கும் பிறருக்கும் இடையே நிகழ்ந்த போட்டியைச் சார்ந்ததாகவே பெரும்பாலும் இருந்தது. ஆகவே இந்நாவலில் சயாம் மரணரயில் பேரழிவை சண்முகம் மிக எளிதாக, காதல்கதைக்கு ஓரு கதைப்பின்புலமாக மட்டுமே கையாண்டிருக்கிறார். நீண்ட காலம் கழித்து, இணையம் வந்து, மலேசிய வாழ்க்கையும் இலக்கியமும் தமிழகச்சூழலிலும் நன்கு அறிமுகமாகி, சயாம் மரணரயில் அழிவுகள் தமிழகச் சூழலிலும் பேசுபொருளாக ஆன பின்னர்தான் மலேய எழுத்தாளர்கள் அந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். அ. ரெங்கசாமி எழுதிய நினைவுச்சின்னம் அவ்வழிவுகளை ஆவணப்படுத்தும் நாவல். ஆனால் ஒரு தலைமுறைக்காலம் கடந்துவிட்டிருந்தமையால் உதிரி நிகழ்வுகளின் தொகுதியாகவும், வழக்கமான முறையில் நிகழ்வுகளை கடுமையாக்கும் தன்மை கொண்டதாகவும் நினைவுச்சின்னம் நாவல் அமைந்துள்ளது.

”ஆர்.சண்முகத்தில் நடை சுவாரசியமானது. அது ஜனரஞ்சக எழுத்துக்கான நடை. ஆனால் தேர்ந்த நாவலாசிரியருக்கு இருக்கவேண்டிய பார்வையென அவரிடம் எதுவும் இல்லை. அடுத்து நடக்கப்போகும் திடுக்கிடல்களுக்கு மட்டுமே அவரது கவனம் உள்ளது. மற்றபடி நாவல் எனும் கலை வடிவத்துக்கு இருக்க வேண்டிய நுண்தகவல்களின் போதாமை, ஓராண்டு கொடும் வாழ்க்கையில் மனித மனம் அடைந்திருக்கக்கூடிய மாறுதல்களை உள்வாங்காத பார்வை, கூர்மையற்ற வசனங்கள் என முதிர்ச்சியற்று இந்நாவல் பதிப்பாகியுள்ளது. பெரும்பாலும் தகவல்கள் வசனங்களில் சொல்லப்படுகின்றன. சயாம் காட்டின் அடர்த்தியோ, அச்சமோ நாவலில் எங்குமே காட்சிப்படுத்தப்படாமல் தகவல்களைச் செருகுவதன் வழியே நாவலை நகர்த்தியுள்ளார் ஆசிரியர்” என மலேசிய இலக்கிய விமர்சகர் ம. நவீன் மதிப்பிடுகிறார்.

உசாத்துணை