காவல்கோட்டம்
காவல் கோட்டம் ( 2008) சு.வெங்கடேசன் எழுதிய தமிழ் வரலாற்று நாவல். மதுரையின் வரலாற்றுப் பின்னணியில் அமைந்தது. மதுரையின் காவல் பொறுப்பில் இருந்த போர்க்குலங்களின் வாழ்க்கை முறையும் வரலாறும், அவர்கள் மதுரையை நாயக்கர்கள் கைப்பற்றியபோது அகற்றப்பட்டதும் அதன் விளைவான மோதலும் இந்நாவலில் சொல்லப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் வரை நாவல் நீள்கிறது.
எழுத்து, வெளியீடு
சு.வெங்கடேசன் இநநாவலை 1998 முதல் எழுதி 2007ல் முடித்தார். முதல் பதிப்பை தமிழினி 2008ல் பதிப்பகம் வெளியிட்டது.
உள்ளடக்கம்
மதுரையின் ஆறு நூற்றாண்டுக்கால (1310-1910) வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல் காவல்கோட்டம். குற்றவியல் பரம்பரைச் சட்டத்தின் வரலாற்றைப் பேசும் இந்நாவல் பழங்குடிப் பண்பாட்டில் வேர்கொண்ட அந்த இனக்குழு நிலப்பிரபுத்துவ காலகட்டத்தில் தன் இடத்தை பெற்று நவீன காலகட்டத்தில் அதை இழந்து மீண்டும் பெறுவதற்காக போராடும் இடத்தில் நாவல் முடிகிறது. மதுரை அருகே தாதனூர் எனும் கிராமத்தை மையமாக்கி நாயக்க ஆட்சியும், கள்ளர்களும் பரஸ்பரம் மோதியும் சமரசம் செய்து கொண்டும் வந்த வரலாற்றோடு மதுரை நகரின் வரலாற்றையும் கூறுகிறது.
விருதுகள்
காவல்கோட்டம் 2011 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றது
- திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருது
- நொய்யல் இலக்கிய விருது
- ஆனந்த விகடன் விருதுகள் 2008
- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2010
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2010
- சாகித்திய அகாதமி விருது 2011
திரைப்படம்
ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ல் வெளிவந்த அரவான் என்னும் தமிழ்த் திரைப்படம் இந்நாவலின் ஒரு பகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது.
இலக்கிய இடம்
காவல்கோட்டம் மதுரையின் வரலாற்றை செவ்வியல் வரலாற்றுக் கோணத்திலும் நாட்டாரியல் மற்றும் சமூகவியல் வரலாற்றுக்கோணத்திலும் ஒரே சமயம் சித்தரித்த படைப்பாகக் கருதப்படுகிறது.
எழுதப்பட்ட வரலாற்றின் அழுத்தமான பின்னணியில் எழுதப்படாத வரலாற்றையும், எழுதப்படாத நாட்டார் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்றையும் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் சித்தரிக்கிறார் சு.வெங்கடேசன். இதனூடே மிக விரிவாக மானுடக் கதையைச் சொல்வதாலும் காவல் கோட்டம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது. "காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொல்வேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.[1]
கள்ளர் சமூகத்தின் பண்பாட்டு வெளியை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கும் இந்நாவல் அந்த இனக்குழுவின் வரலாற்றுப் பாத்திரத்தை மிக விரிவாகக் காட்டிய வகையிலும் முதலிடம் வகிக்கிறது. இனவரைவியல் (குறிப்பிட்ட இனக்குழுக்கள் சார்ந்த செய்திகள்) சார்ந்த படைப்பாக்கங்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.
உசாத்துணை
- காவல்கோட்டம்- ஜெயமோகன் விமர்சனம்
- நூல் விமர்சனம் - காவல்கோட்டம்-கானகன்
- காவல்கோட்டத்தின் இனவரைவியல்- மு ரோஸ்
- காவல்கோட்டம் நாவலில் பண்பாட்டு அரசியல் - கே.சிவக்குமார்
- காவல் கோட்டம் - ஒரு அனுபவம்
- காவல்கோட்டம் பகிர்வுகள் எம்.ஏ.சுசீலா
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Sep-2024, 12:06:09 IST