standardised

ச. துரை

From Tamil Wiki
Revision as of 18:12, 21 May 2022 by Jayashree (talk | contribs)
ச.துரை.jpg

ச.துரை (பிறப்பு: டிசம்பர் 15, 1991) தமிழ்க்கவிஞர், சிறுகதையாசிரியர். தொடர்ந்து கவிதைகளும், சிறுகதைகளும் எழுதி வருகிறார்.

பிறப்பு, தனிவாழ்க்கை

ச.துரை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் என்ற கடலோர கிராமத்தில் சந்திரன், பூமயில் இணையருக்கு டிசம்பர் 15, 1991-ல் பிறந்தார். மண்டபம் அரசு பள்ளியிலும் முத்துப்பேட்டை புனித யாகப்பர் உயர்நிலைப் பள்ளியிலும் கீழக்கரை மண்டபம் கேம்ப் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். சேது ஹமீதியா கலை கல்லூரியில் இளங்கலை கணிணி அறிவியல் பட்டம் பெற்றார். பலசரக்கு கடையை நடத்தி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

ச.துரை1.jpg

ச.துரை அப்துல் ரகுமானின் கவிதைகள் வழியாக இலக்கிய அறிமுகம் அடைந்ததாகக் குறிப்பிடுகிறார். முதல் கவிதை 2013-ல் பாஸோ இதழில் வெளியானது. இதன் தொடர்ச்சியாக கல்குதிரை, உன்னதம், ஆனந்த விகடன், நடுகல், காற்றுவெளி போன்ற சிற்றிதழ்கள் மற்றும் வணிக இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். பின்னர் இணைய இதழ்களான கனலி, ஓலைச்சுவடி, அகழ், அரூ ஆகியவற்றில் தொடர்ச்சியாக கவிதைகளும் சிறுகதைகளும் எழுதி வருகிறார். தனது இலக்கிய படைப்புகளில் செல்வாக்கு செலுத்துபவர்களாகவும் தனது ஆதர்சங்களாகவும் ஆத்மநாம், ஞானக்கூத்தன், தேவதச்சன், பிரமிள், அப்துல் ரகுமான், ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

ச.துரையின் முதல் கவிதை தொகுப்பு ‘மத்தி’ தமிழ்வெளி வெளியீடாக 2019-ல் வெளியானது. அதே ஆண்டு மத்தி தொகுப்பு இளம்கவிஞர்களுக்கு வழங்கப்படும் விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு விருதளிக்கப்பட்டது.

இலக்கிய இடம்

ச.துரையின் கவிதைகளில் அவருடைய வாழ்விடமான கடலும் கடல் சார்ந்த நிலமும் வந்து கொண்டே இருக்கின்றன. அந்நிலத்தில் இருக்கும் இந்து - கிறிஸ்தவ பண்பாட்டின் பொருள்கள் கவிதைகளில் குறியீடுகளாகவும் படிமங்களாகவும் இடம்பெறுகின்றன. இவரது கவிதைகள் கனவுருத்தன்மை கொண்டவை என்றும் மீ யாதார்த்த அழகியலை அடிப்படையாகக் கொண்டவை என்றும் விமர்சகர்களால் வரையறுக்கப்படுக்கிறது.

“கனவுருக்காட்சி போலவே எழுதப்பட்டிருக்கும் ச.துரையின் பல கவிதைகளில் உடல் வெவ்வேறுவகையில் அடையாளமாற்றம் கொள்கிறது. இவை வெவ்வேறு உளவியல்மாதிரிகளாக முதல்கட்டத்தில் அடையாளப்படுத்திக்கொள்ளத் தக்கவை.” என்று வரையறுக்கிறார் ஜெயமோகன். “வெளிப்பாட்டால் சிதைந்த வடிவமும், அனைத்தையும் கட்டி நிறுத்தும் ஒழுங்கமைவும் கொண்ட கவிதைகள் என்றும், அனைத்தும் கலைந்து கலங்கி தன்னிலை அழிவின்  அழகியலின் வெவ்வேறு வண்ண பேதங்களை சமைத்துக் காட்டுவன,” என்று ச.துரையின் கவிதைகளை மதிப்பிடுகிறார் இலக்கிய விமர்சகர் கடலூர் சீனு. “ச.துரையின் கவிதைகளின் மொழி ஒருவித சந்தத் தன்மையுடனும், அமைதியும் ஒழுங்கும் கூடியதாகவும் உள்ளது. அவை நவீனத்துவத்தின் பூரணமான கவித்துவ தொனியை எட்டியிருக்கிறது.” என்று மதிப்பிடுகிறார் கவிஞர் கண்டராதித்தன்.

விருதுகள்

Sdurai VP Award.jpg

நூல்கள்

கவிதை தொகுப்புகள்

  • மத்தி - தமிழ்வெளி வெளியீடு 2019[1]
  • சங்காயம் - எதிர் வெளியீடு 2022[2]

சிறுகதைகள்

வெளி இணைப்புகள்



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.