first review completed

கந்தரனுபூதி

From Tamil Wiki
Revision as of 14:10, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

கந்தரனுபூதி அல்லது கந்தர் அனுபூதி  என்னும் நூல்  அருணகிரிநாதரால் தமிழ்க் கடவுள் முருகனைப் போற்றி, 15-ஆம் நூற்றாண்டில் பாடப்பட்டதாகும்.

ஆசிரியர்

கந்தரனுபூதி நூலின் ஆசிரியர் அருணகிரிநாதர். இவர், 1370-ல் திருவண்ணாமலையில் பிறந்தவர். கைக்கோள செங்குந்தர் மரபில் தோன்றியவர். இவரது தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் கருதப்படுகிறது. கீழ்காணும் நூல்களை அருணகிரிநாதர் இயற்றியுள்ளார்;

  • கந்தர் அந்தாதி (102 பாடல்கள்)
  • கந்தர் அலங்காரம் (108 பாடல்கள்)
  • கந்தரனுபூதி (52 பாடல்கள்)   
  • திருப்புகழ் (1307 பாடல்கள்) 
  • திருவகுப்பு (25 பாடல்கள்)            
  • சேவல் விருத்தம் (11 பாடல்கள்)     
  • மயில் விருத்தம் (11 பாடல்கள்)       
  • வேல் விருத்தம் (11 பாடல்கள்)
  • திருவெழுகூற்றிருக்கை

சொல் விளக்கம்

அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம்.

அனுபூதி என்பது அனுபவச் செல்வமாகும். அனு என்பது உடன். பூதி என்பது ஆதல். அனுபூதி என்பது உடனாதல். கந்தரனுபூதி என்பது கந்தனுடன் ஒன்றாதல் என்ற பொருடையதாகும்.

"அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி அல்லது அறிவு. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

சிறப்புகள்

கந்தரனுபூதி நூல் பத்தாம் திருமுறையான திருமந்திரம்  நூலுக்கு ஒப்பாக மந்திர நூலாக கொள்ளத்தக்கது எனச் சமயவாணர்கள் கூறுகின்றனர். திருமூலர்  இடையன் உடலுக்குள் புகுந்து திருமந்திரம் சொன்னதாக கூறப்படுகிறது. அதுபோல அருணகிரிநாதர் கிளியின் உடலுக்குள் இருந்துகொண்டு கந்தரனுபூதி  நூலைச் சொன்னார் எனக் கூறுவர்.

நூலின் யாப்பு

இசைத்தமிழ் நூலாக உள்ள கந்தரனுபூதி நூலின் எல்லாப்பாடல்களுமே  நான்கு அளவடிகள் கொண்டு, ஆசிரியச் சீர்களினால்  இயற்றப்பட்டு "நிலைமண்டில ஆசிரியப்பா" பா  வகையில் அமைந்துள்ளன. பாடல்கள் எதுகைத்தொடை ஓட்டத்தால் சந்தச்சுவை உடையனவாக உள்ளன.

பாடல்கள்

கந்தரனுபூதி நூலில் காப்பு பாடல் ஒன்றையும் சேர்த்து மொத்தம் 52 பாடல்கள் உள்ளன. இவற்றோடு மேலும் சில பாடல்களைச் சேர்த்து 105 பாடல்கள் கொண்ட பதிப்புகளும் உள்ளன. கந்தரனுபூதி  நூல் முருகன் தனக்குக் குருவாய் வரவேண்டும் என வேண்டிக்கொள்ளும் பாடலோடு முடிகிறது.

முடியும் பாடல்கள்:

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" -
                                                    பாடல் எண் 51

ஒருகால் அடியேன் மனம் உன்னை நினைத்து
உருகாது உருகும்படி தந்தருள்வாய்
பெருகு ஆழியிலும் துயிலும் பெருமாள்
மருகா முருகா மயில் வாகனனே". –
            பாடல் 51, தஞ்சை சரஸ்வதிமஹால் ஏடு.

கந்தரனு பூதிதன்னைக் கற்(று)உரைப்போர் தங்களிடம்
வந்தவினை அத்தனையும் மாயுமே – செந்தண்
திருத்தணியில் வாழ்முருகா சேயோர் அடியார்
கருத்தணியில் வாழ்ந்திருப்பர் காண்"

என்னும் வெண்பாவோடு இந்த நூலை முடிப்பாரும் உண்டு.

பேசா அனுபூதி பிறந்ததுவே (பாடல் 43) என்னும் பாடலோடு நூல் முடிகிறது என்றும், சும்மா இரு என்னும் வேண்டுகோளுடன் (பாடல் 12) நூல் முடிகிறது என்றும் கூறப்படும் கருத்துகளும் உண்டு.

நூலின் பொருண்மை

கந்தரனுபூதி பாடல்கள் ஒவ்வொன்றும் "முருகன்" என்னும் சொல்லுக்கு விளக்கம் தருவனவாகவும் அவனுடைய திருவிளையாடல்களைக் குறிப்பனவாகவும் அமைந்துள்ளன. வள்ளிப்பிராட்டியாரைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. கந்தரனுபூதி  நூலில் முருகனின் திருவுரு, ஊர்தி, படை, கொடி முதலானவை கூறப்படுகின்றன.  ஈதல் வலியுறுத்தப்படுகிறது. அக நிகழ்ச்சிகளாகிய யாகம் மற்றும் நாதவிந்துக்களின் சேர்க்கையைப் பற்றியும் குறிப்புகள் உள்ளன.  பாசத் தளையில் கலங்கிய நிலை, மனம் அமைதி பெற்றுத் தவத்தில் ஒன்றிய நிலை, முருகன் திருவருள் பெற்ற ஞானநிலை, உபதேச நிலை என்னும் நான்கு பிரிவுகளில் பாடல்கள் அமைந்துள்ளன.

பதிப்பு

மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்ரமணிய பிள்ளை சிதம்பரத்தில் ஒரு விவாதத்தில் அருணகிரிநாதரின் பாடல்களைக் கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன.  தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்த வ.த. சுப்ரமணிய பிள்ளை, அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக 1871-ஆம் ஆண்டு வெளியிட்டார். 1894-ஆம் ஆண்டு முதலாவது பதிப்பும், 1901-ஆம் ஆண்டு இரண்டாவது பதிப்பும் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் செங்கல்வராய பிள்ளையால் புத்தகமாக வெளியிடப்பட்டது.

உசாத்துணை

  • மு. அருணாசலம் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, பதிப்பு 2005



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.